மீண்டும் முடக்கப்படுகிறது விக்டோரியா! தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு!!

மெல்பனில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இன்று நள்ளிரவு முதல் மாநிலம்தழுவிய முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

People are seen waiting in a line to receive covid19 tests at a walk-in covid19 testing facility in Melbourne, Wednesday, May 26, 2021.

People wait for COVID tests in Melbourne on Wednesday, 26 May. Source: AAP

Highlights

  • விக்டோரியாவில் கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
  • பரவலைக் கட்டுப்படுத்த ஒருவாரகால முடக்கநிலை விக்டோரியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • ஐந்து காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

மெல்பன் வடக்கிலுள்ள Whittlesea பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ள பின்னணியில் இப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் 7 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்கீழ் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற மற்றும் பராமரிப்பு வழங்க, உடற்பயிற்சி(வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டருக்குள்) மற்றும் வேலை(அனுமதி வழங்கப்பட்டவர்கள் மட்டும்) ஆகிய ஐந்து காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

வீடுகளுக்கு விருந்தினர்கள் வர அனுமதியில்லை. பொது இடங்களில் ஒன்றுகூட முடியாது.

வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும்.

மேலும் மக்கள் அனைத்து இடங்களிலும்(சொந்த வீடு தவிர) முகக்கவசம் அணிய வேண்டும்.

வழிபாட்டிடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பாடசாலைகள், கல்விக்கூடங்கள், உணவகங்கள்(take away மட்டும் அனுமதி) உட்பட பலவும் மூடப்படுகின்றன.

இவைதவிர மாநிலத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

மெல்பனில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுவதாகவும் தெற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது கோவிட் தொற்றுக்குள்ளானநிலையில் மெல்பனின் Wollert பகுதிக்கு திரும்பிய நபர் ஊடாகவே இப்பரவல் ஏற்பட்டிருப்பதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த பரவல் ஊடாக இதுவரை தொற்றுக்கண்டவர்கள் சென்றுவந்த இடங்களின் எண்ணிக்கை 150-ஐத் தாண்டியுள்ளது.

இந்த இடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இணைப்பில் குறித்த விவரங்களைப் பார்வையிடலாம்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

2 min read

Published

Updated

By Renuka


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now