விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வேலைகளை இழந்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவவென சுமார் 45 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
The International Student Emergency Relief Fund என்ற இத்திட்டத்தின்கீழ் தகுதிபெறும் வெளிநாட்டு மாணவர் ஒருவர் 1100 டொலர்கள் வரையான -ஒருதடவை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவை பெறமுடியும்.
விக்டோரியா மாநிலத்தில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பல்வேறு வழிகளிலும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கியுள்ள பின்னணியில் அவர்களுக்கு இந்நிதியுதவியை தற்போதைய காலகட்டத்தில் வழங்குவது அவசியமாவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமது வேலைகளை இழந்த மற்றும் வேலை நேரம் குறைக்கப்பட்டதால் தமது வருமானத்தில் கணிசமானளவு இழப்பை சந்தித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசால் அறிவிக்கப்பட்ட நிதியுதவிகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு மாணவர்கள் தகுதிபெறாத பின்னணியில், தமது மாநிலத்திலுள்ள மாணவர்களுக்கு உதவ விக்டோரிய மாநில அரசு முன்வந்துள்ளது.
இவ்வாறான நிதியுதவியை தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விக்டோரிய மாநில அரசின் நிதியுதவி குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும் பாதிக்கப்பட்டடோர் தமது பெயர் விபரங்களைப் பதிவுசெய்துகொள்ளவும் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லவும்.
