கொரோனா கட்டுப்பாடுகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் விதிக்கப்பட்ட அபராதத்தொகைகள் தொடர்பில் பொலீஸார் இறுக்கமான நிலைப்பாட்டினை கடைப்பிடிப்பதாகவும், அபராதத்தொகையை விதிக்கும்போது எந்தப்பரிவையும் காண்பிக்க மறுப்பதாகவும், பொலீஸின் இந்த அபராதங்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் இழுத்தடிக்கப்படுவதாகவும் இலவசமாக சட்ட ஆலோசனை வழங்கும் Community legal services தெரிவித்துள்ளது.
விக்டோரியாவில் முகக்கவசம் அணியாதமைக்கு 200 டொலர் அபராதமும் வீட்டிலிருப்பதற்கான உத்தரவை மீறியவர்களுக்கு 1652 டொலர் அபராதமும், கூட்டம் கூடியது உட்பட பாரிய அளவில் கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கும் கொரோனா தொற்றோடு மருத்துவ கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கும் 4957 டொலர் அபராதமும் அறவிடப்படுகிறது.
இந்த இறுக்கமான சட்டங்களின் கீழ், விக்டோரிய பொலீஸார் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் ஆறாயிரம் விதிமீறல் சம்பவங்களுக்கு அபராதத்தொகையை விதித்திருக்கிறார்கள்.
இவர்களில் ஆயிரம் பேர் 20 வயதுக்கு குறைந்தவர்கள். ஆனால், 14 வயதுக்கு குறைந்தவர்கள் மாத்திரமே, மேற்படி கட்டுப்பாடுகளை மீறினாலும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பது பொலீஸார் கடைப்பிடித்த நடைமுறை.
ஆனால், சில சம்பவங்களின்போது அப்பாவிகள் இந்த பொலீஸாரின் அபாரதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், உதாரணமாக, 16 வயது அகதிச்சிறுவன் ஒருவன், காலையில் நடைப்பயிற்சி போகும்போது, யாரென்றே தெரியாத ஒருவர், அவனிடம் சென்று வழி கேட்டபோது, அந்தக்கணம் திடீரென்று அங்கு சென்ற பொலீஸார், இருவருக்கும் அபராதம் விதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபோல, விசேட தேவைக்குட்பட்ட சிலர் கட்டுப்பாடுகளை மீறியதாக பாரிய அபராதத்தொகை விதிக்கப்பட்டிருப்பதாகவும், வருமானமில்லாத - 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு - பாரிய அபராதத்தொகைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவைகுறித்து மேன்முறையீடு செய்தபோது, 90 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று மின்னஞ்சல் மூலம் பதிலளிக்கப்படுவதாகவும் விக்டோரிய பொலீஸார் இந்த முறைப்பாடுகளை பரிசீலிக்கும் பொறிமுறையை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் Community legal services பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அபராதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு விக்டோரிய அரசில் முறையான ஒழுங்குமுறை உள்ளதாகவும் அவற்றின் ஊடாக இந்த முறைப்பாடுகள் சுதந்திரமாகவும் பக்கச்சார்பில்லாமலும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
