விக்டோரிய மாநிலத்தில் வாழும் குடும்பங்கள் தமது வீட்டுக்கூரைகளில் solar panel எனப்படும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தகடுகளைப் புதிதாகப் பொருத்துவதற்கு வட்டியில்லா கடனை அறிமுகப்படுத்தவுள்ள விக்டோரிய அரசு அதற்கு தகுதியானவர்கள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது.
சோலார் மின் உற்பத்தி மூலம் வீடுகளுக்கான மாதாந்த மின் செலவில் 74 டொலர்களை வரை மீதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே, சூரிய ஒளியை மீள்பாவனைக்கு உட்படுத்தும் மேற்படி பொறிமுறையை விக்டோரிய அரசு ஊக்குவித்துவருகிறது.
அந்தவகையில், இவ்வாறு சூரியஒளித்தகடுகளை கூரையில் பொருத்துவதற்கு 1850 டொலர்கள்வரை வட்டியில்லா கடனாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். நான்கு வருடங்களுக்குள் அந்தக்கடனை மீளச்செலுத்த வேண்டும் என்றும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் எனில் வீட்டு உரிமையாளருடன் பேசி மீள்கொடுப்பனவை இருதரப்பும் பகிர்ந்துகொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டு வருமானம் $180,000 டொலர்களுக்கு அதிகமாகவுள்ள குடும்பத்தவர்களும் 30 லட்சம் டொலர்களுக்கு மேற்பட்ட மதிப்புடைய வீட்டில் வசிப்பவர்களும் இந்த வட்டியில்லா கடனுக்கு விண்ணப்பிக்கமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
