விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் விக்டோரியர்களுக்கு 200 டொலர்கள் பெறுமதியான கூப்பன்களை வழங்கும் திட்டம் நாளை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட விக்டோரிய மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கென நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 28 மில்லியன் டொலர் நிதியுதவியின்கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளுக்கு சுற்றுலாச் சென்று 400 டொலர்களுக்கு மேலான பணத்தை, தங்குமிடம்(ஆகக்குறைந்தது இரண்டு இரவுகள்) மற்றும் டிக்கெட்டுகளில்(attractions & tours) செலவிட்டவர்கள் அரசு வழங்கும் 200 டொலர் கூப்பனைப்பெறுவதற்கு business.vic.gov.au என்ற இணையமூடாக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. வீட்டிற்கு ஒரு கூப்பன் மாத்திரமே வழங்கப்படும்.
இதற்கென 200 டொலர்கள் பெறுமதியான சுமார் 41 ஆயிரம் கூப்பன்கள் முதற்கட்டமாக நாளை காலை 10 மணிமுதல் வெளியிடப்படும் எனவும், first-come-first-served என்ற அடிப்படையில் முதலில் வருபவர்களுக்கு இக்கூப்பன்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மேலதிகமாக 80 ஆயிரம் கூப்பன்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
