விக்டோரியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களைச் சேர்ந்த ஆறு பேர், தாங்கள் சிட்னியை சேர்ந்தவர்கள் என்று விண்ணப்பித்து குயின்ஸ்லாந்துக்குள் நுழையமுற்பட்டபோது, பொலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு ஆறுபேருக்கும் 24 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலம், வெளிமாநிலத்தவர்களுக்கான எல்லைகளை கடந்த 13 ஆம் திகதி திறந்துள்ளதை அடுத்து பல்லாயிரக்கணக்கானவர்கள் இணையத்தில் விண்ணப்பித்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு அங்கு பயணமாகின்றனர்.
விக்டோரியாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்திருப்பதனால், விக்டோரியாவை சேர்ந்தவர்கள் குயின்ஸ்லாந்து வருவதற்கு இப்போது அனுமதி இல்லை என்று குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக தாங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பணிபுரிந்ததாக பொய் தகவல்களை நுழைவு அனுமதிப்பத்திரத்தில் விண்ணப்பித்துக்கொண்டு குயின்ஸ்லாந்துக்குள் பயணிக்க முற்பட்ட ஆறு விக்டோரியர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிறிய van ஒன்றில் பயணித்த இவர்கள் மாநிலத்தின் எல்லையில் பொலீஸாரினால் சோதனையிடப்பட்டு, இவர்களது தொலைபேசிப்பாவனை மற்றும் ஏனைய ஆவணங்களின் மூலம் விக்டோரியர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டனர்.
Van சாரதி குயின்ஸ்லாந்தை சேர்ந்தவர் என்றும் அதிலிருந்த இன்னொருவர் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
