விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் விக்டோரியர்களுக்கு 200 டொலர்கள் பெறுமதியான கூப்பன்களை வழங்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்று 30ம் திகதி ஆரம்பமாகிறது.
கொரோனா பரவலால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட விக்டோரிய மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கென நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 28 மில்லியன் டொலர் நிதியுதவியின்கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இதன்படி விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளுக்கு சுற்றுலாச் சென்று 400 டொலர்களுக்கு மேலான பணத்தை, தங்குமிடம்(ஆகக்குறைந்தது இரண்டு இரவுகள்) மற்றும் டிக்கெட்டுகளில்(attractions & tours) செலவிடுபவர்கள் அரசு வழங்கும் 200 டொலர் கூப்பனைப்பெறுவதற்கு business.vic.gov.au என்ற இணையமூடாக விண்ணப்பிக்க முடியும். வீட்டிற்கு ஒரு கூப்பன் மாத்திரமே வழங்கப்படும்.
200 டொலர்கள் பெறுமதியான 50,000 கூப்பன்கள் இன்று காலை 10 மணிமுதல் வெளியிடப்படும் எனவும், first-come-first-served என்ற அடிப்படையில் முதலில் வருபவர்களுக்கு இக்கூப்பன்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக சுமார் ஒரு லட்சம் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
