விக்டோரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 6 பேர் மரணமடைந்த அதேநேரம் 35 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜுன் 25ம் திகதியின் பின்னர் பதிவான ஆகக்குறைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 816 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விக்டோரியாவில் கடந்த ஆறு வார காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் சிலவற்றில் இன்றுமுதல் தளர்வு கொண்டுவரப்படுகிறது.
மெல்பேர்பேனில் வசிப்பவர்கள் இன்று முதல் பூங்காக்களுக்கு செல்லலாம். அங்கு இன்னொருவருடன் அமர்ந்து பேசலாம்.
அதுபோல, உடற்பயிற்சிக்கு இவ்வளவு காலமும் அனுமதிகப்பட்டிருந்த ஒரு மணிநேர கட்டுப்பாடு இன்று முதல் இரண்டு மணிநேரமாக அதிகரிக்கப்படுகிறது. வீட்டுக்கு வெளியே சென்று ஒவ்வொரு மணி நேரமாக இரண்டு தடவைகள் சென்று உடற்பயிற்சிக்கு உலாவி வரலாம். ஆனால், தொடர்ந்தும் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்குள்தான் இந்தப்பயிற்சி அமையவேண்டும் என்றும் இந்த ஐந்து கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் வசிக்கும் இன்னொருவருடன் இணைந்து இந்த உடற்பயிற்சியில் ஈடுபடுவதில் தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மைதானங்களுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட விரும்புகிறவர்கள் தங்கள் உடற்பயிற்சி சாதனங்களைக்கொண்டு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபடலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசமும் அடுத்தவருடன் 1.5 மீற்றர் இடைவெளியும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரவு எட்டு மணியிலிருந்து காலை ஐந்து மணி வரையிலான இரவு நேர மெல்பேர்ன் ஊரடங்கு, இன்று முதல் இரவு 9 மணி முதல் காலை ஐந்து மணிவரையாக குறைக்கப்படுகிறது.
இதேவேளை, விக்டடோரியாவின் regional நகர்களில், பொதுஇடங்களில் ஐந்து பேர்வரையில் கூடலாம் என்றும் விளையாட்டு மைதானங்கள், வெளியக நீச்சலிடங்கள் திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Share
