விக்டோரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில், புதிதாக இன்று பதினாறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற Black Lives matter ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இன்னொருவருக்கும் - நாலாவது நபருக்கும் - கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Black Lives matter ஆர்ப்பாட்டத்துக்கு சென்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் மெல்பேர்ன் வடக்கில் உள்ள பிரபல அங்காடி நிறுவனத்தில் பணிபுரிவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளன்றும் இரட்டை இலக்கத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'கொரோனா எங்கும் போய்விடவில்லை. இங்கேதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆகவே, எல்லாம் முடிந்துவிட்டது என்ற அலட்சியப்போக்கினை கடைப்பிடிக்கவேண்டாம்' என்று விக்டோரிய சுகாதாரத்துறையினர் பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளனர்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
