சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக நோக்கிற்காக வருபவர்கள் உட்பட ஆஸ்திரேலியாவுக்கு visitor விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை கோவிட்-19க்கு முந்தைய நிலையைவிட தொடர்ந்தும் குறைவாகவே உள்ளது.
2021/22 இல் சுமார் 699,725 பேர் ஆஸ்திரேலியாவுக்கு visitor விசாவில் வந்துள்ளனர். ஆனால் 2018/19இல் இந்த எண்ணிக்கை 6.5 மில்லியனாக காணப்பட்டது. தற்போது இவ்வெண்ணிக்கை ஒன்பது மடங்கு குறைவாகும்.
2018/19 இல், 17 சதவீதம் பேர் சீனாவிலிருந்தும், 11 சதவீதம் பேர் அமெரிக்காவிலிருந்தும், 10 சதவீதம் பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்தவர்கள். இந்தியர்கள் ஆறாவது இடத்தில் காணப்பட்டனர்.
2021/22 இல் சீனர்களைப் பின் தள்ளி இந்தியர்கள் முதலிடம்பிடித்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களில் 19 சதவீத விசாக்களைப் பெற்று இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் , சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா மற்றும் சீனா ஆகியவை உள்ளன.

இதேவேளை வணிக விசாக்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் பதிவாகியுள்ளது. 2018/19 இல், சுமார் 504,782 வணிக விசாக்கள் வழங்கப்பட்டன. வணிக விசாவில் வருபவர்களில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் காணப்பட்டன.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2021/22 இல், ஒட்டுமொத்தமாக 120,103 வணிக விசாக்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. இதில் 8,198 விசாக்களுடன், பட்டியலில் சீனா ஆறாவது இடத்திற்குச் சென்றுள்ளது. அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.
Visitor விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை கோவிட்-19க்கு முந்தைய நிலையைவிட குறைவாகவே உள்ள போதிலும், சுற்றுலாத்துறை மேம்படத் தொடங்கும் என்று ஆகப்பிந்திய தரவுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ஆஸ்திரேலியாவில் 219,607 visitor விசா வைத்திருப்பவர்கள் இருந்தனர். 2019 இல் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 316,469 ஆக காணப்பட்டது.
17 டிசம்பர் 2021 முதல் இந்த ஆண்டு அக்டோபர் 14 வரை, ஆஸ்திரேலியாவிற்கு visitor விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை 396 சதவீதம் அதிகரித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
