SKIP TO MAIN CONTENT

பிரபல நடிகர் விவேக் காலமானார்!

vivek
Source: Vivek(Wikipedia)

2 min read

Published

Updated


Skip to article content

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 59.

சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்த விவேக்குக்கு திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றதையடுத்து உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்த விவேக் தீராத சினிமா தாகம் கொண்டவர். 1986 ஆம் முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழக தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினாலும் சினிமா மீது கொண்ட ஆசையால் கலைத்துறையில் பயணத்தை தொடங்கினார்.

1987 ஆம் ஆண்டு மனதில் உறுதிவேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் கால்பதித்த விவேக், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

இதைத்தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த விவேக், 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் கடைசியாக நடித்தார்.

சமூக அக்கறை உள்ள கருத்துகளை நகைச்சுவை மூலம் மக்களிடையே கொண்டு சென்ற விவேக் சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வந்தார்.

முன்னதாக நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசியை விவேக் போட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவருக்கு ஏற்பட்ட இதய கோளாறுக்கும் தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now