SKIP TO MAIN CONTENT

மனுஸ்-நவுறு தடுப்புமுகாம் வாழ்க்கை இனி 3 மாதகாலம்தான்! முன்மொழிகிறது லேபர்!

Manus Island Detention Centre
Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வருபவர்களை தடுத்துவைப்பதற்காக ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படும் அகதிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒரு தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற முன்மொழிவை லேபர் கட்சி தனது ஜூலை மாத தேசிய மாநாட்டில் விவாதிக்கவுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய எத்தனிப்பவர்களை மேற்படி தீவுகளில் அமைந்துள்ள அகதிமுகாம்களில் தடுத்துவைப்பது என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் கெவின் ரட் தலைமையிலான லேபர் கட்சி நடைமுறைப்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின்படி, அங்கு கொண்டு செல்லப்படும் அகதிகள் எந்த முடிவுமின்றி காலவரையறையற்ற நீடித்த தடுப்புக்காவலில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தமே தற்போது நிலவுகிறது. அந்த அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதா அல்லது மூன்றாவது நாட்டில் கொண்டு சென்று குடியமர்த்துவதா அல்லது ஆஸ்திரேலியாவுக்குள் உள்வாங்குவதா என்று எந்த முடிவையும் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்துக்கு தற்போது கிடையாது.

ஆகவே, இந்த காலப்பகுதியை மூன்று மாதமாக வரையறுத்து, குறிப்பிட்ட அகதிகள் குறித்து உடனடியான முடிவொன்றை குடிவரவு திணைக்களம் அறிவிக்கவேண்டும் என்ற யோசனையை லேபர் கட்சி முன்மொழிந்துள்ளது.

இந்த யோசனை குறித்து Sky News ReachTel poll அண்மையில் மக்களிடம் கருத்து கேட்டபோது அதற்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

லேபர் கட்சியின் செனெட்டர் Penny Wong இது குறித்து கருத்து தெரிவிக்கையில் - மனுஸ், நவுறு தீவுகளில் அகதி முகாம்களை திறப்பதற்கு லேபர் கட்சி கொண்டுவந்த திட்டம் தற்காலிகமானது. அந்த திட்டத்தின் ஊடாக ஒரு தீர்வை காணவேண்டும் என்று அப்போது லேபர் அரசு முயற்சி செய்தது. ஆனால், லேபர் கட்சி கொண்டுவந்த கொள்கை என்ற பெயரில் அந்த அகதி முகாம்களை குடிவரவு திணைக்களம் நிர்வகிக்கும் முறை மிகவும் கொடூரமானது - என்று கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now