வாகனம் ஓட்டும் போது, மொபைல் ஃபோன் பயன்படுத்தும் மேற்கு ஆஸ்திரேலிய வாகன ஓட்டுநர்கள் கட்ட வேண்டிய அபராதம் $1,000 ஆக உயர்கிறது. இந்தக் குற்றத்திற்கு, ஆஸ்திரேலியாவில் விதிக்கப்படும் மிக அதிகமான தண்டனை இதுவாகும்.
$400 ஆக இருந்த அபராதம், எதிர்வரும் ஜூலை முதல் நாளிலிருந்து $1,000 ஆக உயரப் போகிறது. வாகனம் ஓட்டும் போது, மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு குயின்ஸ்லாந்து மாநிலம் விதித்துள்ள அபராதத் தொகையான $1,000 என்பது குறிப்பிடத்தக்கது.
கவனக்குறைவு காரணமாக மேற்கு ஆஸ்திரேலிய சாலைகளில், கடந்த ஆண்டு, 31 பேர் இறந்ததாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில காவல்துறையினர் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களைப் பார்த்தல் மற்றும் அதில் பகிர்தல், மின்னஞ்சல் அனுப்புதல், குறுஞ்செய்தி அனுப்புதல் அல்லது பார்வையிடல் உள்ளிட்ட, கவனத்தை சிதறடிக்கும் பல்வேறு நடவடிக்கைகள், இந்தக் குற்றத்தில் அடங்கும்.
இந்தக் குற்றம் புரிந்த ஓட்டுநர்கள் $ 1,000 அபராதம் செலுத்துவது மட்டுமன்றி, நான்கு புள்ளிகளையும் இழப்பார்கள்.
போக்குவரத்து விளக்குகளில் வாகனங்கள் நிறுத்தப்படும் போது, மொபைல் தொலைபேசியைத் தொட்டால் அறவிடப்படும் அபராதத் தொகை குறைவானதாக இருக்கும். அதற்கான அபராதக் கட்டணம் $500, இழக்கப்படும் புள்ளிகள் – மூன்று.
குயின்ஸ்லாந்து மாநிலத்தைத் தவிர, மற்றைய மாநிலங்கள் அறவிடும் அபராதத் தொகையின் இரு மடங்கு தொகையை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம் அறவிட இருப்பது நோக்கத்தக்கது.
ACT ஓட்டுநர்கள் அதி உயர்ந்த அபராதமாக $577, தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் $534, NSW ஓட்டுநர்கள் $337 மட்டுமே அபராதத் தொகையாகக் கட்டினாலும், ஐந்து புள்ளிகளை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
