நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகள், கடும் மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டிருந்தநிலையில், மாநிலத்தின் 37 உள்ளூராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த தகுதிவாய்ந்தோர், அரசு வழங்கும் நிதியுதவியைப் பெறமுடியும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி Bayside, Blacktown, Blue Mountains, Camden, Canterbury-Bankstown, Campbelltown, Central Coast, Cessnock, Dungog, Fairfield, Georges River, Hawkesbury, Hornsby, Kiama, Lake Macquarie, Lithgow, Liverpool, Maitland, Northern Beaches, Penrith, Shellharbour, Shoalhaven, Singleton, Sutherland, The Hills, Upper Lachlan, Wingecarribee, Wollondilly, Wollongong, Cumberland, Mid Coast, Muswellbrook, Nambucca, Newcastle, Port Stephens, Randwick, Warren ஆகிய உள்ளூராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், அரச கொடுப்பனவைப் பெறமுடியும்.
வளர்ந்தோருக்கு 1000 டொலர்கள், குழந்தைகளுக்கு 400 டொலர்கள் என, ஒரு தடவை மாத்திரம் இக்கொடுப்பனவு வழங்கப்படும்.

ஆனால் இக்கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதிபெறாத பலர், பொய்யான தகவல்களை சமர்ப்பித்து, அதனை திருட்டுத்தனமாக பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும், இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தும்படியும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய மோசடியில் ஈடுபடுபவர்கள் குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும், சிறைத்தண்டனை மற்றும் பெருந்தொகை அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரச நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலானவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களே எனவும், மிகக்குறைவானோரே இவ்வாறான மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாகவும், இது மிகவும் கவலையளிக்கின்ற விடயம் எனவும் Services Australia பொது மேலாளர் Hank Jongen தெரிவித்துள்ளார்.

இப்படியானவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை 131 524 என்ற இலக்கமூடாக அறியத்தரும்படி, ஆஸ்திரேலிய அரசு சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த பெப்ரவரி-மார்ச் மாத வெள்ள அனர்த்தத்தையடுத்து வழங்கப்பட்ட கொடுப்பனவையும், சுமார் 3000 பேர் திருட்டுத்தனமாகப் பெற்றுக்கொண்டிருக்கலாம் என்பதற்கான தரவுகள் தம்மிடம் இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
