பாலியலுக்கு ஒப்புக்கொள்ள, ஒருவர் எந்த வயதாகியிருக்க வேண்டும் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்றும் சில நாடுகளில் அது குறித்த எந்த வரையறையும் கிடையாது என்று சொல்கிறார் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் Jeremy Gans.
ஃப்ரான்ஸில் பாலியல் ஒப்புதல் வழங்க ஒருவருக்குப் பதினைந்து வயதாவது இருக்க வேண்டும் என்று இப்பொழுது அறிவித்துள்ளது. இரண்டு 11 வயது சிறுமிகள் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளின் பின், பொதுமக்கள் பலத்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் வயது பற்றி விவாதிக்கும் போது, குழந்தைத்திருமணம் பற்றி ஒரு விவாதிக்காமல் இருக்க முடியாது என்று திரு Jeremy Gans கூறுகிறார். "(ஒரு நாடு) குழந்தைத்திருமணத்தை அனுமதிக்கிறது என்றால், அந்தத் திருமணத்தில் பாலியல் குறித்த வழக்கு எழப்போவதில்லை" என்கிறார் அவர்.
உலகெங்கிலும் பாலியல் ஒப்புதலின் வழங்கக் குறைந்த வயது என்ன என்பதை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்
ஆஸ்திரேலியா
Australian Institute of Family Studies வெளியிட்டுள்ள தரவின்படி, டஸ்மானியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களைத் தவிர மற்றைய அனைத்து ஆஸ்திரேலிய பகுதிகளிலும் பாலியல் ஒப்புதல் வழங்கக் குறைந்தது 16 ஆகும். டஸ்மானியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் அது 17.
"ஒப்புதல் வயது குறித்த சட்டங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் அதே வேளை தனியுரிமை மற்றும் ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சி ஆகியவற்றிடையே ஒரு சமநிலையை உருவாக்கும் முயற்சி" என்று அந்த அமைப்பு கூறுகிறது.
பாலியலுக்கு ஒப்புக்கொள்ள, ஒருவர் எந்த வயதாகியிருக்க வேண்டும் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது, அதிலும் ஆஸ்திரேலியாவில் மாநிலத்திற்கு மாநிலம் 16, 17 என்ற வயதில் மட்டுமல்ல, சட்டத்தில் என்ன அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் வேறுபடுகிறது என்கிறார் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் Jeremy Gans.
உதாரணமாக, பாலியல் தொடர்பு வைத்துள்ள இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்றால், சட்டம் அவர்களை வேறு விதமாகப் பார்க்கிறது. இளைஞர்கள் அவர்களது சகவாசிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பதைப் பாரிய குற்றமாக ஆஸ்திரேலிய மாநிலங்கள் குற்றஞ்சாட்டுவதில்லை.

வட அமெரிக்கா
ஆஸ்திரேலியாவைப் போல, அமெரிக்காவின் ஒப்புதல் வயது குறித்த சட்டங்கள் மாநில அடிப்படையில் மாறுபடுகிறது. சில மாநிலங்களில் 16, சில மாநிலங்களில் 18. ஆஸ்திரேலியாவைப் போலவே, அங்கும் நெருக்கமான வயதுள்ளவர்கள் என்றால், சட்டம் சற்று தளர்வாகத் தண்டிக்கிறது.
கனடாவில், பாலியல் ஒப்புதல் வயது 16 ஆகும்.
ஆனால், சில சந்தர்ப்பங்களில் ஒப்புதல் வயது 16ஐ விட அதிகமாக உள்ளது என்று கனடா நாட்டின் நீதித்துறை வலைத்தளம் அறிவுறுத்துகிறது. உதாரணமாக, பாலியல் உறவில், ஒரு இளைஞரோடு ஈடுபடும் ஒருவர், அவரது நம்பிக்கையை வென்ற மூத்தவர், அவர் மேல் அதிகாரம் பிரயோகிக்கக் கூடியவர் அல்லது அவர் மேல் சார்ந்திருப்பவர் என்றால், அது சட்டத்தில் வேறுவிதமாகப் பார்க்கப்படும் என்று சொல்கிறது.

பாலியல் ஒப்புதல் வழங்க ஒருவரின் வயது மட்டும் காரணி அல்ல என்றும் வயதில் முதிர்ந்தவர்கள் தான் அதிக பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் அதனைத் தடுக்க கனேடிய அரசு முயற்சிக்கிறது என்கிறார், Australian National Universityயின் பாலியல் நிபுணர், பேராசிரியர் Mary Lou Rasmussen.
தென் அமெரிக்கா
லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் பாலியல் ஒப்புதல் வயது 12 முதல் 18 என்று வேறுபடுகிறது. சராசரி வயது 15 ஆண்டுகள் என்று UNICEF கருத்து வெளியிட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் அது 14 வயதாக உள்ளது. ஆர்ஜென்டீனா, கோஸ்டா ரிக்கா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் அது 14 வயதிலும் குறைவானதாகும்.
ஐரோப்பா
ஐரோப்பிய கண்டத்தில் ஒப்புதல் வயது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
Euronews நடத்திய ஒரு ஆய்வின் படி இது ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் 14 என்றும் மால்டா நாட்டில் 18 வயது என்றும் கூறப்படுகிறது.
"ஐரோப்பிய நாடுகளில் சில நாடுகள் பாலியல் உறவிலுள்ள இருவருக்குமிடையிலான வயது வித்தியாசம் போன்ற காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன," என யூரோநியூஸ் ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில், பாலியல் ஒப்புதல் வயது 16 ஆகும்.
"இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில், பாலியல் உறவிற்குப் பெண்கள் சம்மதம் வழங்கக்கூடிய வயது 16 என்பது 1885ம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. அந்த வருடத்தில் தான் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்க, அந்த எல்லை 13 வயதிலிருந்து உயர்த்தப்பட வேண்டும் என்ற போராட்டம் வெற்றி பெற்றிருந்தது.
முன்னர் குறிப்பிட்டது போல, ஃப்ரான்ஸ் பாலியல் அனுமதி வயதை பதினைந்தாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
ஆசியா-பசிஃபிக்
பிலிப்பைன்ஸ் நாடு, உலகின் மிகக் குறைந்த வயதுடன் பாலியல் ஒப்புதலுக்கு சம்மதம் வழங்குகிறது – 12 வயதில். இதனை மாற்ற வேண்டும் என்ற குரல் தற்போது ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
" குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்குவோரைச் சட்டத்தின் முன் நிறுத்த தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டம் கடினமாக்குகிறது. இதனைக் குறைந்தது 16 வயதாக உயர்த்த வேண்டும்," என்று UNICEF பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது.
ஜப்பானில் பாலியல் ஒப்புதல் வயது 13. வளர்ந்து விட்ட நாடுகளில் மிகக் குறைந்த வயது ஜப்பானில் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அங்கு நடைமுறையில் 16 முதல் 18 வயது என்பது பல இடங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கு
பஹ்ரைன் நாட்டில் பாலியல் ஒப்புதல் வயது 15 என்றாலும், தந்தையின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்ய, பெண்கள் 21 வயதை எட்டியிருக்க வேண்டும். சட்டப்படி பஹ்ரைனில் சம உரிமை இல்லை. ஓரினச்சேர்க்கைக்கு வயதெல்லை 21.
சவூதி அரேபியாவில், ஷரியா சட்டம் நடைமுறையில் இருப்பதால், பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள் சட்டபூர்வமாகத் திருமணம் செய்திருக்க வேண்டும். ஒரே பாலின உறவு மரண தண்டனையைப் பெற்றுத்தரும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.
ஆபிரிக்கா
ஆபிரிக்கக் கண்டத்திலும் பாலியல் ஒப்புதல் வயது மிகக் குறைவாக உள்ளது. அங்கோலா நாட்டில் 12 வயது; Burkina Faso மற்றும் Comoros நாட்டில் 13.
கானா நாட்டில் அந்த எல்லை 16 வயது ஆகும், ஆனால் ஒரே பாலின செயல்களானது சட்டவிரோதமாகக் கருதப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

