

Published
Updated
நாட்டில் Covid-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் நான்கு கட்டங்களாகத் தளர்த்தப்படும். 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட பின்னர், Covid-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் Phase B என்ற கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டில் தற்போது சுமார் 64 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருப்பதால், Phase B கட்டத்தை நாம் விரைவில் எட்டவுள்ளோம்.
நாட்டில் தற்போது சுமார் 85 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுள்ளார்கள்
நாட்டில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த மக்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட பின்னர், Covid-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் Phase C என்ற கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டின் எல்லைகள் திறக்கப்படும். சில மாநிலங்களில் இந்த இலக்கு நவம்பர் மாதத்தில் எட்டப்படும் என்பதால், தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட அந்த மாநிலத்தவர்கள் சர்வதேச பயணம் மீண்டும் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று பிரதமர் Scott Morrison இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.
சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள சில நாடுகளின் தற்போதைய நிலை குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போத்துக்கல் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 10.3 மில்லியன் மக்களில் 1.07 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். தொற்றினால் குறைந்தது 18 ஆயிரம் பேர் மரணித்துள்ளார்கள்.
அந் நாட்டில் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டுக் கொண்ட பின்னர், Covid-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை, அவர்கள் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி எட்டினார்கள். அதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன.
போத்துக்கல் நாட்டில் வாழும் ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது தடுப்பூசி போட்டுள்ளார்கள். உலகில் அதிக வீதத்தில் தடுப்பூசி போட்டவர்கள் வாழும் நாடு என்ற பட்டியலில் (ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக) இரண்டாவது இடத்தில் போத்துக்கல் திகழ்கிறது.

திரிபடைந்த டெல்டா வைரஸ் போத்துக்கல்லில் பரவ ஆரம்பித்த போது, புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப் படுத்தப்படவில்லை. பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தமையால் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று அந்த அரசு முடிவெடுத்திருந்தது.
கோடை மற்றும் இலையுதிர் காலம் போன்ற வெப்பமான மாதங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல் பட்டாலும், குளிர் கால மாதங்களில் வைரஸ் பரவல் அதிகமாகும் என்பதை போத்துக்கல் எடுத்துக் காட்டுகிறது என்று சுகாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சிட்னி மற்றும் மெல்பன் மக்கள் தொகையிலும் சற்று அதிகமாக 5.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர் நாட்டில் குறைந்தது 124,000 பேருக்குக் Covid-19 தொற்று ஏற்பட்டது, தொற்றினால் 153 பேர் இறந்துள்ளார்கள்.
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தளர்த்தப்பட்டன. தடுப்பூசியை முழுமையாகப் போட்டவர்கள் உணவகங்களில் உணவருந்தவும், 50 சதவீதமான பணியாளர்கள் அலுவலகங்களில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த மாதத்தின் இறுதியில், 80 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள்.
தடுப்பூசியின் பாதுகாப்பு இருந்த போதிலும், மேலும் தளர்வுகள் செப்டம்பர் மாதம் அறிமுகமானதும் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது – மீண்டும் சில கட்டுப்பாடுகள் அறிமுகமாகின.

சிங்கப்பூரில் கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக - ஏழு பேர் COVID-19 தொற்றினால் இறந்துள்ளார்கள், சுமார் 3,200 பேருக்குத் தொற்று இருப்பது அடையாளம் காணப் பட்டிருக்கிறது..
குழந்தைகள் உட்பட COVID-19 தடுப்பூசி போடாதவர்களை இந்த வைரஸ் கண்டுபிடித்துத் தாக்குகிறது என்றும் தடுப்பூசி போட்டிருந்தாலும், மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள் என்பதையும் சிங்கப்பூர் எமக்கு எடுத்துக் காட்டுகிறது என்று எமது சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இஸ்ரேலின் மக்கள் தொகையான 9.2 மில்லியன் மக்களில் குறைந்தது சதவீதமானவர்களுக்கு (1.3 மில்லியன் பேருக்கு) இதுவரை COVID-19 தொற்று ஏற்பட்டிருக்கிறது. தொற்றினால் 7,897 பேர் இறந்துள்ளார்கள்.
இஸ்ரேல் நாட்டில், 50 சதவீத மக்கள் தடுப்பூசியைப் போட்டவுடன் (ஜூன் மாதத்தில்) தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. ஆனால், தொற்று அதன் பின்னர் வேகமாகப் பரவியதால், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் இஸ்ரேலில் சராசரியாக ஒரு நாளில் 2,340 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, சராசரியாக ஒவ்வொரு நாளும் 17 பேர் இறந்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் இஸ்ரேல் மக்கள் தடுப்பூசியை விரைந்து போட்டுக் கொண்டதால், அந் நாட்டின் அரசு பலராலும் பாராட்டப்பட்டது. இருந்தாலும், தற்போதைய கணக்குப் படி, 35 சதவீதமானவர்கள் இன்னமும் தடுப்பூசி போடவில்லை. அதனால் இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். பலர் இன்னமும் தடுப்பூசி போடவில்லை என்பதால் தொற்று தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். இரண்டாவதாக, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆரம்பத்திலேயே தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்கள் என்பதால், தடுப்பூசியின் வீரியம் நாட்படக் குறைந்து போகுமென்றால் அவர்கள் booster shot எனப்படும் மூன்றாவது சுற்று தடுப்பூசியைப் போடுவதற்குத் தயாராக வேண்டும்.
சிட்னி மற்றும் மெல்பன் மக்கள் தொகையிலும் சற்று அதிகமாக 5.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட டென்மார்க் நாட்டில் குறைந்தது 363,000 பேருக்குக் Covid-19 தொற்று ஏற்பட்டது, தொற்றினால் 2,669 பேர் இறந்துள்ளார்கள்.
12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் (செப்டம்பர் 10ஆம் தேதி), அவர்கள் நாட்டில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. கட்டுப்பாடுகளை முதலில் நீக்கிய ஐரோப்பாவின் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்றாகும்.
கடந்த வாரம் டென்மார்க்கில் சராசரியாக ஒரு நாளில் 528 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒருவர் இறந்துள்ளார்.

அதிகளவில் மட்டுமல்ல, விரைவாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்ட டென்மார்க் மக்களும், 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் முழுமையாக நீக்கிய டென்மார்க் அரசும் பாராட்டப் பட வேண்டியவர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதிகளவிலான மக்கள் தடுப்பூசியைப் போட்டிருப்பதால், Covid-19 கொரோனா வைரஸ் இன்னொரு திரிபடைந்து, விரைவாகவும் வீரியமாகவும் பரவும் வைரஸாக மாறினாலும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் படுபவர்களின் தொகை சமாளிக்கக் கூடிய அளவிலானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பெருந்தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 67.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரித்தானியாவில் 8.12 மில்லியன் பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தொற்றினால் 138,000 பேர் இறந்துள்ளார்கள்.
பெருந்தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 67.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரித்தானியாவில் 8.12 மில்லியன் பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தொற்றினால் 138,000 பேர் இறந்துள்ளார்கள்.
பிரித்தானியாவில் 68 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் (ஜூலை 19ஆம் தேதி), அவர்கள் நாட்டில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.
கடந்த வாரம் பிரித்தானியாவில் சராசரியாக ஒரு நாளில் 35,671 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, சராசரியாக ஒவ்வொரு நாளும் 112 பேர் இறந்துள்ளார்கள்.
ஒப்பீட்டளவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போதே கட்டுப்பாடுகளைப் பிரித்தானியா தளர்த்தியிருந்தது. நம் நாட்டில் போடப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும் போது அந்தக் கட்டுப்பாடுகள் கணிசமாக வேறுபட்டவை.
நம் நாட்டின் மக்கள் தொகையின் 13 மடங்கு அதிக (329.5 மில்லியன்) மக்களைக் கொண்ட அமெரிக்காவில் குறைந்தது 44.3 மில்லியன் பேருக்குக் Covid-19 தொற்று ஏற்பட்டது, தொற்றினால் 713,000 பேர் இறந்துள்ளார்கள்.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் கட்டுப்பாடுகள் குறித்து வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. அத்துடன், இது குறித்து மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள் அரசியல் மயமாக்கப் பட்டிருக்கின்றன.
கடந்த வாரம் அமெரிக்காவில் சராசரியாக ஒரு நாளில் 96,950 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, சராசரியாக ஒவ்வொரு நாளும் 1,878 பேர் இறந்துள்ளனர்.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்ளாத அமெரிக்கர்களை ஃப்ரான்ஸ் நாட்டிற்குள் அனுமதிக்காது.
தடுப்பூசி குறித்த பல தவறான தகவல்கள் அமெரிக்காவிலிருந்து பரப்பப்படுகின்றன என்பது நோக்கத்தக்கது.
Covid-19 கொரோனா வைரஸ் குறித்து மேலும் தமிழில் அறிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.
Vaccination data via Our World In Data. COVID-19 case numbers and deaths data via Johns Hopkins Coronavirus Research Center.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.