SKIP TO MAIN CONTENT

உக்ரைன் நாட்டை ரஷ்யா ஆக்கிரமிக்கத் தயாராகிறதா?

கடந்த 80 ஆண்டுகளில், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் போர் மேகங்கள் ஐரோப்பிய வான் மண்டலத்தைச் சூழ்ந்துகொண்டுள்ளன. ரஷ்ய- உக்ரைன் பதட்டநிலை மோதலாக உருவெடுக்கும் கட்டத்தில் இது இரண்டாம் உலகம் போர் உருவாவதற்குக் காரணமாக இருந்தது போன்றதொரு சூழ்நிலையை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

A Russian serviceman takes part in drills in the Rostov region near Russia's border with Ukraine in December, 2021.
A Russian serviceman takes part in drills in the Rostov region near Russia's border with Ukraine in December, 2021. Source: AAP

5 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

இதைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்ய அதிபர் Vladimir Putin-னுடன் இணையவழி பேச்சுவார்த்தை ஒன்றைச் சில தினங்களுக்கு முன்னர் நடத்தியிருக்கிறார். மட்டுமல்ல, அமெரி்க்க மற்றும் ரஷ்ய உயரதிக்காரிகளுக்கிடையே ஜெனீவாவில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது;

NATO அமைப்பு, ரஷ்ய தூதுக்குழுவொன்றுடன் Brussels இல் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது; European Organization for Security and Cooperation வியன்னாவில் அவசர ஆலோசனை நடத்திவருகிறது.இப்படி பல முனைகளில் பேச்சுவார்த்தைகள நடந்துகொண்டுள்ளன.

பதட்டமும் பல கட்ட பேச்சுவார்த்தைகளும் பலன் தருமா?

ரஷ்யா உக்ரைனை உடனடியாக ஆக்கிரமிக்கக் கூடும் என்ற பதட்டம் இப்பிராந்தியத்தில் உருவாகியுள்ளதால் அதைத் தவிர்ப்பதற்கான முழு முயற்சிகளை மேற்கு நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும் இவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இதுவரை ஏற்படவில்லை.

Russian Deputy Foreign Minister Sergei Ryabkov during a press conference following talks with US on soaring tensions over Ukraine on 10 January, 2022.
Russian Deputy Foreign Minister Sergei Ryabkov during a press conference following talks with US on soaring tensions over Ukraine on 10 January, 2022. Source: Getty

ரஷ்யா அதிரடியாக ஒரு லட்சத்திற்கு அதிகமான துருப்புகளை உக்ரைன் எல்லையில் குவித்திருப்பதால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைனுக்குள் நுழையக்கூடும் என்ற பதட்டம் உருவாகியிருக்கிறது. ஆனால் ‘தமது பிராந்தியத்தில, துருப்புக்களை நகர்த்துவது இயல்பாக நடக்கும் ஒன்று’ என்றும் ‘உக்ரைனை ஆக்ரமிக்கும் நோக்கம் தமக்கில்லை’ என்றும் ரஷ்யா கூறி வருகிறது.

‘உக்ரைனுக்குள் உடனடியாக நுழையும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை; ரஷ்யாவின் நிபந்தனைகளை அமெரிக்காவும் அதனது ஐரோப்பிய தோழமை நாடுகளும் ஏற்றுக்கொள்ள ரஷ்யா கொடுக்கும் அழுத்தமாகவே இதைப்பார்க்க வேண்டும்’ என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

‘ரஷ்யாவின் இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை என்பது தெளிவான ஒன்று’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் Foreign Policy தலைமை அதிகாரி Josep Borrell கூறுகிறார்.

ரஷ்யாவின் நிபந்தனைகள் என்ன?

முந்தைய Soviet Union இன் ஒரு நாடாக இருந்த உக்ரைன் தற்போது சுதந்திரமான தனிநாடு. ஆனால் சமூக ரீதியாவும் கலாச்சார ரீதியாகவும் ரஷ்யாவுடன் பின்னிப்பிணைந்தது. ரஷ்ய மொழியே அங்கு பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது.

Ukrainians and activists from different counties of the former Soviet Union attend the 'Say No to Putin' rally in downtown Kiev, Ukraine, 10 January, 2022.
Ukrainians and activists from different counties of the former Soviet Union attend the 'Say No to Putin' rally in downtown Kiev, Ukraine, 10 January, 2022. Source: EPA
  • ரஷ்ய நிபந்தனை ஒன்று: வரலாற்றின் அடிப்படையில் Russian Empire - ரஷ்ய சாம்ராஜ்யம் என்று பார்த்தாலும், சோவியத் யூனியன் என்று பார்த்தாலும், உக்ரைன், ரஷ்யாவின் ஒருபகுதி என்பதும் அது ரஷ்யாவின் sphere of influence என்ற ரஷ்யாவின் அதிகாரம் கோலோச்சும் வட்டத்துக்குள் இருப்பதாலும் ‘உக்ரைன் ஒருபோதும் மேற்கு நாடுகளின் அமைப்பாகிய, NATO அமைப்பில் இணையாது, இணைக்கப்படக் கூடாது’ என்ற உத்தரவாதத்தை ரஷ்யா கோருகிறது.

ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரைன் அதிபர் 2014 இல் தேர்தல் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டபின்னர் உக்ரைன் அதன்பின்பு மேற்கு நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள முனைந்தது. இதனால் ஆத்திரம்கொண்ட ரஷ்யா உக்ரைனின் ஒருபகுதியாகிய Crimea வை 2014 இல் தன்னுடன் இணைத்துக்கொண்டது. அத்தோடு உக்ரைனில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தற்போதும் ஆதரவு கொடுத்து வருகிறது. எனவே இந்த உள்நாட்டுப் போரை எதிர்கொள்வதில் உக்ரைன் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறது.

  • ரஷ்ய நிபந்தனை இரண்டு: 1997 இன் பின்னர் NATO வில் இணைந்த கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளான Estonia, Latvia, Lithuania, Poland , Hungary, Romania, Albania போன்ற 12 நாடுகளுக்கு NATO, துருப்புகளையும் ஆயுதங்களையும் வழங்கக் கூடாது என்று ரஷ்யா நிபந்தனை விதிக்கிறது. தான் 1997 ஆண்டு காலப்பகுதியில், ஒத்துக்கொண்டபடி தனது படைகளை இப்பகுதிகளில் இருந்து அமைதியாக வெளியேறியதாகவும், ரஷ்யாவின் அப்போதைய பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு NATO அதனது செல்வாக்கை அப்பகுதிகளில் விரிவுபடுத்திக்கொண்டதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. எனவே துருப்புகளையும் ஆயுதங்களையும் வழங்கக் கூடாது என்று ரஷ்யா நிபந்தனை விதிக்கிறது.
  • ரஷ்ய நிபந்தனை மூன்று: NATO வின் missiles ஏவுகணைகள் ரஷ்ய எல்லையை ஊடுருவமுடியாத தூரத்தில் நிலைகொள்ளவேண்டும் என்பது.
  • ரஷ்ய நிபந்தனை நான்கு: உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்பது. இப்பகுதியில் உக்ரைன் அரச துருப்புகளுக்கும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்குமிடையே தொடர்ந்து மோதல்கள் இடம் பெற்றுவருகின்றன. இந்த பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யாவே ஆதரவுவழங்கிவருகிறது. இந்த மோதல்கள் காரணமாக பொதுமக்களுள் 15000 பேருக்கு மேல் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதிக்கிறது.

அமெரிக்கா, NATO மற்றும் மேற்கு நாடுகளின் பதில் என்ன?

NATO வில் இணைய தகைமையுடைய எந்த நாடும் NATO வில் இணையலாம் என்பது NATO அமைப்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆகவே ‘உக்ரைன் விரும்பினால் NATO வில் இணைய அது விண்ணப்பிக்கலாம்’ என்று அமெரிக்காவும் NATO வும் சொல்கின்றன.

US deputy secretary of state Wendy Sherman following a meeting of the NATO-Russia Council at the NATO headquarters in Brussels on 12 December, 2021.
US deputy secretary of state Wendy Sherman following a meeting of the NATO-Russia Council at the NATO headquarters in Brussels on 12 December, 2021. Source: AFP

NATO வில் இணைந்த நாடுகளுக்கு NATO துருப்புகளையும் ஆயுதங்களையும் வழங்கக் கூடாது என்பது அர்த்தமில்லாத நிபந்தனை என்பது ரஷ்யாவுக்கே நன்கு தெரியும். ரஷ்யாவின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால், முற்றுமுழுவதாக ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும்’ என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன.

ஏவுகணைகளை ரஷ்ய எல்லைகளைத்தாக்கமுடியாத தூரத்தில் நிலைநிறுத்துவது பற்றி சமரசம் செய்துகொள்ளலாம் என்று NATO கூறுகிறது. தேவை ஏற்படின் ஏவுகணைகளை மீண்டும் பழைய நிலைக்கு நகர்த்துவது ஒன்றும் கடினமல்ல என்று மேற்கத்திய நாடுகளுக்கு தெரியும்.

உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்த அளவில் ரஷ்யா, NATO மற்றும் உக்ரைன் ஆகியவற்றுக்கிடையே 2015 இல் கைசாத்திடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிவிட்டது என்பது NATO வின் குற்றச்சாட்டாகும். ஆகவே அப்பகுதிக்கு autonomy என்ற தனியாட்சி குறித்து பரிசீலிக்கமுடியாது என்பது மேற்கு நாடுகளின் நிலைப்பாடாகும்.

ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவும் நிலையில் என்ன நடக்கும்?

உக்ரைன் ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் தானியக் களஞ்சியமாக இருந்தது. இப்போது ஐரோப்பாவின் தானியக்களஞ்சியமாக மாறிவிட்டது. 43 மில்லியன் மக்களக்கொண்ட உக்ரைனின் நிலப்பரப்பைப் பொறுத்த அளவில் உக்ரைன், இத்தாலியை விட இரண்டுமடங்கு பெரியது. ரஷ்யாவின் இராணுவபலத்திற்கு முன்னால் உக்ரைனின் இராணுவம் மிகவும் பலவீனமானது .

AP
Source: AP Photo/Roman Koksarov, File

ரஷ்யா உக்ரைன் எல்லையில் டாங்கிகள், multiple launch rocket systems, short range ballistic missile system என்று ஏராளமான போர்த்தளபாடங்களைக் குவித்திருக்கிறது. ரஷ்யா மின்னல் வேகத்தில் உக்ரைனுக்குள் ஊடுருவி பிரதான கேந்திர நிலயைங்களைக் கைப்பற்றி முன்னேறும் ஆற்றல் உடையது. ஆனால் நீண்ட ஒரு போருக்கு ரஷ்யா குவித்துள்ள துருப்புகளும் தளபாடங்களும் மட்டும் போதுமானதல்ல என்றும் back up troops - மேலதிக துருப்புகள், உணவு விநியோகம், மருத்துவ வசதிகள் போன்ற எதையும் ரஷ்யா இன்னும் ஏற்பாடு செய்யவில்லை என்பதால் இதை ஒரு ‘அழுத்தமாகவே’ பார்க்கவேண்டும் என்று அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள்.

அதேவேளையில அமெரிக்காவும், NATO உம் உக்ரைனுக்கு ஆதரவாக தங்களது துருப்புகளை அனுப்பும் பட்சத்திலும், தற்போதைய கால நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் ரஷ்யாவின் ஊடுருவலில் தடைகள் ஏற்படும். உக்ரைன் இராணுவத்திற்கு ஆயுதங்களையும் தளபாடங்களையும் வழங்குவதே மேற்கு நாடுகளின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது. இராணுவத்தை அனுப்புவது குறித்து மேற்கு நாடுகள் இதுவரை முடிவுசெய்யவில்லை.

சோவியத் யூனியன் பிளவுபட்டு 30 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் சோவியத் யூனியனில் அப்போது இருந்த நாடுகள் மீண்டும் ரஷ்யாவின் செல்வாக்குக்கும், அதிகாரத்திற்கும் உட்பட்டிருக்கும் நிலையை கொண்டுவருவதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் பியூட்டினின் நோக்கம் எனப்பார்க்கப்படுகிறது

சமாதனப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் ரஷ்ய இராணுவம் உக்ரைனின் வடக்கு, மத்திய மற்றும் தென்பகுதி வழியாக உக்ரைனுக்குள் நுழையக்கூடும்.

Russia sends peacekeeping forces to Kazakhstan
Russian servicemen boarding a military aircraft on their way to Kazakhstan, at an airfield outside Moscow, Russia,, on January 06, 2022. Source: Anadolu via Getty

ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்தால் அமெரிக்காவும் NATOவும் உடனடியாக என்ன செய்யலாம்?

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார ரீதியான தடைகளையும், அழுத்தங்களையும் பயன்படுத்தலாம். NATO வில் பிந்தி இணைந்த நாடுகளும் மற்றும் Finland, Sweden போன்ற நாடுகளும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றன.

International banking system என்ற அமைப்பிலிருந்து ரஷ்யாவை நீக்குவது; ஜெர்மனி- ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான Nord Stream 2 gas pipeline என்ற gas விநியோக வசதியை செயல்படவிடாமல் தடுப்பது; ரஷ்யாவின் RDIF sovereign wealth fund ஐ முடக்குவது; ரஷ்யாவின் நாணயமான ரூபிள்களை வெளிநாட்டு நாணயமாக மாற்றும் வசதிகளை முடக்குவது என்பன போன்ற தீவிரமான பொருளாதார தடை நடவடிக்கைகள் குறித்தே மேற்குலக நாடுகள் ஆராய்ந்துவருகின்றன. இந்த பொருளாதார அழுத்தங்கள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்பதால் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று மேற்கு நாடுகள் எதிர்பார்க்கின்றன.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now