Cryptocurrency என்பது blockchain தொழில்நுட்பத்தின் மூலம் யாருக்கும் அனுப்பக்கூடியவகையிலுள்ள பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும்.
இந்த டிஜிட்டல் பணத்தை இடைத்தரகர்கள் இல்லாமல் நீங்கள் வைத்திருக்கலாம் என்பதுடன் நீங்கள் விரும்பியபடி அதை பயன்படுத்தவும் முடியும்.
ஆனால் இந்த டிஜிட்டல் பணத்திலுள்ள அபாயங்களைப் பற்றி அறியாமல் அதிகளவிலான ஆஸ்திரேலியர்கள் Cryptocurrency-இல் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மோசடிக்காரர்கள் பெரும்பாலும் Cryptocurrency தொடர்பிலான போலி முதலீடுகள் ஊடாக மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

இவ்வகை நாணயங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் Bitcoin என்பது.
Bitcoin 2000-களின் முற்பகுதியில் இணைய உலகில் கால்பதித்த முதல் டிஜிட்டல் நாணயம் ஆகும். இது Satoshi Nakamoto என்பவரால் அல்லது குழுவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இவர்களது அடையாளம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
டிஜிட்டல் நாணயத்தை ஒருவர் digital wallets என்ற செயலிமூலமாக கணிணியிலோ அல்லது smart phone-இலோ வைத்துக்கொள்ள முடியும். கொடுப்பது பெறுவது என்பன இந்த digital wallet மூலமாகவே நிகழும். Blockchain என்ற இணைய பதிவேட்டில் அல்லது ‘லெட்ஜரில்’ இந்த பரிவர்த்தனை பதிவாகும்.
Blockchain தொழில்நுட்பம் 1980களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் பணத்தை கண்காணிப்பதில் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் Cryptocurrency சந்தையில் உள்ளவர்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
ஒரு Cryptocurrency-ஐ யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம், எனவே இவ்வகை நாணயங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் Bitcoin, Ethereum, Litecoin , Dogecoin ஆகியவை மிகவும் பிரபலமானவை.
இந்த நாணயங்கள் வர்த்தகம், கொள்முதல், பணம் செலுத்தும் முறைகள் மற்றும் பெரும்பாலானவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன- இது ஒரு வகையான முதலீட்டு வடிவமாகும்.

ஒருவர் தனது சொந்தப் பணத்தைக்கொண்டு அதாவது பண நோட்டுக்கள் அல்லது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தைப் பயன்படுத்தி - real money-ஐப் பயன்படுத்தி Cryptocurrency-ஐ வாங்கமுடியும். அதே நேரத்தில் தான் விற்கும் பொருட்களுக்கு அல்லது தான் வழங்கும் சேவைகளுக்கு Cryptocurrency-ஐத் தருமாறு கேட்கலாம்.
சந்தை விலையைப் பொறுத்து, உங்கள் Cryptocurrency-இன் மதிப்பு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.
இதன் மூலம் பெரிய லாபம் ஈட்ட முடியுமா?
Cryptocurrency மூலம் லாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் முடிவற்றவை என்றபோதிலும் பலர் இதன்மூலம் லாபமடைந்துள்ளதாக Finder.com.au இணை நிறுவனர் Fred Schebesta சொல்கிறார்.
Cryptocurrency-களுக்கு இணையத்தில் மட்டுமே மதிப்பு உள்ளது எனவும் பணநோட்டுக்களுடன் ஒப்பிடும்போது இவற்றுக்கு நிஜத்தில் உண்மையான மதிப்பு எதுவும் இல்லை என்றும் மெல்பனில் உள்ள Deakin பல்கலைக்கழக கணக்கியல் துறை பேராசிரியர் Dr Adam Steen சொல்கிறார்.
ஒரு புதுமையான மற்றும் தனித்துவமான முதலீட்டு வாய்ப்பாகத் தொடங்கிய Cryptocurrency பின்னர் மற்ற அம்சங்களைப் போலவே மக்களிடையே பிரபலமடைந்தது.

எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த Cryptocurrency-கள் வருவதில்லை என்பதால், மாஃபியாக்கள், போதைமருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு இது உதவக்கூடும்.
அத்துடன் மோசடிக்கார்களுக்கும் இதன்மூலம் பலரை ஏமாற்றும் வாய்ப்புக் கிடைக்கிறது..
பெரும்பாலும் மோசடிக்கார்கள்; புலம்பெயர்ந்த சமூகங்களைச் சேர்ந்த, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களை குறிவைக்கின்றன,
இத்தகைய மோசடிகளுக்குப் பலியாவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று மொழித் தடையாகும்.
மோசடிகள் மற்றும் phishing போன்றவற்றுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் கூட இரையாகின்றன.
ஒரு மோசடியை நீங்கள் எவ்வாறு கண்டறிவது?
அநாமதேய மின்னஞ்சல்களைத் தவிர்ப்பது சிறந்தது என்றும் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து வந்திருந்தால்கூட முறையற்றதாகத் தோன்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் Dr Adam Steen கூறுகிறார்.
சரியான முதலீட்டைத் தேர்வு செய்ய உதவும் சில குறிப்புகள்:
- நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுங்கள்.
- ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள நிதி ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காளர்கள் உங்களுக்கு ஆலோசனையை வழங்க முடியும்.
- Cryptocurrency-கள் வடிவில் யாராவது உங்களுக்கு அபரிமிதமான வருமானம் தருவதாக உறுதியளித்தால், அவர்கள் உங்களை மோசடியில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
- கடைசியாக, ஊகங்கள் மற்றும் வதந்திகளை நம்பாதீர்கள் மற்றும் உண்மையில் நிபுணர்கள் அல்லாதவர்களிடமிருந்து எந்த ஆலோசனையையும் பெறுவதைத் தவிருங்கள்.
மேலும் தகவலுக்கு moneysmart.gov.au ஐப் பார்வையிடவும்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
