இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
'தீபங்களின் திருவிழா' என்றும் அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் பொதுவாக ஐந்து நாட்கள் நீடிக்கும்.
ஆஸ்திரேலியாவில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் இத்திருவிழாவின் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டாடுகிறார்கள். இதில் Tihar மற்றும் Bandi Chhor Diwas ஆகியவையும் அடங்கும்.
தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் இவ்விழா குறிக்கிறது.
நல்ல ஆரோக்கியம் மற்றும் செழுமைக்காக நன்றி செலுத்துவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் இது ஒரு நேரமாகும்.

டாக்டர் ஜெயந்த் பாபட் ஒரு இந்து மதகுரு மற்றும் மெல்பன் Monash பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.
Diwali என்ற சொல் சமஸ்கிருத Deepavaliயிலிருந்து உருவானது என்று அவர் விளக்குகிறார்.
Deep என்றால் விளக்கு, avali என்றால் வரிசை. தீபாவளி என்பதன் பொதுவான பொருள் 'விளக்குகளின் வரிசை' என்பதாகும்.
ஒவ்வொரு பிராந்தியத்தின் பாரம்பரியத்தைப் பொறுத்து இந்திய துணைக் கண்டம் முழுவதும் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், இந்து சந்திர மாதங்களான அஷ்வின் மற்றும் கார்த்திக் மாதங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது, இது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு சமமாக இருக்கும்.

பாரம்பரியமாக தியாஸ் எனப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் ஏற்றப்படுகின்றன, குழந்தைகளும் பெரியவர்களும் பட்டாசுகளை கொளுத்துகிறார்கள்.
பலருக்கு, ரங்கோலி இல்லாமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது. தென்னிந்தியாவில் இருந்து வரும் சமூகங்களால் கோலம் என்று இது அழைக்கப்படும்.
இந்த வடிவங்கள் ஒவ்வொரு காலையிலும் தீபாவளியின் போது இந்து தெய்வமான லட்சுமியை வரவேற்கவும், நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும் வரையப்படுகின்றன.
இந்த நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்றாக நடனமாடவும், பாடவும், இனிப்புகளை பகிர்ந்து கொள்ளவும், பரிசுகளை பரிமாறிக்கொள்ளவும் கூடுவார்கள்.
செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் நம்பிக்கையில், தீபங்கள் ஏற்றப்படுவதற்குமுன் வீடுகள் சுத்தம் செய்யப்படுகின்றன. சில குடும்பங்கள் தங்கள் வீட்டிற்கு ஒரு புதிய வண்ணப்பூச்சு கூட கொடுக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் தீபாவளி
ஆஸ்திரேலியாவில் இந்திய துணைக் கண்ட பாரம்பரியம் கொண்ட குடிமக்கள் மற்றும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தீபாவளி கொண்டாட்டங்கள் தலைநகரங்களிலும் பல பிராந்திய மையங்களிலும் நடைபெறுகின்றன.
மெல்பனில் உள்ள புகழ்பெற்ற நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான தாரா ராஜ்குமார் OAM, சமீபத்திய தசாப்தங்களில் தீபாவளி கொண்டாட்டம் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறுகிறார்.
தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் தீபாவளி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மெல்பனின் ஃபெடரேஷன் சதுக்கம் முதல் விமான நிலையங்கள் வரை, கொண்டாட்டத்தின் அறிகுறிகளைக் காணலாம்.
"தீபாவளியின் ஒரு முக்கிய பகுதி, ஒளியின் மூலம் அறியாமை அகற்றப்படும்போது ஏற்படும் மாற்றம்" என்று தாரா ராஜ்குமார் மேலும் கூறுகிறார்.
கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதைகள்
இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் பொதுவாக தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
இது Dhanatrayodashi அல்லது Dhanteras-உடன் தொடங்குகிறது, இது தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதற்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
"இந்த நாளில் மக்கள் குழந்தைகளுக்கு பரிசுகளை வாங்குகிறார்கள். அனைவரும் புதிய ஆடைகளை அணிவார்கள், வீடுகளை சுத்தம் செய்கிறார்கள், மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குகிறார்கள். இது லட்சுமி தேவியை வணங்குவதற்கான நாள்" என்று டாக்டர் பாபட் கூறுகிறார்.

இரண்டாவது நாள் Chaturdashi என்று அழைக்கப்படுகிறது, இது இந்திய துணைக்கண்டம் முழுவதும் பல்வேறு புராணக்கதைகளுடன் தொடர்புடையது.
"இக்கதைகளில் ஒன்று நரகாசுரன் என்ற அரக்கன் ஒருவன் கிருஷ்ணரால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்" என்று டாக்டர் பாபட் கூறுகிறார்.
மேலும் இந்த நாளில் பலர் தங்கள் கதவுகளைத் திறந்து விட்டு, தங்கள் வீடுகளின் முன்பும் ஆற்றங்கரைகளிலும் விளக்குகளை வரிசையாக வைத்து லட்சுமி தேவியை வரவேற்பார்கள் என்று டாக்டர் பாபட் கூறுகிறார்.
மூன்றாவது நாள் லட்சுமி பூஜை என்று அழைக்கப்படுகிறது, இது செல்வத்தின் தெய்வத்தை வணங்குவதற்கு மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.
"இந்த நாளில், உதாரணமாக, வணிகர்கள் தங்கள் கணக்கு புத்தகங்களையும் பணத்தையும் வணங்குகிறார்கள்," என்று டாக்டர் பாபட் விளக்குகிறார்.
இந்தியாவின் பல பகுதிகளில், இந்த நாள் 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ராமர், அவரது மனைவி சீதா தேவி மற்றும் சகோதரர் லட்சுமணன் ஆகியோர் தங்கள் தாயகமான அயோத்திக்கு திரும்பியதை நினைவுகூருகிறது.
நான்காவது நாளான, கோவர்தன் பூஜை, வட இந்தியாவில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
"புராணத்தின் படி, கிருஷ்ணர் தனது மக்களை இயற்கையின் சீற்றத்திலிருந்து பாதுகாத்தார், கோவர்த்தன மலையை ஒரு விரலில் பிடித்துக் கொண்டார். இந்த நாள் கிருஷ்ணர் இந்திரனை தோற்கடித்ததைக் கொண்டாடுகிறது."
கடைசி நாள் Bhai Dooj, சகோதரிகள் தங்கள் சகோதரரின் நெற்றியில் சிவப்பு அடையாளத்தை வைத்து அவர்களின் அன்பின் பந்தத்தை மதிக்கும் வகையில் உடன்பிறப்புகளின் கொண்டாட்டமாகும்.
இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருப்பதால், தீபாவளி ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.
"உதாரணமாக, லட்சுமி செல்வத்தின் தெய்வம், ஆனால் வங்காளத்தில் அவர்கள் லட்சுமியை அல்ல, காளியை வணங்குகிறார்கள். குஜராத்தில், விஷ்ணு வழிபாட்டுடன், அனுமனும் வணங்கப்படுகிறார். சில இடங்களில் குழந்தைகள் களிமண்ணால் கோட்டைகளை உருவாக்குகிறார்கள்," என டாக்டர் பாபட் விளக்குகிறார்.

நேபாளத்தில் திகார் கொண்டாட்டங்கள்
நேபாளி சமூகத்தில் தீபாவளி Tihar என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இதில் காக்கைகள், நாய்கள் மற்றும் பசுக்கள் போன்ற விலங்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கொண்டாட்டங்கள் அடங்கும்.
முதல் நாள், Yamapanchak அல்லது "Kag Tihar" என்று அழைக்கப்படும். இது காகங்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க காகங்கள் உதவுவதாக என்று கூறப்படுகிறது.
இரண்டாவது நாள் "Kukur Tihar" என்று அழைக்கப்படுகிறது. இது நாய்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது, அவை விசுவாசத்திற்காக மதிக்கப்படுகின்றன.
அன்றைய தினம் நாய்களை குளிப்பாட்டி, வழிபாடு செய்து, சுவையான உணவு அளிக்கப்படுகிறது.
பொதுவாக மூன்றாம் நாளில் நடைபெறும் "Gai Tihar", புனிதமானதாகவும் தாய்மையின் அடையாளமாகவும் கருதப்படும் பசுக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பொதுவாக,"Goru Tihar" என்று அழைக்கப்படும் நான்காவது நாளில், நேபாளிகள் நிலத்தை உழுவதற்கு விவசாயிகளுக்கு உதவும் எருதுகளை கௌரவிக்கிறார்கள்.
அதே நாளில், காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள Newar மக்கள் "Mha Puja" ஐ கொண்டாடுகிறார்கள், அதாவது "சுய வழிபாடு".
இறுதி நாள் "Bhai Tika" என்று அழைக்கப்படுகிறது. இது உடன்பிறப்புகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மரணத்தின் கடவுளான யமனிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் எண்ணெய் மற்றும் தண்ணீருடன் தங்கள் சகோதரிகள் சுற்றி வரும்போது சகோதரர்கள் அமர்ந்திருப்பார்கள்.
Bandi Chhor Diwas
Bandi Chhor Diwas என்பது பெரும்பாலும் "சீக்கிய தீபாவளி" என்று குறிப்பிடப்படும் விடுமுறை என்று ஆஸ்திரேலியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அனுபவமிக்க விழா ஒருங்கிணைப்பாளரான குரிந்தர் கவுர் விளக்குகிறார்.
"சுதந்திரக் கொண்டாட்டம்" என்றும் அழைக்கப்படும் இது, 17 ஆம் நூற்றாண்டில் குவாலியர் சிறையில் இருந்து ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த் விடுவிக்கப்பட்டதை நினைவுகூருகிறது.
குரு விடுவிக்கப்படவிருந்தபோது, தன்னோடு சிறையிலிருந்த 52 அரசர்களின் விடுதலைக்காக ஆளும் முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரிடம் கோரிக்கை விடுத்தார்.
குரு ஹர்கோவிந்தின் மேலங்கியை அனைவராலும் பிடிக்க முடிந்தால், அனைத்து மன்னர்களையும் விடுவிக்க சக்கரவர்த்தி ஒப்புக்கொண்டார். அதன்படி, அவர் 52 துணி வால்களால் செய்யப்பட்ட ஒரு மேலங்கியை அணிந்து அனைவரது விடுதலைக்கும் வழிவகுத்தார்.
Bandi என்றால் 'கைதி' என்றும், Chhor என்றால் 'விடுதலை' என்றும் பொருள். அன்றைய முக்கிய செய்தி என்னவென்றால், குரு தனக்காக மட்டுமல்ல, மற்றவர்களின் மனித உரிமைகளுக்காகவும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சீக்கியர்கள் Bandi Chhor Diwas- ஐ தங்களுக்கு அருகிலுள்ள குருத்வாராவிலும் வீட்டிலும் கொண்டாடுகிறார்கள்.
"சீக்கியர்கள் குருவின் ஆசீர்வாதத்தைப் பெறும் நாளில், குருத்வாராவில் சில மெழுகுவர்த்திகளை ஏற்றி, இனிப்புகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்," என்கிறார் Ms கவுர்.

"வீட்டில், பரிசுகள் மற்றும் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன, மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக பட்டாசுகளும் கொளுத்தப்படுகின்றன," என Ms கவுர் மேலும் கூறுகிறார்.
தீபாவளி, Diwali, Bandi Chhor Diwas மற்றும் Tihar பற்றி மேலும் அறிய, sbs.com.au/Diwali ஐப் பார்வையிடவும்.
