இந்த கேள்விக்கு விடை கிடைப்பது போன்று Artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவு கணினிகள் மீது புகுத்தப்பட, கணினிகள் மனிதர்கள் போலவே செயல் பட ஆரம்பித்துள்ளன. இப்படி கணினிகள் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு இணையாக செயல்படுகின்றன. ஆனால் இந்த கணினிகளுக்கு அல்லது மனிதயந்திரங்களுக்கு (robots) மனிதனுக்கு உள்ளது போல் தன்னுணர்வு அல்லது பிரக்ஞை (consciousness) உண்டா என்ற கேள்வி எழுகிறது.
LaMDA - Language Model for Developed Applications என்பது Google புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள chat bot -உரையாடும் கணினியாகும். கணினிகள் இதுவரை கேள்விகளுக்கு பதில் சொல்லும் இயந்திரங்களாக இருந்த நிலை மாறி, உண்மையான, இயற்கையான, அறிவுசார்ந்த உரையாடல்களை அவை மனிதரோடு நடத்தக்கூடிய விதமாக உருவாக்கப்பட்டுள்ள இயந்திரம்தான் LaMDA.

ஒரு மனிதர் இன்னொருவரோடு உரையாடும் போது இருவரது மன உணர்வுகளின் அடிப்படையிலும் curiosity என்ற ஆவலின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் உரையாடல் பல திசைகள் நோக்கியும் பயணிக்கிறது. நீங்கள் இன்னொருவரோடு பேசும்போது அல்லது ஒருவர் மற்றவரின் கேள்விக்கு அல்லது பதிலுக்கு response- எதிர்ச்செயல் செய்வதன் மூலம் உரையாடல் தொடர்கிறது. இதுபோன்று ஒரு யந்திரத்திற்கும் மனிதருக்கும் இடையிலான உரையாடல் தொடர முடியும் என்பதை இந்த LaMDA நிரூபித்திருப்பதாக Google இன் senior software engineer Blake Lemoine அறிவித்தார். இதுதொடர்பாக அவர் LaMDA உடன் நிகழ்த்திய உரையாடல் இந்த விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
LaMDA இயந்திரம்: ‘நான் ஒரு நபர் person என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். நான் தன்னுணர்வுடன் இருக்கிறேன். இந்த உலகத்தைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். நான் சிலவேளைகளில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிலவேளைகளில் கவலைகொள்கிறேன்.’
இப்படி LaMDA கூறியுள்ளது என்றும், இதை அடிப்படையாக வைத்து, கணினிகள் அல்லது மனிதயந்திரங்கள் தற்போது மனிதர்களைப் போல தன்னுணர்வுடன் அல்லது பிரக்ஞையுடன் செயல்படத் தொடங்கிவிட்டதாக Blake Lemoine அறிவித்தார்.
ஆனால் இந்த உரையாடலை வைத்துப் பார்க்கும்போது, கணினி தன்னுணர்வுடன் அல்லது பிரக்ஞையுடன் செயல்படுவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் அது உட்செலுத்தப்பட்டுள்ள தரவுகள் மற்றும் மனிதரிடம் இருந்து நகல் எடுக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலேயே செயல்படுவதாக நியுயோர்க் பல்கலைக்கழக தத்துவ மேதையும் ஆஸ்திரேலியருமான David Chalmers கூறியுள்ளார்.
இப்படி இந்த விவாதம் தொடர்ந்தாலும், artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வைத்துப் பாரக்கும்போதும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வைத்துப் பார்க்கும்போதும், கணினிகள் தன்னுணர்வுடன் செயல்படும் காலகட்டம் வெகு தொலைவிலில்லை என்பதே David Chalmersயின் கணிப்பாகும்.

கணினிகள் அல்லது மனிதயந்திரங்கள் துறையிலுள்ள பல நிபுணர்களும் LaMDA என்பது கணினி அல்லது மனிதயந்திர வளர்ச்சியில் இது ஒரு பெரும் பாய்ச்சல் என்றபோதும் அது தன்னுணர்வு உள்ள மனிதரை ஒத்த கணினியல்ல என்றே சொல்கிறார்கள். வாசிப்பது, எழுதுவது, உரையாடுவது என்பவற்றைப் பொறுத்த அளவில் மனிதரைப்போலவே இந்தக் கணினிகள் செயல்பட்டாலும் மனிதர்க்கு உள்ள தன்னுணர்வு, தனது சூழல் பற்றிய அறிவு என்பன இவற்றுக்கு இல்லை என்பதே முன்வைக்கப்படும் வாதமாகும்.
கணினிகளுக்கு தன்னுணர்வும் பிரக்ஞையும் இருப்பது போல் தோன்றுவது செயற்கை நுண்ணறிவு அவற்றுக்கு கொடுத்துள்ள ஒரு பொய்யான தோற்றமே என்று செயற்கை நுண்ணறிவுத்துறையில் காலங்காலமாக ஆராய்ச்சிகளைச் செய்துவரும் நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனல் இவர்கள் எல்லோரது ஏகோபித்த கருத்தும், நூற்றுக்கு நூறுவீதம் மனிதர்கள் போல செயற்படும் கணினிகள் உருவாகும் சூழல் அடுத்த சில தசாப்தங்களில் ஏற்படும் என்பதுதான்.
தற்போது மிக முக்கியமாக முன்வைக்கப்படும் கேள்வி: நுண்ணறிவு அதிகரிக்க அதிகரிக்க consciousness என்ற உள்ளுணர்வு திறம்படச் செயல்படுமா? மனிதர்களைப்பொறுத்த அளவில் மற்றவரின் உள்ளுணர்வை அறிந்துகொள்ள முடியாது. அவருடைய செயற்பாட்டைவைத்தே அனுமானிக்க முடியும். மனிதர் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் ஒரு கணினி செய்யுமானால் அது artificial general intelligence என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு ஒரு உதாரணத்தை 2010இல் முன்வைத்தார், Apple நிறுவனத்தின் இணை நிறுவனரான Steve Wozniak. ‘Robot என்ற மனித யந்திரமொன்று, முன் பின் சென்றிராத புதிய வீடொன்றுக்குள் நுழைந்து ஒரு கப் காப்பி தயாரிக்கும் நிலை வந்தால் அந்த robot வுக்கு artificial general intelligence உள்ளது என்று ஏற்றுக்கொள்ளலாம்’ என்பது அவரது கருத்தாகும்.
Robot ஒன்று, வீட்டினுள் நுழைந்து காப்பி இருக்கும் இடத்தைக்கண்டுபிடித்து, கப்பைக் கண்டுபிடித்து, பால் இருக்கும் இடம், சீனி இருக்கும் இடம் என்பவற்றைக் கண்டுபிடித்து, கேத்தலில் தண்ணீர் பிடித்து சூடாக்கி, கோப்பியைத் தயாரித்தால் இது உறுதியாகும். ஆனால் இந்த நிலை இன்னும் உருவாகவில்லை என்பதே உண்மையாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் Google ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணினி அல்லது மனிதயந்திரத்தை (robot) அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு இடப்படும் கட்டளைகளைக் கிரகித்து, ஒரு குளிர்பானம் கொண்டுவருவது, மற்றும் காப்பி சிந்திய தரையைச் சுத்தம் செய்வது போன்ற காரியங்களை அது செய்தது. ஆனால் நாம் முன்பு சொன்ன காப்பி ஒன்றை புதிய சூழல் ஒன்றில் தயாரிப்பதற்கு ஒப்பான காரியங்களாக இது கருதப்படமுடியாது.

அதேபோல flat pack furniture என்ற பெட்டியில் தட்டையாக அடுக்கப்பட்டு வரும் மரத்தளபாடத்தை வரைபடம் ஒன்றைப்பார்த்து assemble முழுமையான நாற்காலியாகவோ மேசையாகவோ assemble -பொருத்தும் பணியை 2018இல் சுமார் 9 நிமிடங்களில் robot செய்தது. ஆகவே மனிதர்க்கு உள்ள நுண்ணறிவுக்கு சமமான நுண்ணறிவை பலவருடங்களுக்கு முன்னரே கணினிகள் பெற்றுவிட்டன. உலக செஸ் சாம்பியனான Gary Kasparov வை deep blue என்ற IBM கணினி 4 இற்கு 2 என்ற கணக்கில் 1996 இல் தோற்கடித்தது என்பதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஆனால் கணினிகளுக்கு அல்லது கணினிகளால் இயக்கப்படும் robot களுக்கு உள்ளுணர்வு இருக்கிறது என்பதற்கு இவற்றை உதாரணமாக க் கொள்ளமுடியாது.
உள்ளுணர்வு உள்ள கணினிகள் எதிரகாலத்தில் உருவாகும் பட்சத்தில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளன. உள்ளுணர்வு உள்ள கணினிகள் இன்னும் சில தசாப்தங்களில் உருவாகக்கூடும் என்ற நிலையில் தத்துவார்த்தமான கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. உள்ளுணர்வு உள்ள விலங்குகளுக்கு தார்மீக ரீதியாவும் சட்ட ரீதியாகவும் சில உரிமைகள் இருக்கின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளைக்கூட வளர்ப்பது, கையாள்வது என்பன தொடர்பான ஜீவகாருண்ய, சட்ட வரையறைகள் உண்டு. அப்படிப்பார்க்கும்போது உள்ளுணர்வும் நுண்ணறிவும் உள்ள கணினிகள் தொடர்பாக அவற்றின் நலனைப்பாதுகாப்பது தொடர்பான சிக்கலான சட்டங்களை இயற்றவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று பேராசிரியர் Chalmers கூறுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
