திரையரங்குகளில் வெளியிட்டால் சுமார் 100 கோடி ரூபாவுக்கு வியாபாரம் ஆகக்கூடிய நடிகர் சூர்யாவின் நடிப்பிலும் சுதா கொங்காராவின் இயக்கத்திலும் தயாரான சூரரைப் போற்று திரைப்படத்தை, இதன் தயாரிப்பளராகிய சூர்யா, சுமார் 60 கோடிக்கு, Amazon Prime இன் OTT platform - OTT தளத்திற்கு விற்றிருக்கிறார்.
இதனால் தமிழ்நாட்டின் திரையரங்கு அதிபர்களின் சங்கம் கொதித்துப்போயுள்ளது.

ஏன் திரைப்படங்கள் அரங்குகளுக்கு வராமல் online வழி வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது?
திரைப்படங்களைத் தயாரித்துவிட்டு திரையரங்குகளில் வெளியிட பல மாதங்களாக காத்திருந்த போதும், திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. திறந்தாலும், இன்றைய COVID 19 அச்சம் காரணமாக மக்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. திரையரங்குகளில் மக்கள் கூடுவது தொடர்பாக பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஜூலை மாதமே திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், ஒரு படத்தைப் பார்க்க பல கட்டுப்பாடுகள் உள்ளன.
• ஒவ்வொரு காட்சிக்கும் சுமார் 30/40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
• ஒருவருக்கும் மற்றவருக்குமிடையே பக்கவாட்டிலும் முன் பின்னாகவும் இரண்டு ஆசனங்கள் வெறுமையாக விடப்படவேண்டும்.
• அதே அரங்கில், அடுத்த காட்சி தொடங்குமுன், ஆசனங்கள் எல்லாம் தொற்று நீக்கி கொண்டு, சுத்தம் செய்யப்படவேண்டும்.
• முதல் காட்சியில் பயன்படுத்தப்பட்ட ஆசனங்கள் இரண்டாவது காட்சியில் வெறுமையாக விடப்பட வேண்டும்.
• அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
• ஒருவளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் இருந்தால், காட்சிகளின் ஆரம்பம் staggered என்ற முறையில் முன் பின்னாக தாமதப்படுத்தப்படவேண்டும்.
• அரங்குக்கு வெளியே மக்கள் கூடக்கூடிய இடங்களில் நபருக்கு 4 ச .அடி இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
• contactless ticketing- இணைய வழி டிக்கட்களே முடிந்தவரை விற்பனை செய்யவேண்டும்.
• பார்வையாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
இப்படி அடுக்கிகொண்டுபோகுமளவு ஏராளமான கட்டுப்பாடுகளுடன் தான் இப்போது திரையரங்குகள் இயங்குகின்றன. ஏறக்குறைய திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நாடுகளில் எல்லாம் இதே கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
இதனால் தமிழ் உட்பட்ட இந்தியமொழிப் படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களும் OTT platform என்ற OTT தளத்தில் இப்போது வெளியாகின்றன.

இந்த OTT தளம் என்றால் என்ன?
OTT என்பது Over the top என்பதாகும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பொதுவாக தொலைக்காட்சி நிலையங்களால் ஒளிபரப்பப்படுகின்றன. தொலைக்காட்சி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள cable operators என்ற முகவர்கள் மூலமாகவும் பல நாடுகளில் நிகழ்ச்சிகள் எடுத்துவரப்படுகின்றன. பிரபலமான cable operator கள் சுயாதீனமாக cable வழியாக திரைப்படங்களை , விளையாட்டு நிகழ்ச்சிகளை, இசை நிகழ்ச்சிகளை, செய்தி அறிக்கைகளை கொண்டுவருவதுமுண்டு. இந்த தொலைக்காட்சி நிலையங்கள், cable operator கள் இவர்கள் இருவரையும் ஒதுக்கிவிட்டு அல்லது அவர்களுக்கு ஒருபடி மேலே போய், இணையவழியாக திரைப்படங்களை, மற்றும் web series என்ற இணைய தொடர்களை, ஆவணப்படங்களை, இசை மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக தொலைக்காட்சித்திரைக்கு கொண்டு வருவதைத்தான் OTT- over the top platform என்கிறார்கள்.
இப்போது சர்வதேச ரீதியாக நூற்றுக்கணக்கான OTT தளங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் Netflix, Amazon Prime, Foxtel, Quickflix, Fetch, Disney+, Binge , Stan, என்று பல பிரபலமான தளங்கள் இயங்குகின்றன.
இந்தியாவில் குறிப்பாக Amazon prime video தளத்தின் ஆதிக்கம் அதிகம். அங்கு அதற்கு அடுத்தபடியாக Netflix, Sony liv, Disney+ hot star, voot என்று பல தளங்கள் இயங்குகின்றன.
இந்த தளங்கள், எவ்வாறு வருமானம் ஈட்டுகின்றன?
ஒவ்வொரு தளமும் மாதச் சந்தாவை அல்லது வருட சந்தாவை வாடிக்கையாளரிடம் அறவிடுகின்றன. இதைத்தவிர புதிதாக ஒரு திரைப்படத்தை வெளியிடும்போது மேலதிக க் கட்டணத்தையும் இந்த தளங்கள் அறவிடக்கூடும்.
தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த அளவில், நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் வெளியிடப்படவிருந்த சூழ்நிலையில், அதைத் திரையரங்குகளுக்கு கொண்டுவருவதில் தாமதங்கள, ஏற்பட்டபோது இப்படியான ஒரு ஏற்பாட்டைத்தான் கமலஹாசன் செய்ய முனைந்தார்.
ஆனால் , தமிழ்ப்படங்களைப் பொறுத்த அளவில் OTT தளத்தின் முன்னோடி, நடிகர் சூர்யாதான். ஜோதிகாவின் நடிப்பில் அவர் தயாரித்த ‘பொன்மகள் வந்தாள்’, திரைப்படத்தை 5 கோடிக்கு அவர் Amazon Prime video தளத்திற்கு விற்றார். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் எதிர்ப்பிற்கு இடையே முதன்முதலாக OTT தளத்திற்கு இத்திரைப்படத்தை விற்றார்.

சிறு படங்கள் இப்படி விற்கப்படலாம்; ஆனால் பெரிய ஹரோக்களின் படங்களை விற்கமாட்டார்கள்; கட்டுப்படியாகாது என்று பலரும் சென்னார்கள. அதையும் இப்போது அவரே முறியடித்திருக்கிறார்.
தனது பெரிய பட்ஜட் படமான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை 60 கோடி ரூபாவுக்கு Amazon Prime OTT தளத்திற்கு விற்றிருக்கிறார் சூர்யா. அடுத்தமாதம் இத்திரைப்படம் தொலைக்காட்சித் திரைகளுக்கு நேரடியாக வருகிறது.
தெலுங்கு மலையாள வீடியோ ரைட்ஸ், ஹிந்தி ரீ மேக்கிங் ரைட்ஸ் மூலமாகவும் சில கோடிகள் வரும் என்று சொல்கிறார்கள். மொத்தத்தில் OTT தளம், இப்போது பெரிய பட்ஜட் படங்களுக்கும் கைகொடுக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இந்தச்சந்தர்பத்தில் பல மாதங்களாக காத்திருக்கும் நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பேரம் பேசி வருகிறது Amazon prime video.
விஜயின் ‘மாஸ்டர்’ 200 கோடிக்கு மேல் வியாபாரமாக க்கூடிய திரைப்படம். விஜய் சேதுபதி இதில் இணைந்து நடிப்பதாலும், கைதி திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பற்றிய எதிர்பார்ப்பு உச்சநிலையில் இருப்பதாலும் இந்த திரைப்படம் பற்றி, பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. OTT தளத்திற்கு இதை நிச்சயமாக விற்கமாட்டோம் என்றே தயாரிப்பாளர்கள் கூறிவருகிறார்கள்.
விஜயின் படங்களுக்கு தமிழர் வாழும் பல நாடுகளிலும் மவுசு இருந்தாலும் COVID 19 இற்கு முந்தைய இயல்புநிலை திரும்பினால் மட்டுமே இந்த அளவு வியாபாரமாவது சாத்தியம். அது உடனடியாக நிகழக் கூடிய ஒன்று அல்ல என்ற நிலையில், ஒருகட்டத்தில் 100 அல்லது 125 கோடி ரூபாய்க்கு Amazon Prime இதை வாங்க க் கூடும்.

Bollywood - பொலிவுட்டில் வெளியீட்டுக்குக் காத்திருந்த பல திரைப்படங்கள் இப்போது OTT தளங்களுக்கு வந்துவிட்டன.
Irfan Khan , Radhika Madan நடித்த ANGRESI MEDIUM, Thapsi Pannu நடித்த THAPPAD, Amitab Bachan நடித்த GULABO SITABO, Sanjay Misra நடித்த KAAMYAAB, Anura Kashyap இன் CHOKED, Deepika Padukone நடித்த CHAPAAK, வித்யா பாலன் நடித்த SHAKUNTALA DEVI போன்ற படங்கள் இப்போது OTT ஐத் தஞ்சமடைந்திருக்கின்றன.
ஹாலிவுட்டைப் பொறுத்த அளவிலும் இதே மாதிரியான சூழல்தான் நிலவுகிறது.
385 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தாயாரிக்கப்பட்ட பிரமாண்டமான திரைப்படம் Christopher Nolan இன் Tenet.
ஆஸ்திரேலியா உட்பட 70 நாடுகளில் கடந்த ஆகஸ்ட் 26 ஆந்திகதி திரையரங்குகளில் Tenet வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் லாபம் பார்க்க 500 மில்லியன் சம்பாதிக்கவேண்டும் என்ற நிலையில் முதல் இரண்டு வாரங்களில் 60 மில்லியனை மட்டுமே சம்பாதித்திருக்கிறது இந்த படம். இப்போது வேறு வழியின்றி OTT தளங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள மற்றொரு பிரமாண்டமான திரைப்படம், Walt Disney இன் Mulan. Mulan இந்த மாதம் 4 ஆந்திகதி நேரடியாக Disney + OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் பிரமாண்டம், visual effects, graphics,special effects, sound என்பவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, இது சாதாரண சினிமா திரையரங்கைவிட மிகப் பெரிய திரையரங்கில் வெளியிடப்படவேண்டிய மகா பிரமாண்டமான திரைப்படம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் OTT தளத்தில் வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு Walt Disney தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் இன்றைய நிதர்சனம். Disney + OTT தளம் வழமையான மாத சந்தாவான 9 அமெரிக்க டாலர்களுக்கு மேலதிகமாக இந்த திரைப்படத்திற்கு 40 அமெரிக்க டாலர்களை அறவிடுகிறது.
இதே வரிசையில் பல ஹாலிவுட் படங்கள் OTT தளம் நோக்கி பயணம் செய்ய ஆயத்தமாக இருக்கின்றன.
நேரடியாக தொலைக்காட்சியில் புதிய திரைப்படத்தை வெளியிடுவதை kiss of death, மரணத்தை முத்தமிடுதலுக்குச் சமானம் என்று ஒரு காலத்தில் கூறிய தயாரிப்பளர்கள், இப்போது அதைவிட்டால் வேறுவழியில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
எந்த புதிய திரைப்படத்தையும் தயாரிக்க யாருமே ஆயத்தமாக இல்லை. தயாரிப்பிலிருந்த பல படங்கள் கைவிடப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் web series என்ற இணைய தொடர்களைத் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் OTT தளங்களுக்காக anthology என்ற தொடர்களை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் கனவுத்தொழிற்சாலைகள் விசாலமான திரையரங்குகளை விட்டு விலகி இணையத்தின் வழியாக வீடுகளுக்குள் நுழையும் முனைப்பில் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கிவிட்டன. COVID 19 இன் தாக்கம் பல தொழில்துறைகளையும் பெருமளவில் பாதித்துள்ளது போல dream factory என்ற சினிமா தொழில்துறையையும் விட்டுவைக்கவில்லை.
