SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகளில் நடக்கும் Branch Stacking என்றால் என்ன?

sbs
Source: SBS

4 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

Branch Stacking என்ற குற்றச்சாட்டு காரணமாக விக்டோரிய மாநில அமைச்சர் Adem Somyurek பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.அதைத் தொடர்ந்து விக்டோரிய மாநில Consumer Affairs Minister Marlene Kairouz மற்றும்  Assistant Treasurer Robin Scott ஆகிய இருவரும் தமது பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.  Branch Stacking என்றால் என்ன என்ற கேள்வி பிறக்கிறதல்லவா?  

Branch stacking என்றால்,  முறைகேடான வழிகளில் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது என்று பொதுவாகச் சொல்லலாம்.

sbs
branch stacking Source: SBS

ஒரு அரசியல் கட்சி என்றால் அந்தக்கட்சிக்கு ஏராளமான ஆதரவாளர்கள், அபிமானிகள் இருப்பார்கள் என்பது நடைமுறைதான். ஆனால் இவர்கள் அனைவரும் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால் கட்சி உறுப்பினர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அப்படியானவர்களல்ல. அவர்கள், கட்சியின் தலைமையை, அதன் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, வருடாந்த சந்தா செலுத்தி, உறுப்பினர்களாக இருப்பவர்கள்; உறுப்பினர் அட்டை membership card வைத்திருப்பவர்கள். இவர்கள் தான், கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களித்து கட்சி செல்லவேண்டிய பாதையைத் தீர்மானிப்பவர்கள்.

இதில் மிக முக்கியமான அம்சம் வேட்பாளர் தெரிவு. தேர்தல்களின்போது ஒரு தொகுதியில் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை ஜனநாயக மரபின்படி அந்த branch அல்லது கிளையிலுள்ள அந்த உறுப்பினர்கள்தான் தெரிவு செய்பவர்கள்.

கட்சி ஒன்றுதான் என்றபோதும், ஒரே கட்சிக்குள், பல அணிகள் (factions) உருவாவது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு, கட்சிக்குள் ஏற்படக்கூடிய தனிநபர் செல்வாக்கு, வாய்ப்பின்மை, அங்கீகாரம் இன்மை , கட்சி மேலிடத்தோடு இருக்கக் கூடிய நெருக்கம் என்பன காரணமாக கட்சிகளுக்குள் பொதுவாக இரண்டு மூன்று அணிகள் இருக்கும். 

ஒரு தொகுதியில் தேர்தல் என்று வரும்போது ஒவ்வொரு அணியும் தான் சார்ந்துள்ள அணியின் ஆதரவாளர்களுள் ஒருவரை வேட்பாளராக நிறுத்த முயற்சி செய்யும். அப்போது, அத்தொகுதியில் உள்ள கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவார்.இதனால், கட்சிக்குள் எந்த அணியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அவர்கள் ஆதரிக்கும் ஒரு நபரே கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது நடைமுறை.  

எனவே கட்சிக்குள் இயங்கும் ஒரு அணி தங்களை வலுவுள்ளதாக மாற்ற தங்களின் கட்சியோடு எந்த தொடர்பும் அக்கறையும் ஈடுபாடும் ஆர்வமும் இல்லாதவர்களையும் வலிந்துகூட்டிவந்து  அவர்களைகட்சி உறுப்பினராக இணையச்செய்வதுண்டு. இதி வேடிக்கை என்னவெனில், புதிதாக சேரும் ஒரு உறுப்பினர் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவதால் அவர்கள் கட்சிக்குக் கட்ட வேண்டிய சந்தாவை இந்த அணியினரே கட்டுவர். எனவே புதிதாக கட்சியில் சேர்க்கப்பட்ட நபர் இந்த அணி கூறுவதுபோல,  பிரதான தீர்மானங்கள், வேட்பாளர் தெரிவு என்பன நடக்கும்போது அவர்களது  வாக்குகளை அந்த அணிக்கு சாதகமாக அளிப்பார். இதையே branch stacking என்கிறார்கள்.

Secret recordings of Adem Somyurek allegedly organising branch stacking and using vile language about colleagues and staff were aired by Nine in 2020.
Secret recordings of Adem Somyurek allegedly organising branch stacking and using vile language about colleagues and staff were aired by Nine in 2020. Source: AAP

ஜனநாயக மரபை மீறி இவ்வாறு தெரிவுசெய்யப்படும் நபர் ஒருவர், தேர்தலில் வென்று, public office என்ற சட்ட சபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ உறுப்பினராகமுடிகிறது; ஏன் அமைச்சராக க்கூட முடிகிறது. இது ஐனநாயக மரபிற்கு முரணான செயல்மட்டுமல்ல, சட்டப்படி ( criminal )ஒரு குற்றச்செயலுமாகும். தற்போது விக்டோரிய மாநில அமைச்சர் Adem Somyurek இந்த குற்றச்சாட்டு காரணமாக, பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அத்தோடு இதுபற்றி பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய வேறு பாதிப்புகள் என்ன என்று பார்ப்போம்.

இது மேலும் பல குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும். புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களில்( signature forgery) போலிக் கையெழுத்து இடுதல்; அந்த உறுப்பினர்களைத் திரட்டி  கட்சியில் சேர்ப்பவர்களுக்கு, வெகுமதிகள், பதவிகள், அரசியல் சலுகைகளை வழங்குதல்; இதன் காரணமாக ஊழல் அதிகரித்தல் என்பன இடம்பெற்றிருப்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மறு புறத்தில் பார்க்கும்போது, கட்சிக்குள் கோஷ்டி சண்டைகள் இதனால் பெருகுகின்றன. கட்சிக்கும் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது.

இந்த branch stacking இங்கு பெரிய கட்சிகள் மத்தியில் எவ்வளவு ஆழமாக வேரோடியிருக்கிறது என்று பார்த்தால் நமக்கு தலைசுற்றும்.

இருபெரும் கட்சிகளுக்குமிடையே இந்தப் பிரச்சனை மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. 1980, 1990 களில் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் இது மோசமான கட்டத்தை எட்டிய நிலையில், 2000 ஆம் ஆண்டில், Criminal Justice Commission இது தொடர்பான ஒரு விசாரணையை முன்னெடுத்தது. இதன் காரணமாக Queensland Electoral Commission குவீன்ஸ்லாந்து தேர்தல் கமிஷனுக்கு, புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. Party pre selection என்ற வேட்பாளர் தெரிவை, கட்சி ஒன்று மேற்கொள்ளும்போது, இது தொடர்பான எல்லா ஆவணங்களும் தேர்தல் கமிஷனின் ஆய்விற்கு (audit) சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. Branch stacking செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டால், கட்சி (deregistration) அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும்; கட்சிக்கான அரச நிதிவழங்கல் நிறுத்தப்படும் என்பன போன்ற சட்டங்களும் நடைமுறைக்கு அங்கு வந்தன.

Resident arrive to cast their votes at the Lilly Pilly polling booth during the Australia's general election in Sydney on May 18, 2019. (Photo by Saeed KHAN / AFP)        (Photo credit should read SAEED KHAN/AFP via Getty Images)
Resident arrive to cast their votes during Australia's general election in Sydney Source: AFP

சென்றவருடம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், Campion College என்ற பாடசாலை மாணவர்களை, ஆளும் லிபரல் கட்சி பிரமுகர்கள் அணுகி, அவர்களைக்கொண்டு உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை நிரப்பி, அந்த மாணவர்களின் வாக்குகளைப் பயன்படுத்தி, தாம் விரும்பிய வேட்பாளரைத் தெரிவு செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தமாணவர்ளைத் திரட்டி கட்சி உறுப்பினர்களாக பதிவு செய்ய உதவிய நபருக்கு, அரச பதவி (Government Job) ஒன்றும் கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டிருந்தது.

சமஷ்டி தொகுதியான (Federal seat) Cook தொகுதியில் 2007 ஆம் ஆண்டு  தெரிவு செய்யப்பட்ட லிபரல் உறுப்பினரின் தெரிவு, branch stacking குற்றச்சாட்டு காரணமாக, செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டது.

Branch stacking என்பதை எல்லாக் கட்சிகளுமே தடைசெய்துதான் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மை.

இதற்குத்தீர்வு உண்டா என்ற கேள்வி பிறக்கலாம்.

குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறிப்பிடத்தக்க  பலனைத் தந்திருக்கிறது.

வேட்பாளர் தெரிவு இன்னும் கட்சிகளின் உள்வட்ட (inner circle) விவகாரமாக இருக்கிறது. இது வெளிச்சத்திற்கு வரவேண்டும். ஜனநாயக ஆட்சி முறையில், இது வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது புதுமையல்ல. மூடிய கதவுகளுக்குப்பின்னால் நடக்கும் கட்சிக் கூட்டங்கள், அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்கள் மன்றத்திற்கு வருவதன்மூலமகவே இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now