SKIP TO MAIN CONTENT

ஏன் ஆஸ்திரேலியா குறிவைக்கப்படுகிறது? Cyber attack-இன் பின்னணியிலுள்ள நாடு எது?

பிற நாடு ஒன்றிலிருந்து ஆஸ்திரேலியாவில் Cyber attack - இணையவழி தாக்குதல் நடந்ததாக அரசு பகிரங்கமாக அறிவித்ததே. இதன் பின்னணி என்ன?

Computer hacker or Cyber attack concept background
Computer hacker or Cyber attack concept background Source: Moment RF

5 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

Cybercrime என்ற வார்த்தை இப்போது பரவலாக எல்லா மட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பொருள் என்ன என்பதையும் பொதுவாக பலரும் அறிவார்கள். இதற்கு ஒரு வரைவிலக்கணம் சொல்வதென்றால் கம்பியூட்டர் அல்லது கணினியைப்பயன்படுத்தி, சட்டவிரோதமான காரியங்களைச் செய்தல் என்று எளிமையாகச் சொல்லலாம்.

ஏமாற்றுதல், தகவல் திருடுதல், stealing identities என்ற அடையாளங்களைத் திருடுதல், intellectual property என்ற அறிவார்ந்த உடைமைகளைத்திருடுதல், violating privacy தனிமனித அந்தரங்கத்தில் நுழைதல், Child pornography என்ற பால்ய வயதினர் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்களை பரிமாறுதல் போன்ற குற்றங்களை இழைப்பதற்கு, கணினி தற்போது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வர்த்தகம், பொழுதுபோக்கு மற்றும் அரச நிர்வாகம் போன்ற அனைத்து துறைகளுமே கணனிமயப்படுத்தப் பட்டுள்ளதால் இவற்றுக்கு எதிராக இணையதள மூலமாக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

China reportedly behind cyber-attack on Australian parliament and political parties
Source: Pixabay Darwin Laganzon

தனிமனிதரைக் குறிவைத்து இழைக்கப்படும் குற்றங்கள் அக்குறிப்பிட்ட நபரை அல்லது அவர் சார்ந்த குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கும். ஆனால், வர்த்தக நிறுவனங்கள், அரச நிர்வாகம் போன்றவற்றைக் குறிவைத்து இழைக்கப்படும் குற்றங்கள் முழு நாட்டையும் முடக்கிப் போட்டு செயலிழக்கச் செய்யக்கூடும். ஆஸ்திரேலிய அரசு மற்றும் இங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் என்பவற்றைக் குறிவைத்து இவ்வாறான cyber attack ஒன்றை வெளிநாட்டு அரசு ஒன்று முடுக்கிவிட்டுள்ளதாக பிரதமர் Scott Morrison அண்மையில் அறிவித்திருந்தார்.

எந்த வெளிநாட்டு அரசு அல்லது யார் ஆஸ்திரேலியாவைக் குறிவைத்து இந்த cyber attack நடத்துவதாக அரசு சொல்கிறது?

ஆஸ்திரேலிய அரசின் உத்தியோக பூர்வ அறிவித்தலின் அடிப்படையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிநாடு ஒன்று நடத்த முனைந்துள்ள cyber தாக்குதல்’ என்று பிரதமர் Scott Morrison குறிப்பிட்டிருந்தார். எந்த ஒரு நாட்டையும் அவர் குறிப்பாகச் சொல்லவில்லை. Cyber தாக்குதல்கள் பற்றி அனைவருமே அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே தான் இந்த அறிவித்தலைச் செய்வதாக அவர்குறிப்பிட்டார்.

Scott Morrison has called for a renewed focus on cyber security after a large-scale cyber attack.
Source: AAP

Cyber தாக்குதல்கள் புதிதல்ல என்றபோதும், இந்தத் தாக்குதல்கள், குறிப்பாக பிரதான சிக்கல்களை நமக்கு ஏற்படுத்தக்கூடியவை என்பதால், நாம் நேரங்காலத்தோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் Scott Morrison குறிப்பிட்டார். Critical infrastructures என்று பார்க்கப்படும் விவசாயம், நீர் விநியோகம், அவசரகால சேவைகள், மற்றும் நலத்துறை போன்ற essential services - அத்தியாவசிய சேவைகள் ஆகியவை தமது இணையதளங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் Scott Morrison வலியுறுத்தினார்.

இன்னொரு நாட்டை வெளிப்படையாக குற்றம் சுமத்துவதன்மூலம் இருநாடுகளுக்கிடையே பதட்ட நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பிரதமர் எந்த ஒரு நாட்டின்மீதும் சுட்டுவிரலை நீட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், சீனாதான் இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்பதாக அரசவட்டாரங்கள் ABC ஒலிபரப்பு நிலையத்திற்கு தெரிவித்திருக்கின்றன.

abc
Source: ABC Australia

ஒரு நாட்டின் மீது திட்டமிடப்பட்ட பாரிய அளவிலான தொடர்தாக்குதல்களை எல்லா நாடுகளாலும் மேற்கொள்ள முடியாது. இன்றைய நிலையில், சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற போன்ற பெரிய நாடுகளால் மட்டுமே இவ்வாறான தாக்குதல்களைச் செய்யமுடியும் என்று Australian Strategic Policy Institute இன், Cyber Policy Centre ஐச்சேர்ந்த Senior Analyst , Tom Uren கூறுகிறார். ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட இந்த நாடுகள், எம்மீது cyber தாக்குதல் செய்யவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளாலும் இப்படியான தாக்குதல்களைச் செய்வதற்கான வளங்கள் இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் அந்த நாடுகள் ஆஸ்திரேலியாவை குறிவைக்கும் வாய்ப்பு இப்போது இல்லை என்றே பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில், சீனாவைத்தவிர, வேறு ஒரு நாடு இன்றைய நிலையில் ஆஸ்திரேலியா மீது தாக்குதல் நடத்த முகாந்திரம் இல்லை என்பதே பாதுகாப்பு வட்டாரங்களில் உள்ளவர்களது ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.

சீனா ஆஸ்திரேலியாவைக் குறிவைத்து cyber தாக்குதல்களை நடத்தவேண்டிய தேவை என்ன?

தனி நபர்கள் மூலம் நடத்தப்படும் வழமையான cyber தாக்குதல்கள் இன்னொருவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடனேயே செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது நடத்தும் cyber தாக்குதல்கள் அப்படியானவையல்ல. தகவல்களைத் திருடும் நோக்கத்துடனேயே ஒரு நாடு திட்டமிட்டு மற்றொரு நாட்டின்மீது cyber தாக்குதல்களை நடத்துகிறது.

Corona virus காரணமாக ஏற்படும் covid 19 நோய்க்கு தடுப்புமருந்து கண்டுபிடிப்பது தொடர்பான தகவல்களைத் திருட பிற அரசுகள் பெரும் பிரயத்தனம் செய்வதாக Tom Uren கூறுகிறார். இந்த கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தகவல்கள் மற்றொரு நாட்டின் கையில் கிடைத்தால், அதைப்பெருமளவில் தயாரித்து வர்த்தக ரீதியாக பெரும் பொருள் ஈட்டமுடியும். நாம் அந்த மருந்தைத் தயாரித்து விநியோகிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக மற்றொரு நாடு அதே மருந்தைச் சந்தைப்படுத்துவதால் பெறக்கூடிய லாபம் பல மடங்காக இருக்கும்.

Cyber Attacks
Cyber-security and intellectual property protection Source: Moment RF

மறுபுறத்தில் பார்க்கும்போது, இராணுவரீதியான தாக்குதல் ஒன்றை நடத்தவேண்டிய கட்டத்திற்கு மற்றொரு நாட்டுடனான உறவுகள் பாதிக்கப்படும் நிலையில், அந்த நாட்டை நிலைகுலையச் செய்ய, cyber தாக்குதல் நடத்துவது இப்போதைய tactic போர் வியூகமாக இருக்கிறது. சீனா, தொடர்ந்து வர்த்தக அடிப்படையில் அமைந்த intellectual property அறிவுசார் சொத்துக்களை அபகரிக்க முயன்று வருவதாக ஆஸ்திரேலியா, ஏனைய நாடுகளைப் போலவே, தொடர்ந்து முறைப்பாடுகளைத் தெரிவித்தே வந்திருக்கிறது.

Covid 19 தொற்றுக்குக் காரணமான corona virus சீனாவில் முதன்முதலில் பரவியது தொடர்பாகவும் அதை வெளியுலகத்திடமிருந்து மறைத்தது தொடர்பாகவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நாடுகளுள், ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. அதேபோல, தென்சீன கடற்பரப்பில் பலபகுதிகள் தமக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருவதும் இதனால் அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் இறையாண்மை பாதிக்கப்படுவது தொடர்பாகவும் ஆஸ்திரேலியா குரலெழுப்பியே வந்திருக்கிறது. இதைத்தவிரவும் 5G network என்ற ஐந்தாந் தலைமுறை தொலைத்தொடர்பு பணிகளில், சீனாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா தடைவிதித்திருப்பதும் பிரதான காரணமாகப்பார்க்கப்படுகிறது. Huawei, 5G கட்டமைப்பு மூலமாக சீனா தனது மென்பொருட்களைப்பயன்படுத்தி, நாட்டுக்குள் உளவறியும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு காரணமாக கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் Huawei யின் 5G தொழில்நுட்பத்தை நிராகரித்துள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த சீனா இந்த cyber attack களுக்குப் பின்னணியிள் இருக்கிறது என்று பொதுவாக நம்பப் படுகிறது.

Cyber crimes
Source: Getty Images

சீனாதான் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் உள்ளனவா?

ஒரு குற்றச்செயல் நடந்த இடத்தில் கிடைக்கப்பெறும் தடயங்கள் மூலமாக குற்றவாளியை அடையாளங்காணுதல் என்பது நாம் அறிந்த ஒன்று. நமது சாதாரண கண்களுக்குத் தெரியாத தடயங்கள் தடயவியல் நிபுணர்கள் (forensic experts) கண்களுக்குத் தெரியும். Finger prints என்று பொதுவாக குறிப்பிடப்பட்டாலும் இந்த தடயங்கள் கைரேகை அடையாளங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட குழு இதன் பின்னணியில் இருக்கிறதென்றால், இணையத்தில் அந்த குழு விட்டுச் செல்லக்கூடிய techniques and behaviours தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தாக்குதலின் பாணி என்பவற்றை finger prints என்கிறார்கள். அதே போல எந்த மாதிரியான தகவல்களை திரட்ட முற்படுகிறார்கள், திரட்டும் தகவல்களின் அளவு volume, அணுகும் முறை, தகவல்கள் மட்டும் திருடப்படுகின்றனவா அல்லது system த்தை செயலிழக்கச்செய்கிறார்களா என்பன போன்ற fingerprints களைக்கொண்டு இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடியவர் யார் என்பது தீர்மானிக்கப்படுகிறது. Cyber attack நடத்த அவர்கள் பயன்படுத்தும் software ஐ வைத்தும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்று கணிக்கமுடியும்.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சீனா இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகவே சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஏகோபித்த கருத்தல்ல.

ஆஸ்திரேலிய அரசைப்பொறுத்தவரை, இந்த தாக்குதலை நடத்தியது சீனாதான் என்பது நிருபணமாகும் பட்சத்தில் கூட, வெளிப்படையாக சீனா மீது குற்றச்சாட்டைச் சுமத்த அரசு தயாராக இல்லை. வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளில் ஏற்படக்கூடிய பாதிப்பு கருதி அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று கருதலாம்.

தாக்குதல் நடத்தியது யார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஓநாய்கள் உலவும் வெளியில் ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாதீர்கள் என்பதே மறைமுகமான செய்தி. இணைய பாதுகாப்பை வலுப்படுத்தாத ஆஸ்திரேலிய நிறுவனங்கள், online security ஐ இப்போதே வலுப்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே இந்த எச்சரிக்கையின் பொருளாகும்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now