அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் நமக்கு தேவைதானா? என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்.

நம்மிடம் இப்போது Collins Class என்ற வகையில் அடங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. ஆனால் இவை மிகப் பழைய கப்பல்கள். இந்த கப்பல்களை சேவையிலிருந்து படிப்படியாக அகற்றிவிட்டு புதிதாக 12 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிலிருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக அரசு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சியில் பல தாமதங்கள் ஏற்பட்டன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரம் என்பவற்றால் இயங்கும் மரபு வழியில் வடிவமைக்கப்படும் Collins class வகைக்கு சம மான நீர்மூழ்கிக்கப்பல்களாகும்.

இப்போது ஆஸ்திரேலியா அந்த ஏற்பாட்டில் இருந்து விலகி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கத் தீர்மானித்திருக்கிறது.
Collins Class நீர்மூழ்கிக் கப்பல்களை விட ஆற்றலும் வேகமும் செயல்திறனும் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் நாட்டுக்குத் தேவை என்று பல ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். தென்சீன கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் மேற்குலக நாடுகளின் அதிகாரத்தை இப்பிராந்தியத்தில் நிலைநிறுத்த, ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொழில் நுட்ப அனுசரணையை வழங்கி ஆஸ்திரேலியாவின் கையை வலுப்படுத்துவது அவசியம் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் எண்ணுகின்றன.
இந்த ஏற்பாடு பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிக்கும்போது, ‘எமது ஒத்துழைப்பு மற்றும் பலம் என்பவற்றை மூலதனமாக க் கொண்டு இன்றைய மற்றும் எதிர்காலச்சவால்களை எதிரகொள்ள வழிவகுப்பதே இந்த ஏற்பாட்டின் நோக்கமாகும்’ என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி பிரதமர் Scott Morrison பேசும் போது,
நாங்கள் மனம் மாறவில்லை, தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்கிறோம்
என்றார்.
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீனா, ‘இது முற்றிலும் பொறுப்பற்ற செயல்; பிராந்திய அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைகுலையச்செய்யும் முயற்சி’ என்று சாடியிருக்கிறது.
நியூஸீலந்து பிரதமர் Jacinta Ardern இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது, ‘நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ‘அணு சக்தியைப் பயன்படுத்தவதில்லை’ என்ற கொள்கைக்கு அமைய இந்த அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் நமது கடற்பரப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது’ என்று கூறியிருக்கிறார்.
எந்தெந்த நாடுகளிடம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன என்று அறிவதும் அவசியம்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை யாவும் அணு ஆயுத பலமுள்ள நாடுகளாகும்.

ஆஸ்திரேலியாவிடம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய கடற்படையின் வலிமை அதிகரிக்கும் என்பதோடு இதன்காரணமாக தென்சீன கடற்பரப்பில் அதன் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் என்று Australian Stratagic Policy Institute ஐச்சேர்ந்த Peter Jennings கூறுகிறார். இருந்தபோதும் இந்த கப்பல்கள் தயாராக 20 வருடங்களுக்கு மேல் ஆகலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இது சீனாவின, ஆக்ரமிப்பை தடுத்து நிறுத்தும் முயற்சி என்று பொதுவாக நம்பப்பட்டாலும் 1960 முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றி ஆஸ்திரேலியா யோசித்து வந்துள்ளது என்று செய்திகள் கசிந்துள்ளன.
இந்த நீர்மூழ்கிக்கப்பல்கள் அணுசக்தியால் இய்ஙகுபவை என்பது தொடர்பாக பல பிரச்சனைகள் உள்ளன.
அணு சக்தியால் இயங்கும் கப்பல் என்பது வேறு. அணுஆயுதங்களைக் கொண்ட கப்பல் என்பது வேறு. இவற்றிற்கிடையே வித்தியாசம் உண்டு. ஆஸ்திரேலியா நிர்மாணிக்கவிருப்பது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மட்டுமே. ஆவற்றில் nuclear reactor அணு உலைகள் இருக்கும். இவை டீசல் மற்றும் மின்சாரத்திற்குப் பதிலாக energy என்ற ஆற்றலை வழங்கும். இந்த ஆற்றல் காரணமாக அவற்றின் வேகம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, அவை quieter சப்தமில்லாமல் பயணிக்கும், அடிக்கடி நீருக்குமேல் வரவேண்டிய அவசியமிருக்காது, அத்தோடு எரிபொருள் நிரப்பவேண்டிய தேவையுமில்லை.
nuclear reactor அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பானவை?
ஆனால் இந்த இந்த nuclear reactor அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
ரஷ்யாவில் Chernobyl என்ற இடத்தில் 1986 இல் நிகழ்ந்த அணுசக்தி உற்பத்திநிலைய விபத்து பற்றிய நினைவுகள் இன்னும் பூதாகரமாக மனதில் இருக்கும் நிலையில் , இந்த அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் ‘மிதக்கும் Cheronobyl’கள் என்று Greens கட்சியின் தலைவர் Adam Bandt கூறியுள்ளதோடு இதை தமது கட்சி கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெளியேறும் ‘nuclear waste’ அணுக்கழிவுகள் எப்படி அப்புறப்படுத்தப்படும், இந்த கப்பல்கள் சேவையிலிருந்த ஓய்வு பெறும்போது எப்படி அப்புறப்படுத்தப்படும் என்பது பற்றிய விவரங்கள் எதிர்வரும் 18 மாதங்களில் தீர்மானிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
பிரான்ஸிலிருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற இதுவரை இடம்பெற்ற ஏற்பாட்டிலிருந்து ஆஸ்திரேலியா விலகுவது குறித்து பிரான்ஸ் அரசு பலத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது.

90 பில்லியன் டாலர்கள் செலவில் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸில் Naval Group என்ற நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள செய்யப்பட்டிருந்த ஏற்பட்டிலிருந்து விலகுவதன் காரணமாக ஆஸ்திரேலியா செலுத்தவேண்டிய நஷ்ட ஈடு இரண்டரை பில்லியன் டாலர் அளவில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஏற்பாட்டிலிருந்து ஆஸ்திரேலியா விலகுவது stabbed in the back ‘முதுகில் குத்துவதற்கு சமமானதாகும்’ என்று பிரானஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
‘பிரதமர் என்ற முறையில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு எது அமைவானதோ அதற்கு அமைவான முடிவை எடுக்கவேண்டியது என் பொறுப்பாகும்; பிரானஸும் இதையே செய்திருக்கும்’ என்று பிரதமர் Scott Morrison தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கு மிடையேயான நல்லெண்ணம் ஒத்துழைப்பு என்பவற்றிற்கு எதிரான தீர்மானமாக இருக்கிறது’ என்று பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்று சொல்கிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
