நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருக்கும் பிரபலமான app- செயலி WhatsApp. இணைய வழி வழங்கப்படும் இலவச தகவல் பரிமாற்ற சேவைதான் WhatsApp என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
Cellular என்ற ‘radio frequency’, வானொலி அலைவரிசை வழியாகவே மொபைல் தொலைபேசி மூலம் ஒருவரோடு ஒருவரைத் தொடர்புபடுத்துகிறது. ஆனால் wi-fi என்ற தொழில்நுட்பம், wireless fidelity என்ற தொழில் நுட்பத்தினூடாக இணைய வழித்தொடர்பை ஏற்படுத்துகிறது. Wi-fi signals-சமிக்ஞைகள் router என்ற கருவி ஊடாக smart phones, smart TV, tablet கணிணி, laptop கணிணி என்பவற்றுக்கு, தரவுகளை எடுத்துச்செல்கிறது. இந்த Wi-fi தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தவும், வீடியோக்களைப்பகிரவும் message என்ற குறுஞ்செய்திகளைப் பகிரவும் உதவும் app அல்லது செயலிதான் WhatsApp என்பது.

இதை ஒருவர் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். இதன் வழியாக எந்த கட்டணமும் இல்லாமல் சர்வதேச ரீதியாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தலாம்; மற்றும் குறுஞ் செய்திகளை அனுப்பலாம்; வீடியோக்களை, படங்களை அனுப்பலாம். இலவசம் என்று சொல்லுகிறபோது, இதன்போது செலவாகும் data களுக்கான கட்டணத்தை செலுத்தவேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2009 இல் இந்த app அறிமுகப்படுத்தப்பட்ட போதும், 2014 இல் Facebook இந்த செயலியை வாங்கிய பின்புதான் இது பிரபலமானது.
இன்றைய நிலையில் உலகில் பெரும்பான்மை மக்களால் பயனபடுத்தப்படும் செயலியாக இப்போது WhatsApp இருக்கிறது. சுமார் 200 கோடி பேர் WhatsApp ஐப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்போது WhatsApp பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எவை?
WhatsApp பற்றி இப்போது சில விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டாலும் WhatsApp இன் வலிமை, என்று பார்க்கிற போது, end to end encryption என்ற உறுதியை அது வழங்குவதையே அதன் பிரதான வலிமை என்று பார்க்கவேண்டும்.

Encryptions என்பதை ‘மறைக்குறியீட்டாக்கம்’ என்று சொல்வார்கள். அதாவது நாம் WhatsApp மூலமாக அனுப்பும் செய்திகள், படங்கள், நிகழ்த்தும் உரையாடல்கள என்பன மறைக்குறியீட்டாக்கம் செய்யப்படுவதால், நாம் யாருக்கு அனுப்புகிறோமோ அவரைத்தவிர வேறு யாராலும் decrypt செய்ய, அதாவது பிரித்தறிந்து விளங்கிக் கொள்ள முடியாது- WhatsApp உரிமையாளர்களாலோ அல்லது Facebook நிறுவனத்தாராலோ கூட முடியாது.
இதுதான் WhatsApp இன் வலிமை. ஆகவே நாம் பரிமாறும் தகவல்களைப் பொறுத்த அளவில் இன்றைய நிலையிலும் கூட அது பாதுகாப்பானது என்றே சொல்லவேண்டும்.
ஆனால் நாம் வலதுகையை நீட்டி இலவசமாக ஒன்றைப் பெறும்போது, நாம் நமது சுதந்திரத்தை மறுகையால் தாரைவார்த்துக்கொடுக்கிறோம் என்பதுதான் உண்மை. WhatsApp ஐ இலவசமாகப் பெறும்போது, நாம் தாரை வார்த்துக்கொடுப்பது நமது privacy என்ற அந்தரங்கம் அல்லது தனிமனித இறைமை.

நமது தொலைபேசி இலக்கம், நமது contact list - யார் யாருடன் நாம் தொடர்புகொள்கிறோம் என்ற விவரம், நமது தனிப்பட்ட தகவல்கள்- user information, profile picture, profile name, status message இவையனைத்தையும் WhatsApp அமைப்பு மட்டமல்ல, Facebook மற்றும் அதனுடைய சகோதர நிறுவனங்கள் Instagram, Messenger போன்றவை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்குத்தடையில்லை.
WhatsApp மூலமாக வெளியே செல்லும் செய்தி encrypt செய்யப்பட்டாலும் அதன் நேர் வடிவம் நமது mobile phone இலோ அல்லது கணிணியிலோ அப்படியே இருக்கும். அத்தோடு Facebook, Google நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள ஏற்பாட்டின்படி, Google cloud சேவையை அது பெறுவதால் அதிலும் இந்த தரவுகள் நேர்வடிவமாகவே பதிவாகும். இவற்றை hackers என்ற இணைய ஊடுருவல் செய்பவர்கள் எளிதில் திரட்டிக்கொள்ளமுடியும். அதே நேரத்தில் cloud இல் பதிவாகும் தகவல்கள், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக அரசிடம் பகிரப்படவும் கூடும்.
இதைத்தவிரவும், WhatsApp செயலியைத் தரவிறக்கும்போது சரியான app ஐத் தரவிறக்காவிட்டால், போலி app கள் மூலமாக நமது தகவல்கள் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடும்.
இதற்கு மாற்றாக அதாவது நமது தனிமனித இறைமை அல்லது அந்தரங்கத்தைப் பாதுகாக்க உதவும் வகையில் சந்தைக்கு வந்துள்ள apps கள் என்று எவற்றைச் சொல்லலாம்?
இப்போது Signal, Threema, Telegram, Wire, Riot.IM ஆகியவற்றைச் சொல்லலாம் . இவை சில காலமாகவே சந்தையில் இருக்கின்றன. தற்போது WhatsApp இற்கு எதிரான விமர்சனங்கள் வெளிவரும் நிலையில் இவற்றை பலர் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

முதலில் Signal ஐ எடுத்துக்கொண்டால் இதுவும் இலவச app தான். உறுதியான encryption என்ற தகவல் மறைக்குறியீட்டாக்கத்தைக் கொண்டது. இதை hackers செய்பவர்களாலும் கூட decrypt செய்யமுடியாது என்ற உறுதி வழங்கப்படுகிறது. Voice call, video call போன்ற சௌகர்யங்கள் இதிலும் உண்டு. எல்லா mobile platform களிலும் பயன்படுத்தக்கூடியது. Desktop கணிணிகளிலும் தரவிறக்கக்கூடியது.
அத்தோடு பயன்படுத்துபவர் நிர்ணயம் செய்யும் கால அளவில் எல்லா தகவல்களும் உபகரணத்திலிருந்து முற்றாக அழிந்து போகும். இதன் குறைபாடு என்ற பார்க்கிற போது emoji என்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படங்கள் இதில் இல்லை என்பது மட்டுமே.
அடுத்து Threema என்ற app ஐப் பார்த்தால், இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

1. Contact information மற்றும் group information என்பவை உங்கள் உபகரணத்திலேயே இருக்கும். பகிரப்படமாட்டாது. பகிரப்படும் தகவல் ஒருவரைச் சென்றடைந்ததும் அந்த தகவல் உங்கள் உபகரணத்தில் முற்றாக அழிந்து போகும்.
2. நமது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துவதற்கு பதிலாக Threema ID என்ற ஒரு 8 digit எண்ணைப் பயன்படுத்தலாம். உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.
3. பகிரப்படும் தகவல்களுக்கு மேலதிகமாக, உங்கள் status message ஐயும் Threema encrypt செய்கிறது.
4. ஒரு குறிப்பிட்ட செய்தியை அல்லது உரையாடலை, password மூலமாக பாதுகாக்க முடியும்.
இது privacy laws என்ற சட்டங்கள் வலுமையாக இருக்கும், மற்றும் தனிமனித இறைமைக்கு பெயர் பெற்ற, சுவிட்சலாந்தில் இருந்து இயங்குகிறது. இது இலவச app அல்ல என்பது பிரதான விமர்சனமாகும்.
Telegram என்ற app இன் சாதக பாதகங்கள் எவை?Image
இதை சுமார் 40 கோடி மக்கள் இப்போது பயன்படுத்துகிறார்கள். இதை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். இது cloud based செயலியாகும்.
Signal இல் உள்ள எல்லா சௌகர்யங்களும் இதிலும் உண்டு. உரையாடல்கள் மற்றும் செய்திகள் எங்கும் களஞ்சியப்படுத்தப்படாமல் இருக்க, encryption ஐ, பயன் படுத்துபவர் முடுக்கிவிடவேண்டும்.
Encryption முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதும் telegram பயன்படுத்தும் மறைக்குறியீட்டு முறை, அவர்களது சொந்த முறை என்பதும் விமர்சனங்களாக முன் வைக்கப்படுகின்றன.

Wire என்ற செயலியிலும் முன்பு குறிப்பிட்ட செயலிகளில் உள்ள அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் கட்டமைப்புகள் இருக்கின்றன. இது European Data Retention Laws என்ற சட்டங்களுக்கு அமைவானது. தனியாருக்கான இலவச செயலியும் வர்த்தகத் துறைக்கான கட்டணம் அறவிடப்படும் செயலியும் உண்டு. Screen sharing வசதியுமுண்டு. 8 உபகரணங்களில் சம காலத்தில் பயன்படுத்தும் வசதியுமுண்டு. Hackers கள் ஊடுருவ முடியாத அளவு பாதுகாப்பு இல்லை என்பது இதுபற்றிய பிரதான விமர்சனமாகும்.
Riot.IM என்ற செயலியைப்பார்க்கும் போது, voice over internet protocol, video calling வசதிகளும் தொலைபேசி எண்ணுக்கு பதிலாக ID இலக்கத்தைப்பயன் படுத்தும் சௌகர்யம் என்பனவும் இதிலும் உண்டு. இதிலும் encryption தனியே முடுக்கிவிடப்பட வேண்டும் என்பது முன்வைக்கப்படும் விமர்சனமாகும்.
இவற்றைத்தவிர, healthcare என்ற நலத்துறையினர் பயன்படுத்தும் Siilo வையும் குறிப்பிடலாம்.

Facebook க்கு சொந்தமான, பல காலமாக இயங்கிவரும் Messenger ஐ100 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். WhatsApp இல் உள்ள எல்லா functions களும் இதில் உண்டு. நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படங்கள் மற்றும் video க்கள், 24 மணித்தியாலத்தின் பின் அழிந்து போகும் என்பது பாதுகாப்பு தொடர்பாக, சாதகமான விடயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் WhatApp இன் இடத்தை எந்த புதிய செயலி பிடிக்கக்கூடும்?
இப்போது சந்தையிலுள்ள பல செயலிகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது Signal, Telegram என்பவற்றை பலரும் நாடக்கூடும். இருந்தபோதும் WhatsApp மற்றும் Messenger என்பவற்றின் இடத்தைப்பிடிப்பது இலேசல்ல. அதேவேளையில், WhatsApp தனது செயலி தொடர்பாக, தனிமனித இறைமையைப் பேண வழிவகுக்கும் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்றும் எதிர்பார்க்கலாம்.
