ஆஸ்திரேலியாவில் அடுத்தமாத நடுப்பகுதியிலிருந்து கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு சாத்தியமுள்ளதா என்ற கேள்வி நமக்கு எழக்கூடும்.
ஆனால் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் விமானப்பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தனிமைப்படுத்தல் ஏற்பாடுகள் இவ்வாண்டு முழுவதும் தொடரக்கூடும் என ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையின் தலைவர் பேராசிரியர் Brendan Murphy அண்மையில் தெரிவித்திருந்தார்.
இக்கருத்தை வழிமொழிந்துள்ள ஆஸ்திரேலிய தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Paul Kelly, சர்வதேச விமானப்பயணங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பது கடைசியாக மேற்கொள்ளப்படும் ஒரு அம்சம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும் ஏனைய நாடுகளில் நிலைமை எப்படியிருக்கும் என்பது தெரியாததால், சர்வதேச விமானப்போக்குவரத்தை உடனடியாக ஆரம்பிப்பது பொருத்தமற்றது எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் Paul Kelly, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் கிருமிகளை ஆஸ்திரேலியாவுக்குள் எடுத்துவருவதற்கான ஆபத்து அதிகமுள்ளதாக கூறினார்.
இதுஒருபுறமிருக்க கொரோனா கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் வெவ்வேறு மாநிலங்களும் அனுமதிக்கும் எண்ணிக்கைக்கேற்ப நாடுதிரும்புகின்றனர்.
விமானப்பயணம் மேற்கொள்வதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் கோவிட் சோதனையை மேற்கொண்டு எதிர்மறை முடிவு கிடைத்ததை உறுதிசெய்தால் மாத்திரமே இவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேநேரம் வெளிநாட்டிலிருந்தபோது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பும்போது கட்டாய தனிமைப்படுத்தல் உட்பட ஏனைய விதிகளுக்கு கட்டுப்பட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.