ஆஸ்திரேலியர்கள் முன்புபோல வெளிநாடு சென்று வரக்கூடிய நிலைமை
அடுத்த வருட நடுப்பகுதி அளவில் சாத்தியமாகலாம் என்பது அரசின் கணிப்பாக இருக்கிறது. குவாண்டாஸ் போன்ற விமான நிறுவனங்களும் இதே கணிப்பைத்தான் சொல்கின்றன.
விமானப் பயணங்களின் இயல்புநிலை அடுத்தவருட நடுப்பகுதி அளவில் ஏற்படலாம் என்றும் கூற இயலாது. ஒரு சில பயணங்கள் மேற்கொள்ளப்படும் சாத்தியங்கள் அப்போது ஏற்படக்கூடும். IATA என்ற International Air Travel Association சர்வதேச விமான போக்குவரத்துக்கழகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் covid 19 இற்கு முந்தைய இயல்பானநிலைக்கு வெளிநாட்டுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுவது 2024 ஆம் ஆண்டுக்கு முன் சாத்தியமில்லை என்று தெரிவித்திருக்கிறது. இதையே பயணத்துறையில் உள்ள நிறுவனங்களும் சொல்கின்றன. அப்படி என்றால் நாம் இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்கவேண்டிவரலாம்.

Source: AAP
செல்லவும் முடியாது வரவும் முடியாது
வானமே எல்லை, எல்லாமே நம் பிறப்புரிமை என்றிருந்த நிலையை covid 19 முற்றிலுமாகப் புரட்டிப்போட்டுவிட்டது. கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தவையெல்லாம் சட்டென்று, கிட்டாதவையாகிவிட்டன. வருடத்திற்கு ஆகக் குறைந்தது, இரண்டு தடவை வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டவர்களெல்லாம் கூட, நமது கடவுச்சீட்டின் நிறம் என்ன என்பதை இப்போது மறந்துபோய்விட்டார்கள். விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்லமுடியாத நிலை மிக மோசமானதல்ல என்றபோதும் தமது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதநிலை, குறிப்பாக தமது வயதான பெற்றோரைப் பார்க்கவோ அல்லது சடுதியாக அவர்கள் இறந்துபோனால் அவர்களது இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ளவோ கூட முடியாத நிலை மிகத் துயரமானது.
இன்றைய நிலையில் சிறப்பு அனுமதி பெற்றாலொழிய ஆஸ்திரேலிய குடிமகன்/ள் ஒருவர் வெளிநாடு செல்லமுடியாது; இவ்வாறு அவசர காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களுள் 75 சதவீதமானோரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய எல்லைகள்-borders மூடப்பட்டிருப்பதால் ஆஸ்திரேலிய குடிமகன்/ள் அல்லது permanent residents என்ற நிரந்தர வதிவுரிமை உள்ளவர்களைத்தவிர வேறு யாரும் நாட்டிற்குள் நுழையவும் முடியாது. வெளிநாடுகளில் இருந்து இங்கு வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த 371000ஆஸ்திரேலியர்கள் கடந்த 5 மாதங்களில் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டுருக்கிறார்கள். இன்னும் 18000 பேர் இங்கு வந்து சேர்வதற்காக வெளிநாடுகளிலுள்ள ஆஸ்திரேலிய ஸ்தானிகராலயங்களுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

Source: AAP
விமானங்களுக்கு இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள்
Qantas , Singapore Airlines, Etihad Airlines, Qatar Airlines, Emirates, Air New Zealand, Cathay pacific போன்ற விமானங்கள் இன்றும் இயங்குகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலியர்களை இங்கு கொண்டுவரும் நோக்கத்திலும், சொந்தநாடுகளுக்கு செல்லமுடியாமல் இங்கு இருக்கும் வெளிநாட்டவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றிசெல்லும் நோக்கத்திலும் செயல்படுகின்றன. இதைத்தவிர அவசர மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி பெற்றவர்கள் பிரயாண முகவர்கள் மூலமாக charted flights என்ற விசேடமாக ஏற்பாடு செய்து கொண்ட விமானங்கள் மூலமாக பயணிக்கிறார்கள்.
பல விமானங்களில் 50 அல்லது 60 பயணிகளுக்குமேல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் பெரும்பாலும் one way என்ற ஒருவழி பயணக்கட்டணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்தக்கட்டணங்கள் இருவழிக்கான பயணக்கட்டணங்களை விட மிக அதிகம். சிட்னி விமான நிலையத்தில் ஒருநாளைக்கு 350 பயணிகள் மட்டுமே இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.ஒரு விமானம் 50 பேரை மட்டுமே ஏற்றிவரமுடியும். பயணிகளின் எண்ணிக்கையில் 97 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போதைய நிலையில் மெல்பர்ன் மற்றும் ஹோபார்ட் விமான நிலையங்கள் வெளிநாட்டுப்பயணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. Brisbane, Perth மற்றும் Adelaide விமான நிலையங்களில் வாரத்திற்கு 500 பயணிகள் மட்டுமே வந்திறங்கமுடியும்.
Domestic flights என்ற உள்நாட்டு விமானசேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயல்படுகிறது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கையில் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எல்லைகளை மூடியுள்ள மாநில நகரங்களில் உள்ளூர் விமான சேவைகளும் தடைசெய்யப் பட்டுள்ளன. இவற்றைத்தவிர cargo planes என்ற சரக்குவிமானங்கள் பல வெளிநாடுகளிலிருந்து தடையின்றி வந்து செல்கின்றன.
கட்டாயம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

passengers walking at sydney international airport Source: AAP
• முதலில் Home Affairs எனப்பாடும் உள்துறை அமைச்சில் தகுந்த காரணங்களைக் காட்டி விண்ணப்பித்து நாம் அனுமதி பெறவேண்டும்.
• ஒருவர் எந்தநாட்டுக்குப் போகிறாரோ அங்குள்ள நிலைமைக்கு அமைய அவர் 14 தினங்கள் அங்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டிவரலாம்.
• மீண்டும் அவர் ஆஸ்திரேலியா திரும்பும் போது தனது சொந்தசெலவில் அரசு தீர்மானிக்கும் ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும்.
• இந்தப்பயணத்தின்போது covid 19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருக்கிறது என்பதால் அதையும் அவர் எதிர்கொள்ள வேண்டும்.
• இவையெல்லாம் எதிர்கொள்ளத் தயார் என்றாலும் அடுத்தாக உள்ள பிரச்சனை: பயணம் செய்ய விமான டிக்கட். அது கிடைப்பது எளிதல்ல. Charted flights களுக்கு போதுமான பயணிகள் சேரும்வரை புறப்படும் நாள் நேரம் தீர்மானிக்கமுடியாமல் இருக்கும்.
• பல நாடுகள் இப்போது transit என்ற இடையில் தங்கும் வசதிகளை வழங்குவதில்லை.
• இடையில் எரிபொருள் நிரப்ப நிறுத்தும்போது பயணிகள், விமான நிலையத்திற்குள் நுழையமுடியாது.
• பயணக்கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. Return ticket வசதிகள் இப்போது இல்லை. One way என்ற ஒருவழி டிக்கட்டுகளை மட்டுமே வாங்கமுடியும். குறிப்பாக, Singapore Airline மூலமாக charted flight ஒழுங்குசெய்து பயணிக்கும் போது சென்னைக்கான ஒருவழிக்கட்டணம் 2200 ஆஸ்திரேலிய டாலர்கள். கொழும்பிற்கான கட்டணமும் ஏறக்குறைய இதே அளவுதான். விமான நிறுவனத்தைப் பொறுத்து இந்த கட்டணம் வேறுபடலாம்.

Source: AAP
வெளிநாடுகளில் நடைபெறும் விமான பயணங்கள்
• அமெரிக்காவில் சுமார் 70 சதவீதமான விமானங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.
• ஐரோப்பாவில் பல நாடுகளில் எல்லைகள் மூடப்படாத காரணத்தால் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
• பிரிட்டனில் தினமும் 1000 இற்கு மேற்பட்ட Covid 19 நோய்த்தொற்றாளர்கள் பற்றி அறிக்கைகள் வந்தபோதும் கூட, சர்வதேசரீதியாக 68 நாடுகளில் இருந்து பயணிகள் Quarantine நிபந்தனை ஏதுமின்றி அங்கு வந்து செல்கிறார்கள். COVID-19 hotspot என்று கணிக்கப்படுகிற Spain மற்றும் France ஆகிய நாடுகளுக்குக் கூட பிரித்தானியர்கள் சென்று வருகிறார்கள்.
• ஐரோப்பிய நாடுகளில் மக்கள் வீட்டுக்குள் அல்லது நாட்டுக்குள் முடங்கிக் கிடப்பது தொடர்பாக தங்களது விரக்தியையும் அதிருப்தியையும் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியதன் காரணமாக விமானப் பயணம் என்பது அரசியலாக்கப்பட்டுவிட்டது.
• பொதுவாக சர்வதேசரீதியாக பயணிகளின் எண்ணிக்கையில் 90 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சில நாடுகள் covid 19 தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நாடுகளோடு air corridor என்ற திட்டத்துடன் அந்த நாட்டோடு மட்டும் விமான போக்குவரத்தை நடத்திவருகின்றன.

Source: Unsplash/Suhyeon Choi
மீண்டும் நாம் வானில் பறப்போம்
COVID-19 இற்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதில்தான் நாம் எவ்வளவு விரைவாக விமானப் பயணத்திற்கு திரும்புவது அமையும். தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் உள்ளது என்பது உறுதியான நிலையில் இதை செலுத்திக்கொண்டவர்கள் அச்சமின்றி வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ள முன்வருவார்கள். அந்த நம்பிக்கை திடீரென்று உருவாகக் கூடிய ஒன்றல்ல. இதற்கு சில வருடங்கள் எடுக்கலாம்.
இதைத்தவிர, Business class என்ற சொகுசு கூடிய ஆசனங்கள் எவ்வளவு விற்பனையாகின்றன என்பதைப்பொறுத்தே விமானங்கள் இயங்கும். சராசரியாக 12 சதவீதமான ஆசனங்களே business class இற்காக ஒதுக்கப்பட்டாலும், விமானம் ஈட்டும் லாபத்தின் 72 சதவீதம் business class விற்பனைமூலமாகவே வருகிறது. இதனால் business class ஆசனங்களுக்கு தேவை ஏற்படவேண்டும். இன்றைய நிலையில் zoom மற்றும் team என்ற apps மூலமாக வெளிநாடு போகாமலேயே வர்த்தகம் மற்றும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களைச் செய்து உடன்பாடுகளை எட்ட வர்த்தக மற்றும் அரசியல் பொருளாதார வட்டாரங்கள் கற்றுக்கொண்டுவிட்டன. பெரும் பொருட்செலவில் தமது பிரதிநிதிகளை வெளிநாடு அனுப்பவேண்டுமா என்ற கேள்வி எழுவது இயல்பு. இவை எல்லாவற்றையும் கடந்தால்தான் Covid 19 இற்கு முந்தைய இயல்பு நிலை திரும்பும்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
