‘ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளமுடியாது’ என்ற தடை இப்போதும் அமுலில் இருக்கிறது. ஆஸ்திரேலிய பிரஜைகளும் permanent residents என்ற நிரந்தர வதிவிட அந்தஸ்து உள்ளவர்களும் இந்த தடைக்குள் அடங்குவார்கள்.இந்த தடையை விலக்கிக்கொள்வது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்தத் தடைகாரணமாக, cruise ships என்ற உல்லாசக்கப்பல்களும் நாட்டின் எந்த துறைமுகத்திற்குள்ளும் நுழையமுடியாது.
அத்தியாவசிய காரணங்களைத்தவிர வேறு காரணங்களுக்காக ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளமுடியாது என்பதே இந்த தடையின் பொருளாகும். Holiday என்ற விடுமுறையைக் கழிப்பதற்காக மேற்கொள்ள உத்தேசிக்கும் பயணங்கள் அத்தியாவசிய பயணங்களாகக் கருதப்படமாட்டாது. அத்தியாவசிய காரணங்களுக்காக வெளிநாடு செல்ல, Department of Home Affairs என்ற உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.
இந்த ஆண்டு முழுவதும் இந்தத் தடை பெரும்பாலும் அமுலில் இருக்கும் என்றும் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் covid 19 தடுப்பு மருந்து விநியோகம் எவ்வளவு வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே இந்த தடையை தளர்த்துவது அல்லது நீக்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நலத்துறைக்கான செயலாளர் Brendan Murphy தெரிவித்திருக்கிறார்.
அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூர் மற்றும் நியூஸீலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகின்றபோதும், இது தொடர்பாக எந்த அறிவித்தலையும் இதுவரை செய்யவில்லை. இதுபற்றி சென்ற வாரம் கருத்து தெரிவித்த துணைப்பிரதமர் Michael McCormack பயணிகள் covid 19 தடுப்புமருந்தை ஏற்றிக்கொண்டுள்ள பட்சத்தில் தனிமைப்படுத்தல் தேவைகள் இருநாடுகளாலும் தளர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Dr. Brendan Murphy, Secretary of the Department of Health Source: AAP
அத்தியாவசிய தேவைக்காக வெளிநாடு செல்ல அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்றால் அத்தியாவசிய தேவைகள் என்றால் என்ன என்பது பற்றிய பட்டியல் ஏதும் உண்டா?
இல்லை. ஆனால், சில நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
1. கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட குழுவினருக்கு மருத்துவ உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்காக.
2. தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்காக.
3. ஆஸ்திரேலியாவில் பெறமுடியாத அல்லது இல்லாத வைத்திய சிகிச்சை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக.
4. தவிர்க்கமுடியாத அவசரமான சொந்த காரியமொன்றுக்காக.
5. மனிதாபிமான அல்லது ஜீவகாருண்ய அடிப்படையில் அமைந்த ஒரு காரணத்திற்காக.
6. உங்கள் பயணம் ஆஸ்திரேலிய தேசிய நலன் தொடர்பானது என்ற காரணத்திற்காக.

Source: AIR NZ
நியூஸீலாந்து மற்றும் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு Travel Bubble என்ற அடிப்படையில் அதாவது ‘இருநாடுகளுக்கிடையே நேரடி விமானசேவையும் இருநாடுகளிலும் தனிமைப்படுத்தல் இல்லாத அனுமதியும் என்ற அடிப்படையில் அமைந்த பயணங்கள்’ பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. இத எந்த அளவில் இருக்கிறது?
நியூஸீலாந்து -ஆஸ்திரேலியாவுக்கிடையேயான travel bubble திட்டம்பற்றி எதிர்வரும் ஏப்ரல் 6ஆந்திகதியன்று நியூஸீலாந்து பிரதமர் Jacinta Arden அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில், தெரிவு செய்யப்பட்ட சில மாநிலங்களுக்கிடையே மட்டுமே நிகழும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது நியூஸீலாந்து குடிமக்கள் மட்டும் ஆஸ்திரேலியா வந்து செல்ல வழிவகுக்கும் one way travel bubble திட்டம் அமுலில் இருக்கிறது.
ஆசியாவில் சில நாடுகளுக்கும் சில பசிபிக் பிராந்திய நாடுகளுக்குமிடையேயான travel bubble திட்டம்பற்றி சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் Scott Morrison ஆர்வம் தெரிவித்திருந்தபோதும் இது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கான தடை இன்னும் நீடிக்கிறதா?
ஆம். வெளிநாட்டு உல்லாசப்பயணிகள்- நியூஸீலாந்து தவிர்ந்த உல்லாசப்பயணிகள்-வருவது தடைசெய்யப்பட்டே இருக்கிறது. வெளிநாட்டிலுள்ள ஆஸ்திரேலிய பிரஜைகள் மற்றும் நிரந்தர வதிவிட அந்தஸ்துள்ளவர்கள் நாட்டிற்குள் வரலாம். இருந்தபோதும் இதுதொடர்பான நிலைமைகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டுவருவதால் வெளிநாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் அருகிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகங்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மிக சொற்பமான விமான சேவை நிறுவனங்களே சேவையில் இதற்காக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. அத்தோடு இங்கு வருபவர்கள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும்.

Incoming passengers are screened by police at Brisbane Airport Source: AAP
வெளிநாட்டுக்குச்செல்ல விமான சேவை இப்போது நடத்தப்படுகிறதா?
Singapore airlines, Etihad, Emirates, New Zealand, Garuda, Qantas போன்றவை சில விமானங்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளன. இவை நேர அட்டவணையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இங்கிருந்து தமது நாடுகளுக்குச் செல்லும் வெளிநாட்டவர்களும் அத்தியாவசிய தேவைக்காக அனுமதிபெற்று வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களும் இந்த சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதைத்தவிர charted flights என்ற அடிப்படையில் குழுக்கள் இணைந்து ஒழுங்கு செய்துகொள்ளும் விமானங்களும் இங்கிருந்து பயணிக்கின்றன.
தடுப்புமருந்து வழங்கப்படுவது ஏறக்குறைய முடிவுக்கு வரும்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
தடுப்புமருந்து கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டிய நலத்துறை முன்களப்பணியாளர்கள் மற்றும் தாமாக முன்வந்து பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள் ஆகியோருக்கு தடுப்புமருந்துகள் வழங்கப்பட்டபின்னரும் அதன் பாதுகாப்பு, நம்பிக்கை பற்றி ஏற்படக்கூடிய பொதுவான கருத்துக்கள் அடிப்படையிலேயே வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான நம்பகமான நிலைமை ஏற்படும். அதன் பின்னரும், நாம் பயணஞ்செய்ய விரும்பும் நாடுகளில் உள்ள சூழ்நிலை என்பனவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியிருக்கும்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
