ஆஸ்திரேலியக் குடியுரிமை பெறுவதை, ஆஸ்திரேலிய அரசு கடினமாக்குகிறது.
குடியுரிமை கோருபவர்களுக்கு, ஆஸ்திரேலிய கலாச்சாரம் மற்றும் விழுமியங்கள் குறித்த அறிவு இருக்க வேண்டும். குடியுரிமை பெறுவதற்குத் தேர்வாகுவதற்குக் கேட்கப்படும் கேள்விகளுள்,
- "குழந்தைகள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கலாமா?" மற்றும்,
- "எந்த சூழ்நிலையில், உங்கள் சொந்த வீட்டில், உங்கள் மனைவியைத் தாக்குவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது?"
போன்ற கேள்விகளும் அடங்கும்.
புதிதாக அறிவிக்கப்பட்ட மாற்றங்களின் கீழ், இந்த சோதனையில் மூன்று முறை தோல்வியுற்ற ஒருவர், மீண்டும் சித்தி பெற மேலும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
நிரந்தர குடியிருப்பாளர்கள் குடியுரிமை பெற, முன்னரை விட நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.
தற்போதைய சட்டத்தின்படி, நிரந்தர வதிவிடம் பெற்ற ஒருவர், ஒரு வருடத்திலேயே குடியுரிமைச் சோதனைக்குத் தோற்ற முடியும். இனி அதற்கு, நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
இப்படிக் காக்க வைப்பதன் மூலம், குடியேறியவர்கள் ஆஸ்திரேலிய விழுமியங்கள், வாழ்க்கை முறை என்பவற்றுடன் அதிக பரிச்சயமாகிவிடுவார்கள், அவர்கள் சமூக குழுக்களில் பங்களிப்பார்கள், தங்கள் குழந்தைகளை பாடசாலைகளில் சேர்ப்பார்கள் என்றெல்லாம் அரசு கருதுகிறது.
தற்போது, குடியுரிமை சோதனை, 20 பல்தேர்வு வினாக்களைக் கொண்டுள்ளது; அதில் வெற்றி பெற 75 சதவீத மதிப்பெண் பெறவேண்டும்.
சராசரியாக, ஒவ்வொரு வருடமும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 13,000க்கும் அதிகமானோர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுகிறார்கள்.
குடியுரிமை பெறுவதற்கான சோதனையை கடினமாக்குவதால், புகலிடம் கோரி வருவோரும், முதியவரும் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அகதிகள் குழு (The Refugee Council) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் இருந்து அகதியாக வந்து மேற்கு சிட்னியில் வாழும் ஒருவர் ஆங்கிலத்தில் உரையாடுவதற்குத் தான் சிரமப்படுவதாகவும், ஆனால் அந்த சோதனை கடினமாகப் போவதையிட்டுத் தான் கவலைப்படவில்லை என்று கூறினார்.
"மொழி மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த நிறையப் பேர் மொழியைக் கற்றுக்கொள்ளப் போராடுகிறார்கள். நானும் அவர்களில் ஒருவர். நான், இன்னமும் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதில் சிரமப்படுகிறேன். ஆனால், வேலை தேடுவதற்கும் இங்கு வாழும் மக்களுடன் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கில மொழி அவசியம்."
இந்த மாற்றங்கள், ஆங்கிலத்தை இரண்டாம் அல்லது மூன்றாவது மொழியாகப் பேசுபவர்களை மட்டும் பாதிக்காது.
புதிய விதிகளின் இங்கிலாந்திலிருந்து வந்தவர்களும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
புதிய, கடுமையான குடியுரிமைச் சோதனை ஆஸ்திரேலிய விழுமியங்கள் குறித்த கேள்விகளை உள்ளடக்கும். வன்முறை, மத தீவிரவாதத்திற்கான போக்கு குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் சில கேள்விகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், தீவிரவாத சிந்தனையுள்ள இளைஞர்கள் பலர், இப்படியான சோதனைகளில் பொய் சொல்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
Share
