SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் காதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 22 வருட சிறை!

cyanide murder case
Sam Abraham (left) with Sofia Sam and Arun Kamalasanan (right) Source: Supplied

2 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

மெல்பேர்ன் Epping பகுதியைச் சேர்ந்த சோஃபியா சாம் என்ற பெண் தனது காதலன் உதவியுடன் கணவனான சாம் ஆபிரகாமிற்கு சயனைட் கொடுத்து கொலை செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி 34 வயது சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனையும், இத்திட்டத்தை வகுத்த 36 வயது அருண் கமலாசனனுக்கு 27 வருட சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதில் சோஃபியா ஆகக்குறைந்தது 18 வருடங்களையும் அருண் கமலாசனன் ஆகக்குறைந்தது 23 வருடங்களையும் சிறையில் கழித்த பின்னரே பரோலில் வெளியே வருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

2015ம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்றிருந்த இக்கொலையில் சோஃபியா மற்றும் அருண் கமலாசனன் ஆகியோர் குற்றவாளிகள் என கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றம் அறிவித்திருந்த பின்னணியில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

நடந்தது என்ன?

  • கேரளாவைச் சேர்ந்த சோஃபியா மற்றும் அருண் ஆகியோர் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். மகாத்மாகாந்தி  பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த இருவருக்குமிடையில் பல வருடங்களாக நட்பு இருந்ததை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சோஃபியா மற்றும் அருண் இருவரும் இணைய விரும்பினார்கள் என்பதைத் தத்தமது நாட்குறிப்பிலும் பதிந்திருக்கிறார்கள்.
  • சோஃபியா  6 வயது மகனுடன் ஆஸ்திரேலியாவிற்கு 2012ம் ஆண்டு குடியேறினார். அந்தநேரத்தில் துபாய் நாட்டில் தொழில் பார்த்துக் கொண்டிருந்த சாம் ஆபிரகாம் சில மாதங்களின் பின் ஆஸ்திரேலியாவுக்கு குடிவந்து மனைவி பிள்ளையுடன் இணைந்துகொண்டார்.
  • 2013ம் ஆண்டு, அருண் கமலாசனன் தனது மனைவியையும் குழந்தையையும் இந்தியாவிலேயே விட்டுவிட்டு, ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்துள்ளார்.
  • 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இரவு, சாம் ஆபிரகாம் அருந்தவென ஆரஞ்சு பழச்சாறு தயாரித்த சோஃபியா, அதனுடன் சயனைட் எனும் நச்சுப் பொருளைக் கலந்துள்ளார்.  அதனை அருந்திய சாம் ஆபிரகாம் உடனேயே மரணமாகியுள்ளார்.
  • அவசர சேவைக்கு அழைப்பு விடுத்த சோஃபியா, தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி அழுதுள்ளார்.
  • சாம் ஆபிரகாமின் மரணவிசாரணை முடிவில் அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் சயனைட் மூலம் அவரது மரணம் சம்பவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
  • இறந்த தனது கணவனின் உடலுடன் இந்தியாவிற்குச் சென்ற சோஃபியா, சில நாட்களிலேயே ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.
  • சாம் ஆபிரகாம் மரணத்தை உடனேயே விசாரிக்காத ஆஸ்திரேலிய காவல்துறை, 10 மாதங்களின் பின்னர், ஒரு புலனாய்வு செயற்பாட்டை முடுக்கி விட்டிருந்தது.  சோஃபியா, அருண் இருவரும் கண்காணிக்கப்பட்டு இருவருடைய தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டது.
  • சோஃபியா, அருண் இருவரும் சேர்ந்து ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.  சாம் ஆபிரகாம் பெயரில் இருந்த வாகனம், அருண் கமலாசன் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது.  இருவருக்குமிடையிலான காதலை அவர்கள் எழுத்தில் பதிந்துள்ளார்கள் என்றெல்லாம் இந்த புலனாய்வு விசாரணை முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால்,  காவல்துறை அந்தப் புலனாய்வை எப்படி செய்தது என்பதைப் பகிரங்கப் படுத்தத் தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • புலனாய்வு விசாரணைகளின் அடிப்படையில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோஃபியா, அருண் இருவரையும் காவல்துறை கைது செய்தது.
  • சோஃபியா, அருண் இருவரும் தற்போது காதலர்கள் அல்லவென விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும் கொலையை தான் செய்ததாகவும் சோஃபியாவிற்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அருண் காவல்துறையை நம்ப வைக்க முயற்சி செய்திருந்தார்.
  • 2018 பெப்ரவரி மாதம் சோஃபியா, அருண் இருவரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் இன்று ஜுன் 21ம் திகதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now