சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இந்திய இளைஞர் வீட்டுக்கு வந்தபோது அவரை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மெல்பேர்ன் பெண்ணுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதன்படி குறிப்பிட்ட பெண்ணுக்கு பத்து வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த வருடம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்தியாவிலிருந்து மெல்பேர்னுக்கு கல்வி கற்பதற்காக வந்திருந்த Maulin Rathod (வயது 25) என்பவரே கொலைசெய்யப்பட்டிருந்தார்.
மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஒன்றில் கணக்கியல்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக நான்கு வருட விசாவில் இந்தியாவிலிருந்து வந்திருந்த Maulin Rathod, மெல்பேர்ன் Elsternwick பகுதியில் வசித்து வந்தார்.
சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான 18 வயதான பெண் நண்பியை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு இரவு 9 மணியளவில் சென்றிருக்கிறார். அங்கு இடம்பெற்ற சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் Maulin Rathod வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டது.
இந்த கொலைக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் குறித்த யுவதியை கைது செய்த பொலீஸார் வழக்கு தொடுத்தார்கள்.
குறிப்பிட்ட பெண் சிறுவயதிலிருந்தே உளரீதியான பல கோளாறுகளுக்கு உள்ளாகியிருந்தவர் என்றும், இந்திய இளைஞரை சந்திப்பதற்குமுன், கொலை செய்வது தொடர்பில் இணையத்தில் தேடிப்பார்த்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற அன்று பாலியல் செயற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டதாகவும் பின் அப்பெண் இந்திய இளைஞரை sex toy வயரினால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்றும் பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதிபோக, மிகுதி ஒன்பது வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்கவேண்டிய நிலையிலுள்ள குறிப்பிட்ட பெண், மூன்று வருடங்களில் பரோலில் வரக்கூடிய வாய்ப்புள்ளது என்றும் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
