தமிழகத்தின் மன்னார்குடி எனும் இடத்தில் ஜனவரி 29ம் திகதி 1957ம் ஆண்டு பிறந்தவர் சசிகலா.
சசிகலாவின் தந்தை விவேகானந்தன். அம்மா கிருஷ்ணவேணி. சசிகலாவுடன் கூடப்பிறந்தவர்கள் சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன் என ஐந்து பேர்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சசிகலா படித்தார். தஞ்சாவூர் பக்கமுள்ள விளார் என்ற ஊரைச் சேர்ந்த நடராஜனுக்கு சசிகலாவைத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக முன்னெடுத்தபோது நடராஜன் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டத்தில் பங்கெடுத்தார். இவரது செயல்களால் மு.கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் கவரப்பட்டதுடன் அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் நடராஜனுக்கு ஏற்பட்டது. நடராஜன்- சசிகலாவின் திருமணத்தை மு.கருணாநிதி அவர்கள்தான் நடத்தி வைத்தார்.
இதேகாலகட்டத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராஜன் நியமிக்கப்படுகிறார். அப்போது அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உதவியாக, நம்பிக்கையான ஒருவரைக் கூடவே வைத்திருப்பது நல்லது என நினைத்த எம்ஜிஆர், அப்படி யாராவது இருந்தால் சொல்லுமாறு நடராஜனிடம் கேட்டார்.
அப்போது தனது மனைவி சசிகலா பெயரை நடராஜன் முன்மொழிய 1984ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகிறார் சசிகலா. வீடியோ படப்பிடிப்பு நிறுவனத்தை நடத்திவந்த சசிகலா ஜெயலலிதாவுக்கு தொழில்சார் ஒத்துழைப்பைக் கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் நல்ல தோழியாகவும் பழக ஆரம்பித்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு, பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் சிசிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவைப் பார்க்க பெங்களூரு போகிறார் சசிகலா. நட்பு இறுக்கமாகிறது. ஜெயலலிதா வீட்டுக்கு அடிக்கடி போக வர ஆரம்பிக்கிறார். எம்.ஜி.ஆர். இறந்த சமயத்தில், ஜெயலலிதாவை இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றாமல் இறக்கிவிட்டு அவமானப்படுத்துகிறார்கள். கதறியழும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்தது சசிகலாதான்.
1991ஆம் ஆண்டு முதல்வராக சட்டமன்றத்துக்குள் நுழைகிறார் ஜெயலலிதா. உடன் சசிகலாவும் வருகிறார். அப்போதுதான் சசிகலாவின் முக்கியத்துவத்தை கட்சிக்காரர்களும், அதிகாரிகளும் உணர ஆரம்பிக்கிறார்கள். சசிகலா சின்னம்மா, சின்ன மேடம் ஆனதெல்லாம் அப்போதுதான்.
1991வது வருடத்திலிருந்துதான் சசிகலாவின் உறவினர்கள் பலர் போயஸ் கார்டனுக்குள் தலைகாட்ட ஆரம்பிக்கிறார்கள். சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தத்தெடுத்தார் ஜெயலலிதா. சசிகலாவின் சகோதரரான ஜெயராமன் ஹைதராபாத் தோட்டத்தில் தங்கி நிர்வாகப் பணிகளைக் கவனித்தார். அங்கு ஏற்பட்ட விபத்தில் ஜெயராமன் இறந்தபிறகு அவரது மனைவி இளவரசிக்கு ஆறுதல் கூறி அவர்களது குழந்தையையும் ஜெயலலிதா வளர்த்தார். சசிகலாவின் அண்ணன் மகன் தினகரனுக்கும் எம்பி பதவி கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதாவுடன் இணைந்து ஆடம்பர வாழ்க்கையை மட்டுமல்லாமல் நெருக்கடி காலத்தையும் சசிகலா எதிர்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து சசிகலாவும் கைதானார்.
2011ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தினர் பலர் அவரைச் சுற்றி நிரம்பியிருந்தனர். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இராவணன் கலியப்பெருமாள், மிடாஸ் மோகன் போன்றவர்கள் மீது வழக்குகள் பாய்ந்து கைதானார்கள்.
இப்படி மன்னார்குடி குடும்பத்தினரின் செயல்கள் அடிக்கடி சசிகலா-ஜெயலலிதா நட்பில் விரிசலை ஏற்படுத்தினாலும் சசிகலா என்ற நபரை ஜெயலலிதா எப்போதும் வெறுக்கவில்லை என்பதுதான் உண்மை.
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதாவோடு சேர்ந்து சசிகலாவுக்கும் தண்டனை வழங்கியது நீதிமன்றம். சிறையில் ஜெயலலிதாவுக்கு இருந்த ஒரே ஆறுதல் சசிகலா மட்டும்தான். இப்படித்தான் ஜெயலலி்தாவுக்கு எல்லாமுமாக மாறிப்போனார் சசிகலா.
மன்னர்குடி குடும்பத்தையும் விட்டுக்கொடுக்காமல், ஜெயலலிதாவையும் விட்டுக்கொடுக்காமல் 32 வருடங்களாக ஜெயலலிதாவின் நண்பியாக இருந்த சசிகலா, இப்போது ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் என்ற பதவியையே பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
