ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும் என்பார்கள். வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. ஒரு வார்த்தையின் வேகத்தை, வில்லில் இருந்து புறப்படும் அம்பின் வேகத்திற்கு ஒப்பிட்டார் கம்பர்.
‘சொல் ஒக்கும் கடியவேக சுடு சரம் ....’. சரம் என்பது அம்பு.
கடுமையான சொல் எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்க வள்ளுவரின் ‘நாவினால் சுட்ட வடு’ ஒன்று போதும்.
இவையெல்லாவற்றையும் தாண்டி, ஒருவரது நாவில் இருந்து வெளியேறும் சொல், அவரது கைவிரல் ரேகைபோல அவரது உறுதியான, நம்பகமான அடையாளமாக இருக்கும்.
Voice Identification என்ற குரலால் அடையாளப்படுத்துதல் அல்லது குரலை வைத்து அடையாளங்காணுதல் என்பது இன்று பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொழில்நுட்பம்.
Voice Authentication என்பது ஒருவர் தனது அடையாளத்தை தாமதமின்றி உறுதிப்படுத்த உதவும் இலகுவான வழியாகும்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் ஒருவரது Voice Print ‘குரல் பதிவு’ இருந்தால் வேறு எந்த ஆவணமோ அல்லது அடையாள அட்டையோ,விசாரணையோ இன்றி அவரை மிக வேகமாக, துல்லியமாக அடையாளங்கண்டுகொள்ள முடியும். Voiceprint என்பது ஒருவர் எழுப்பும் ஒலி, ஒலியின் தாளகதி, அதன் கட்டமைப்பு, pattern- ஒலிக்கோலம் என்பவற்றின் எண்மப் பரிமாணமாகும் (digital representation). Finger print- கைரேகை போன்று voiceprint ம் பிரத்தியேகமானது. ஒருவரது கைரேகை எப்படி தனித்துவமானதோ அதேபோல குரலும் தனித்துவமானது.
வங்கியோடு அல்லது காப்பீட்டு நிறுவனம் போன்ற நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போது உங்கள் அடையாளத்தை நிரூபிக்க நீங்கள் ஒவ்வொருமுறையும் முழுப்பெயர், முழு முகவரி, பிறந்த திகதி என்பவற்றையும் சிலவேளைகளில் உங்கள் credit card இன் limit எவ்வளவு, என்பதையும் சிலவேளைகளில் security questions என்ற ஏற்கனவே நீங்கள் பதிவுசெய்துள்ள பதில்களையும் சரியாக ஒப்பிக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

Online என்ற இணையவழியாக தொடர்புகொள்ளும்போது Passwords என்ற கடவுச்சொற்கள் மறந்து போகக்கூடும். இவையெல்லாவற்றுக்கும் மாற்றாக, நீங்கள் தொடர்புகொண்டவுடனேயே, மறுமுனையில் “ ஹலோ குமார், குட்மார்னிங், இது ATO, உங்கள் tax refund இன்னும் மூன்றே நாளில் தயாராகிவிடும்” என்று பதில்வந்தால் ஆச்சரியப்படமாட்டீர்களா. இந்த ஆச்சரியம்தான் ATO என்ற வருமானவரி திணைக்களத்துடன் தொடர்புகொள்ளும் போது நமக்கு ஏற்படுகிறது. நீங்கள் முதன்முதல் ATO வைத்தொடர்புகொள்ளும்போது அவர்கள் கூறுகிறபடி ‘ In Australia my voice identifies me’ என்று மூன்றுமுறை கூறி, உங்கள் குரலை இணையவழியாகவோ தொலைபேசிவழியாகவோ பதிவு செய்துகொண்டால் அதன் பின்பு நீங்கள்எப்போது தொடர்புகொண்டாலும் உங்கள் அடையாளத்தை நிரூபிக்கத்தேவையில்லை.

உங்கள் குரலை, பதிவு செய்துவைத்துள்ள குரலோடு ஒப்பிட்டு குரலின் 120 பிரத்தியேக அம்சங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அடையாளங்காணப்படுகிறது.
தொலைபேசியில் அழைக்கும்போது, சுற்றாடலில் இருக்கக் கூடிய ஒலிகள், ஜலதோஷம் காரணமாக அல்லது மூப்பு காரணமாக குரலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், மனநிலை மற்றும் emotions -உணர்ச்சிகள் காரணமாக குரலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்ற பல்வேறு விடயங்களையும் Artificial Intelligence என்ற மேம்பட்ட தொழில்நுட்பம் கவனத்தில் எடுத்துக்கொள்ளுகிறது. மிமிக்ரி என்றமுறையிலோ அல்லது வேறு குரல்மாற்ற software மென்பொருள் மூலமாகவோ மோசடி செய்ய முனைந்தாலும் அது கண்டுபிடித்துவிடும்.
ஒருவரது குரலின் ஒலிப்பதிவை, ஒலி அலைகளாக அல்லது அதிர்வுகளாக நாம் print செய்துகொள்ள முடியும் என்பதை நாம் அறிவோம். அப்படி print செய்த அலைகள் செங்குத்தான நேர்கோடுகளாக இருக்கும். அழுத்தம் கொடுத்து அல்லது குரலை உயர்த்தி பேசும்போது அதாவது அதிர்வு அதிகரிக்கும்போது அந்தக்கோடுகள் நீண்டவையாகவும் அதிர்வு குறையும்போது குட்டையாகவும் இருக்கும்.
இதை ஒருவரது voice portrait -குரலின் படம் என்பார்கள். Visual representation of sound that maps frequencies and their intensities- குரலிலுள்ள அதிர்வெண்களின் செறிவை வரைபடமாகக் காட்டுதல் என்று சொல்லலாம்.
குற்றவாளிகளின் voice portrait என்ற குரலின் வரைபடங்களை அவர்களுடைய புகைப்படத்துடன் காவல்துறை அதிகாரிகள் கோப்புக்களில் பதிவுசெய்து வைப்பது காலங்காலமாக நடந்துவரும் ஒன்று.

இது பொலீஸாருக்கு எந்தவிதத்தில் உதவுகிறது?
குற்றவாளிகளின் characteristics என்ற குணாதிசயங்களின் பிரதிபலிப்பாக இந்த வரைபடங்கள் கணிக்கப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் ஒருசிலர் கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களது குரலுக்கும் ஏற்கனவே பதிவுசெய்து பத்திரப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் குரல்களுக்குமிடையே இருக்கக்கூடிய ஒற்றுமைகள் பகுத்தாய்வு செய்யப்படுகின்றன. இது ஒன்றுமட்டும் அந்த நபர் குற்றவாளி என்பதை நிரூபிக்கப் போதுமானதல்ல என்றபோதும், இந்த முறையில் பல குற்றவாளிகள் பிரிக்கப்பட்டு பின்பு இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.
அதுபோன்றே, ஒருவரது குரல்பதிவில் இருந்து அவரது வயது, class என்ற கீழ்த்தட்டு அல்லது மேல்தட்டு சமூக வர்க்கத்தைச் சேர்ந்தவரா, அவர் சொல்லும் தகவல்களில் நிச்சயமற்ற தன்மை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை, வேண்டுமென்றே மயக்கத்தை அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சொல்லப்பட்டவையா என்பதையெல்லாம் கண்டுபிடித்துவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதிவேகமான கணினி programs மூலமாக, இந்த frequency map கள் அலசப்பட்டு, நாம் காதால் கேட்கும் போது கண்டு பிடிக்க முடியாத பல தகவல்களை இந்த கருவி அல்லது program பகுத்தாய்வு செய்து முடிவுக்கு வர முடிகிறது. Nuance, Verint, மற்றும் Pindrop போன்ற voice ID systems இவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் சுவீடனுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் 1990 களில் புகலிடம் தேடி வந்த காலம் அது. எந்த நாட்டில் அல்லது நாடுகளில் இருந்து வருவதாக கூறினால் புகலிடம் இலகுவாக கிடைக்குமோ அங்கிருந்து வருவதாக பலரும் கூறினார்கள். இவர்களது உரையாடலைப் பதிவு செய்து ஏற்கனவே தம்மிடமுள்ள குறிப்பிட்ட நாட்டினருடைய உரையாடலுடன் ஒப்பிட்டு கணிக்கும் முறையை சுவீடன் 1993 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது.

தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா வந்த புகலிட கோரிக்கையாளர்கள், இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இதேவிதமாக சோதனை செய்யப்பட்டுள்ளார்கள். இதை LADO Language analysis for the determination of origin என்பார்கள். இது இப்போது இங்கு நடைமுறையில் இல்லை. ஆனால் பிரிட்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.
கணினியின் Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு ஆற்றல் காரணமாக பல மோசடிகளுக்கும் இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரபலமானவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பேசுவது போல யாரோ ஒருவரது பேச்சு மாற்றப்படுகிறது. சாதாரணமாக நாம் கேட்கும்போது பிரபலமானவர்கள் பேசுவது போன்றே இருக்கும் என்றபோதும் இப்படி மாற்றப்பட்ட உரைகள் உண்மையானவைதானா என்பதைப் பகுத்தறியவும் கணனிகள் program செய்யப்பட்டிருக்கின்றன என்பதுதான் இன்றைய நிதர்சனம்.
இதைத்தவிர ஒருவரது குரலைவைத்து அவரது நம்பகத்தன்மை- trustworthiness, அவர் சமூக ஊடாடலை நேசிப்பவரா, அவரது தேகவலிமை, அவருக்கு Parkinson போன்ற நோய் இருக்கிறதா என்பன போன்ற தகவல்களைக் கூட தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
