வணக்கம் பேராசிரியர்
வணக்கம். நான் ஒரு பேராசிரியர் என்பது உங்களுக்குத் தெரியும், எப்போதுமே சொற்பொழிவு மாதிரி நிறைய வகுப்புகளுக்கு முன்னால நான் பேசுவேன்... எனவே இதை சுருக்கி ஒலிபரப்புங்கள்.
முதலில், உங்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்படுகிறது என்று தெரிய வந்ததும் என்ன உணர்ந்தீர்கள் என்று எங்களுக்கு சொல்வீர்களா?
பத்மஸ்ரீ விருது எனக்குத் தருவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு விசித்திரமான அனுபவம். இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து, உங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க இருக்கிறோம். நாளை அதை அறிவிக்க வேண்டும். எனவே, நீங்கள் இன்றே அதை ஏற்றுக் கொள்வீர்களா என்று சொல்ல வேண்டும் என்றார். எனக்கு யோசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை. சரி, ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
விருதுகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இலக்கியத்தில் ஆர்வம் கொள்ளவில்லை. இலக்கியம் என்னைக் கவர்ந்திருக்கிறது. இலக்கியங்களுடன் ஈடுபடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அப்படி ஆர்வத்துடன் ஈடுபடும் ஒருவருக்கு விருதுகள் வழங்கப்படுவது இயல்பானது என்று எனக்கு தெரியும்....
இந்த விருது பெருமைக்குரியது. அதனால் நான் மிகவும் பெருமை அடைகிறேன். என்னுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால், இது போன்ற விருதுகள் வழங்கப்படும்போது, தமிழ் மொழி பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தமிழ் ஒரு உன்னதமான உலக மொழி. இருந்தாலும், அது பற்றி, தமிழ்நாட்டுக்கு வெளியே அதிகமாகத் தெரியாமலே இருக்கிறது. இன்னொரு விதமாக சொல்வதென்றால், தமிழைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால் அதன் உண்மையான மகிமை பலருக்குத் தெரியாது. பல தமிழர்கள் கூட, தமது சொந்த மொழியிலுள்ள இலக்கியம் மற்றும் தங்கள் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்..
தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகாரம் பெற்றது அந்த விழிப்புணர்வுக்கு உதவியாக அமைந்துள்ளது என்று நீங்கள் கருதவில்லையா?
அப்படித் தான் நான் நினைக்கிறேன். ஆனால், தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்த அதே இந்திய அரசு, அது போல் பல மொழிகளையும் செம்மொழி என்று அறிவித்திருக்கிறது. அரசியல் அப்படித்தான் இயங்குகிறது. ஆனால், தமிழ் மற்றைய மொழிகளை விட செம்மைசான்றது. பழமையானது. தனித்துவமானது. சமஸ்கிருதத்துடன் தொடர்புடைய பாளி மற்றும் பிராகிருத மொழி போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாவிட்டால், இந்தியாவிலே, இரண்டு செம்மொழிகள் இருக்கின்றன. ஒன்று சமஸ்கிருதம், மற்றது தமிழ். ஆகையால், செம்மொழி என்று கருதப்படும் தமிழ் மொழி மீது சிலருக்கு அந்த மொழி மேல் ஆர்வத்தைத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
உங்கள் ஆரம்ப ஆய்வு சமஸ்கிருத மொழியில். அதனால் இந்தக் கேள்வி. சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் மொழிக்கு வந்துள்ள கூறுகள் என்ன? அல்லது எதிர்த்திசையில் சென்றுள்ள கூறுகள் என்ன என்று சொல்வீர்கள். தமிழ்நாட்டிலுள்ள சில கல்வியாளர்கள், தமிழிலிருந்து சமஸ்கிருதம் பலவற்றைக் கடன் வாங்கியிருக்கிறது ஆனால், இந்திய அரசு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று சொல்கிறார்களே?
உண்மையில் நிலைமை இன்னும் கொஞ்சம் சிக்கலானது. வேத கால சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் கிறீஸ்துவுக்கு முன் 1500ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்தார்கள் என்று எமக்குத் தெரியும். இதை சிலர் மறுக்கிறார்கள். ஆனால், மொழியியல் ஆதாரங்கள் பல இதற்குச் சான்றாக உள்ளன. அவர்கள் அங்கு வந்த போது, அவர்கள் எதிர்கொண்ட மக்கள் சில திராவிட மொழிகளைப் பேசினார்கள் என்று மிகவும் தெளிவாகத் தெரிகிறது. தமிழ் பேசினார்கள் என்று சொல்லமுடியாது, அவர்கள், தமிழ் போன்ற ஒரு மொழி அல்லது மற்றைய திராவிட மொழிகளை அவர்கள் பேசினார்கள். உண்மையில் அவர்கள் என்ன மொழியில் பேசினார்கள் என்பது சரியாகத் தெரியாவிட்டாலும், ரிக் வேதத்தில் சில திராவிடச் சொற்கள் கடன் வாங்கப்பட்டிருப்பதால், அவர்கள் திராவிட மொழிகளைப் பேசினார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். பின்னர் காலப்போக்கில், திராவிட மொழி எழுத்தின் விதிகளின் பல கூறுகள், சமஸ்கிருதத்திற்கும் இந்தோ ஆரிய மொழிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். வட இந்திய மொழிகளிலும் அந்த விதிகள் மிகவும் தெளிவாக திராவிட மொழிகளிலிருந்து சென்றதைக் காணலாம், மேலும் திராவிட மொழிகளின் பேச்சொலிகளிலுள்ள சிறப்பான "த" "ந" போன்ற ஒலி வடிவங்கள், இந்தியாவிற்கு வெளியே உள்ள சமஸ்கிருதத்துடன் தொடர்பான வேறு எந்த மொழியிலும் இல்லை. அதை மிகவும் தெளிவாக நான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளேன். அதனால் தான் சொல்கிறேன், சமஸ்கிருத மொழி, திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகளை உள்வாங்கியிருக்கிறது என்று. அது தவிர, மக்கள் ஒரு புதிய மொழியைப் பேசக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யும் போது, தங்களுடைய சொந்த மொழியின் இலக்கணக் கூறுகளை, புதிய மொழியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளார்கள். சமஸ்கிருத மொழிக்கும் அது நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, சமஸ்கிருதம் கூட திராவிடர்களிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட சொற்கள் உள்ளன. எனக்கு சரியாகச் சொல்ல முடியவில்லை ஒரு 2 அல்லது 3 சதவீதமான சொற்தொடர்கள் அப்படிப் பெறப்பட்டன. வட இந்தியாவிலிருந்து பலர் வியாபாரம் செய்வதற்காகத் தென்னிந்தியாவிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்ல, பௌத்தமும் சமணமும் சங்க காலத்தில் தான் தமிழ்நாட்டிற்கு வந்தன என்பதும் எமக்குத் தெரியும். அதனால் அவர்கள் பல்வேறு விஷயங்களை இங்கே பரிமாற்றம் செய்யும் போது சொற்கள், வார்த்தைகள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செல்வது இயல்பு.
சிலப்பதிகாரம் எழுதப்பட்டபோது, அதிலே சமஸ்கிருதச் சொற்கள் கலப்பு இருப்பினும் அதிகளவில் இல்லை. அதற்குப் பிறகு எழுதப்பட்ட காவியங்களில் சமஸ்கிருதச் சொற்களின் பாவனை இருப்பதை நாங்கள் பார்க்கலாம்.
இருந்தாலும், பல சொற்கள் என்று சொல்வதற்கில்லை. ஒரு சுவையான விடயம் என்னவென்றால், மற்றைய இந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கி இருக்கின்றன. அப்படிக் கடன் வாங்கும்போது அந்த மொழியின் தரம் கூடும் குறையும். ஆனால், தமிழ் மொழி மட்டும் தான் சமஸ்கிருதத்துடன் சேரும் போது தரம் குறைகிறது. தமிழில் மட்டுமுள்ள வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் பேசும்போது, அது உயர்ந்து நிற்கிறது. நீங்கள் மலையாளம் போன்ற ஒரு மொழியைப் பார்த்தால், எழுதும்போது, அழகூட்டவேண்டுமென்று 90 சதவீதம் சமஸ்கிருத சொற்களைச் சேர்க்க வேண்டியிருக்கும். ஆனால் தமிழ் மொழி அப்படியில்லை. இந்த மாதிரியான அழகூட்டும் விடயம் தமிழுக்குத் தேவையில்லை, இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டும் தான் இந்தப் பெருமை இருக்கிறது. இது ஒரு பெரும் செல்வாக்கைத் தமிழுக்குத் தருகிறது. ஒரு சங்க இலக்கியத்தை படிக்கும் போது, அதேபோன்ற வார்த்தைகள் அர்த்தங்கள் இப்பொழுது நாங்கள் பேசுகிற நவீன தமிழில் இருப்பது வியக்கவைக்கிறது. இரண்டாயிரம் வருடங்களாக அப்படி இருப்பது தமிழ் மொழிக்குண்டான மகத்தான சக்தி என்று தான் நான் நினைக்கிறேன்.
பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பலர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்க் கலாச்சாரப் பின்னணியில் வளராத உங்களைப் போன்ற ஒருவரால், எப்படி தமிழ் கவிதைகளில் உள்ள சாரத்தை, அதன் நுணுக்கங்களை, நுண் உணர்வுகளை வெளியே கொண்டு வர முடிகிறது?
மொழிபெயர்ப்பதில் இது ஒரு பெரிய பிரச்சனை. கலாச்சாரங்களை மட்டுமல்ல நூற்றாண்டுகளை எப்படி நீங்கள் கடக்க முடியும்? கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்கள் பழமையானவற்றைப் பற்றிப் பேசும்போது, அதற்கான சவால்களும் அதிகரிக்கின்றன. நானும் ஹாங்க் ஹெய்ஃபிட்ஸ் என்பாரும் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறோம். அது எனது மனதுக்குத் திருப்தியாக அமைந்துள்ளது. என்ன செய்ய வேண்டுமென்றால், ஆங்கிலத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, தமிழில் உள்ளதன் சாரத்தை முழுமையாக உள்வாங்க முயற்சி செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அல்லது தமிழில் இருந்து, முதல் தர மொழிபெயர்ப்புகள் பல இல்லை என்று தான் நான் கூறுவேன். நான் செய்தது நல்ல மொழிபெயர்ப்பு என்று நான் சொல்ல வரவில்லை, அது மற்றவர்கள் சொல்ல வேண்டியது. இப்போது நான் அகநானூறை மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறேன். அன்றைய தமிழர்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவது ஒரு பெரிய சவால். ஆனால் அது உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் ஒரு செயற்பாடாகவே நான் பார்க்கிறேன். இதில் என்னை ஈடுபடுத்தி கொண்ட பின், ஏதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்வதைப் போல நான் உணர்கிறேன். சங்கப்பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு பலம்வாய்ந்ததாக இருக்கின்றன. உங்கள் கண் முன்னே அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அதைத்தான் மொழிபெயர்ப்பு செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மிகப்பெரிய சவால்.
முதலில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறியக்கூடியவராக இருக்கவேண்டும். அடுத்து, மொழிகளை ஒப்பாய்வு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட ஒன்றிலே உண்மையில் என்ன சொல்லப்பட்டிருந்தது என்பதை அறியக்கூடியவராக இருக்க வேண்டும். அடுத்து, அந்தக் கலாச்சாரத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். பல மேலைத்தேயவருக்கு அது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அவர்கள் சில நேரங்களில் போதுமானளவு கலாச்சாரப் பின்னணிகளைத் தெரிந்து கொள்வதில்லை. அந்தக் கலாச்சாரத்தைப் பற்றி ஒரு நல்ல உணர்வு வேண்டும். எப்படி மக்கள் வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி உரையாடியிருப்பார்கள். அவர்கள் உணர்ச்சிகளை எப்படிப் பரிமாறியிருப்பார்கள். இவையெல்லாம் முதலில் தெரிந்திருக்க வேண்டும். அடுத்தபடியாக, அவர்களுடைய எழுத்திலுள்ள கவிதை நயம் தெரிந்திருக்க வேண்டும். பின்னர் இறுதியாக, மற்றைய பக்கத்தில் நின்று எந்த மொழியில் மொழிபெயர்ப்பு செய்கிறீர்களோ, அந்த மொழியின் அத்தனை வழங்களையும் கையாள வேண்டும். புதிய மொழியில், அதன் நடையில், சில சமயங்களில் புதிய வகையில், தமிழில் சொல்லப்பட்ட விடயத்தை இந்த மொழியில் சொல்ல வேண்டும். இவற்றையெல்லாம் நன்றாகச் செய்தால், நல்ல மொழிபெயர்ப்பு உங்களுக்குக் கிட்டும்.
பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் விக்டோரிய மகாராணியின் கால ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அந்த ஆங்கிலம் தற்போதைய மக்களைக் கவராது. அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதேபோல, ஆங்கிலத்தில் கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கு, அந்த நடை வராது. கரடுமுரடானதாக இருக்கும். இந்திய மொழிபெயர்ப்புகள் பல இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் கடந்து வருவது தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம்.
இதைச் செய்யும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் ரசித்துத் தான் செய்கிறேன். இன்னொரு விடயம், இப்படி மொழிபெயர்ப்புகள் செய்யும் போது, குறிப்பாக, சங்ககால இலக்கியத்தை மொழிபெயர்ப்பு செய்யும் போது, இன்னொன்றையும் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. சங்ககாலத்திற்குப் பிறகு, சரியாக எப்பொழுது என்று சொல்லத்தெரியவில்லை, அந்தக் கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டில் என்று சொல்லலாம். ஆர்வத்தோடு வாழ்ந்த ஒரு வாழ்க்கையே சங்ககால வாழ்க்கை. பின்னர் பக்திமார்க்கம் வலுவடையும்போது மாற்றம் உருப்பெறத் தொடங்குகிறது. இடையே சீவகசிந்தாமணி... அது தவிர, இந்தியாவின் தலைசிறந்த கவிஞர் என்றால் கம்பன் தான். கம்பனுக்கு இணையாக யாரும் இல்லை என்று தான் நான் சொல்வேன். அதைப்போல, திருக்குறள். திருக்குறளில் சங்ககாலத் தொனி இருந்தாலும், அது வித்தியாசம், தனித்துவமானது. எல்லா இடத்திலும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் பல இடங்களில் அப்படித்தான்.
சங்க காலத்தின் பின் தமிழர் கலாச்சாரத்தில் பாரிய மாற்றம் விழைந்துள்ளது என்று குறிப்பிட்டீர்கள். புறநானூற்றில் யுத்தம் மற்றும் வீரம் பற்றி நிறைய கவிதைகள் இருக்கின்றன. ஆனால் இப்போதுள்ள தமிழ் சமூகத்தைப் பார்த்தால், மிகவும் மென்மையானவர்களாக மாறி விட்டார்கள் போல் தெரிகிறதே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் ஒரு போர் நிபுணர் இல்லை, ஆனால் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காகத் தான் போர் மூள்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் இலங்கையில் நடந்த கொடூரமான போரைப் பார்த்தவர்கள், தமிழர்கள் மென்மையானவர்களாக மாறிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தியா சற்று வித்தியாசமானது. அதன் அரசியல் கட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்கள் யுத்தத்தில், அந்தப் போரைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அங்கு நடந்த போரில் நிச்சயமாக தமிழர்கள் வீரத்தை வெளிக்கொணர்ந்தார்கள். அது நியாயமானதா இல்லையா என்ற கேள்விக்கப்பால்.... நான் அந்த யுத்த பற்றி பேச விரும்பவில்லை.
நீங்கள் இந்த நடுகற்களை அங்கே காணலாம். அவற்றை, அகம் புறம் இரண்டு வகையான இலக்கியங்களிலே நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் அவர்கள் அந்த நாட்களில் அனைவரும் யுத்தத்தை மகிமைப்படுத்தினார்கள். ஆனபடியால், அதைப்பற்றிய உண்மையை அறிவது சற்றுக் கடினமாக இருக்கிறது. அந்தக் காலத்தில், அவர்களது உண்மையான போர்க்குணம் என்ன என்பது உண்மையில் கேள்வி தான். ஆனால், அடிக்கடி... ஒரு சிற்றரசன் இன்னொரு நாட்டுடன் படைபெடுப்பதும்... எல்லோருக்கும் பாரியின் கதை தெரியும். அது இன்னொரு துன்பியல் கதை, ஆனால், இவற்றிலிருந்து, அப்போது எப்படியான போர் நடந்தன என்று நாம் பார்க்க முடியும்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பல நாடுகளுக்கு நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்கள். தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் மொழி புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தவரிடையே பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது அவர்கள் ஏதாவது அதிகமாக செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?
உண்மையைச் சொல்வதென்றால் இது ஒரு கடினமான விடயம். அமெரிக்காவில் வாழ்கிற சீனர்களை வைத்து ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு குடி வரும் சீன மக்களின் முதல் சந்ததியினர், தமது கலாச்சாரத்தைப் பேணிப்பாதுகாக்கிறார்கள். அவர்களது குழந்தைகள் அந்தக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முனைகிறார்கள். ஆனால் அதற்கு அடுத்து வரும் மூன்றாம் தலைமுறையினரிடம் தமது கலாச்சாரத்தைப் பேண வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து விடுகிறது. இது தவிர்க்க முடியாதது என்று தான் நான் நினைக்கிறேன். இதில் கலாச்சாரம் ஒரு கூறு. மற்றது மொழி. பலர் அந்த மொழியைப் பேசாத ஒரு இடத்தில், அந்த மொழியை இளைய தலைமுறைகள் வளர்ப்பது மிகவும் கடினம். அது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். அதே வேளை, தமிழ்க்கலாச்சாரம் ஆணிவேர்விட்டிருக்கும் இலங்கை, இந்தியா அல்லது வேறு சில இடத்தில் இருந்து வந்த தமிழ் சிறுவர்களுக்குத் தமிழ்க் கலாச்சாரம் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள், ஒரு மேற்கத்தைய கலாச்சாரச் சூழலில் வசிக்கும் போது அந்தக் கலாச்சாரத்தை அவர்கள் எப்போதும் சுவாசிக்கிறார்கள். தமது கலாச்சாரம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது, தொடர்ச்சியானது, செழிப்பானது என்பதை அவர்கள் உணராவிட்டால், அதைப் பற்றி அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள். அதே வேளை, தமது சொந்த அடையாளம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் தான் அவர்கள் பெரியவர்களாக வளரும்போது, தம்மைபற்றிய அவர்களுடைய பார்வைக்கு சிறப்பாக அமைய முடியும். நீங்கள் பார்த்தீர்களானால், இந்த விடயத்தில் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். சில குழந்தைகள் தமது கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள உண்மையில் முயற்சி எடுக்கிறார்கள். சிலர் அதைப்பற்றிக் கவலைப்படுவதேயில்லை. யார் எப்படி இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்வு கூற முடியாது. ஆனால், கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாப்பது ஒரு நல்ல, மிகவும் பயனுள்ள முயற்சி என்று நான் நினைக்கிறேன். இப்போது, அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான மக்கள் முதல் தலைமுறையினர். அவர்கள் பெரும்பாலாக தமிழ் பேசும் பகுதியில் பிறந்தவர்கள். அவர்களுக்கு அவர்களுடைய குழந்தைகளோ, பேரக்குழந்தைகளோ கலாச்சாரத்தை எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். இது எங்கு போகும் என்று இப்பொழுது சொல்வது மிகவும் கடினம்.
தமிழர் அல்லாத சூழலில் குழந்தைகளை வளர்க்கும் தமிழ்ப் பெற்றோருக்கு அறிவுரையாக அல்லது அவர்களுக்கு ஊக்கம்தரும் வகையில் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
நான் எப்பொழுதும் சொல்கின்ற விடயம் என்னவென்றால், குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து, அவர்களுடைய பழக்கங்களிலிருந்து, அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகளுக்குத் தமிழில் ஆர்வம் வரவேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்தால், அவர்களைச் சுற்றித் தமிழ்ப் புத்தகங்கள் நிறைய இருந்தால்... உதாரணமாக, கைக்கு எட்டும்படியாக கம்பராமாயணம் இருந்தால், அதை அவர்கள் அவ்வப்போது எடுத்துப் படித்தால், அதை பற்றிக் குழந்தைகளுடன் பேசினால், அவர்களும் தங்களுடைய கலாச்சாரத்தில் மதிப்பு வைக்க ஆரம்பிப்பார்கள். ஆனால், பெற்றோரே தங்களுடைய கலாச்சாரத்தை மதிக்கவில்லை என்றால், அவர்களிடமே தமிழ் புத்தகங்கள் இல்லை என்றால் கலாச்சாரத்தை பெற்றோர் ஊக்குவிக்கவில்லையென்றால், குழந்தைகள் வேறு விடயங்களை நாடிச் செல்வார்கள். நான் வாழும் பகுதியில் இதை நிறையவே பார்க்கிறேன். இங்கே நிறைய பரதநாட்டியப் பள்ளிகள் இருக்கின்றன. தமிழ் கற்றுக் கொடுக்கும் பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பாடசாலை மாணவர்கள் செல்கிறார்கள். நூற்றுக்கணக்கில் செல்கிறார்கள். பெற்றோருக்கு அதில் ஆர்வம் இருந்தால் குழந்தைகளும் ஆர்வமாகச் செல்வார்கள். பலர் செய்யும் தவறு என்னவென்றால், அதை குழந்தைகளிடையே திணிக்கப் பார்ப்பது. வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாகத் தமிழ்ப்பாடசாலைக்கு அழைத்துச் செல்வதில் தப்பொன்றுமில்லை. ஆனால் கலாச்சாரத்தைக் கட்டாயப்படுத்தி ஊட்டுவது நல்லது இல்லை என்று தான் நான் சொல்வேன். இன்னும் மேலாக, எடுத்துக்காட்டாக பெற்றோர் வாழ்ந்தால், சிறுவர்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், பல தமிழ்ப் பெற்றோருக்குத் தமது கலாச்சாரத்தின் பெருமை தெரியாமல் இருக்கிறது. மொழி தெரியாமல் இருக்கிறது. அப்படியான சூழ்நிலையில் அவர்களது குழந்தைகள் எப்படித் தமது கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடியும்? நான் வாழும் பகுதியில், பல சிறார்கள், கர்நாடக இசையை முறையாகக் கற்று விற்பன்னர்களாக இருக்கிறார்கள். அது அவர்களுடைய வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. என்னைப்பொறுத்தவரையில் கலாச்சாரத்தைக் குழந்தைகளிடம் திணிக்காமல், நாமே அவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டினால் அவர்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள். அதைத் திணிக்க முனைந்தால், அவர்கள் அதிலிருந்து போராடி வெளியே வரத் தான் முயற்சி செய்வார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த மாற்றம் புதியது, வித்தியாசமானது என்று தான் நான் சொல்வேன். புலம்பெயர்ந்த மக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட நாடுகளான ஆஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது கனடா போன்ற நாடுகளில் நாம் பார்ப்பதற்கும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்று வாழும் தமிழர்களுக்குமிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தத் தமிழர்கள் எப்படி தமது சந்தியினரைக் கலாச்சாரப் பின்னணியில் வளர்ப்பார்கள் என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயம். எனக்குத் தெரிந்த இந்தியப் பெற்றோர்கள், இலங்கைப் பெற்றோர் ஒரு சிலரையும் எனக்குத் தெரியும்... அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தைப்பற்றி அவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. தமது கலாச்சாரத்திலுள்ள பல கட்டுப்பாடுகள் மேலைத்தேய கலாச்சாரத்தில் இல்லை என்பதால், அவர்களது குழந்தைகள் ஆபத்தில் மாட்டுவார்கள், பிழையான பாதையில் சென்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்த, இங்கே பிறந்த, ஆயிரமாயிரம் தமிழ் சிறுவர்களை வைத்து நான் சொல்லக்கூடியது என்னவென்றால், பெற்றோர்கள் பெருமைப்படும் வகையில்தான் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். பெற்றோர்கள் அதிகளவில் கவலைப்படத் தேவையில்லை. பெரும்பாலானவர்கள் நல்ல குடும்ப சூழலில் வளர்கிறார்கள். கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிகிறது. அதனால், பல மற்றைய சூழலிருந்து வருகிற குழந்தைகளைவிட அவர்களது தன்னம்பிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் பெற்றோருக்கு, அவர்கள் வளர்ந்த கலாச்சாரச் சூழலில் இருந்து அவர்களுடைய குழந்தைகள் வளரும் கலாச்சாரச் சூழல் வேறுபட்டிருப்பதால், பெற்றோர் தேவையில்லாமல் கவலைகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனது அனுபவத்தில், குழந்தைகள் நன்றாகவே வளர்கிறார்கள், பெற்றோரும் அதை மனதில் கொண்டு செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்.
எமது நேயர்களுக்காக, உங்களுக்குப் பிடித்த ஒரு தமிழ்க்கவிதையை தமிழில் படித்துக் காட்டுவீர்களா?
தமிழில் வாசிக்கவா? அதற்கு முன் சிறு பயிற்சி எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் பரவாயில்லை. நான் முடிந்தவரை படிக்கிறேன். நன்றாக அமையாவிட்டால், விட்டுவிடலாம்.
இது வந்து அகநானூறு 122
இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்
வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள்
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்
வளைக் கண் சேவல் வாளாது மடியின்
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டன்ன
பல் முட்டின்றால் தோழி நம் களவே.
இரு பரணர் எழுதிய பாடல். இது அற்புதமான ஒரு பாடல் என்று சொல்ல வேண்டும். மற்றைய பாடல்களை விட சற்று எளிதாகவும் இருக்கிறது. இதை நான் எப்படி மொழிபெயர்ப்பு செய்துள்ளேன் என்று படித்துக் காட்டுகிறேன். நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
This noisy town where palm wine flows like rain doesn't sleep
even if there isn't a festival.
Even if the rich markets and the streets sleep
mother with her harsh words and piercing voice doesn't sleep.
Even if mother who watches over me so carefully I feel tide up sleeps
The guards of the town, their eyes aren't sleeping move about swiftly.
And even if those young men with their bright spears sleep,
The dogs – their teeth sharp their tails curled to the right bark.
And even if the dogs with their loud barking sleep,
A huge moon bright as day spreads with its light in the sky
And even if the moon sets behind its mountains
and Thick darkness falls,
loud voiced owl living on the rafts in our house screeches fearfully
in the middle of the night when spirits roam.
Even if that owl lives in a hole should happen to sleep
The good voice of a cock that lives in our house calls out
One day
When everything was asleep
He, with his fickle heart didn't come.
So friend, our affair is hopeless.
Glossed in so many ways like the rock-filled guard forests of Old Uranthai
City ruled by Thithan with his fine horses that gallop
Moving swiftly so that the pebble filled ornamental rings on their legs rattle.
இது ஆங்கில மொழியாக்கம் செய்வதில் ஒரு முயற்சி.
அதிக நேரம் எடுத்து பொறுமையுடன் எங்களுடன் பேசிய உங்களுக்கு மிகவும் நன்றி.
நல்லது சஞ்சயன். உங்களுடன் பேசியதில் எனக்கும் மகிழ்ச்சிதான். இந்த நேர்காணலிலிருந்து ஏதாவது நல்லவற்றைப் பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.