ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தேசத்தின் மாறுபட்ட சமூகத்தையும் நிலப்பரப்பையும் பிரதிபலிக்கும் ஒரு கொண்டாட்டமாக ஆஸ்திரேலிய தினம் தற்போது மாறிவிட்டது. மேலும், அன்றைய நாளில் பல சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்று கூடும் நாளாகவும், புதிதாகக் குடியுரிமை பெற்றவர்கள் குடியுரிமை பெறும் நாளாகவும் அமைந்திருக்கிறது. இருப்பினும், சில பூர்வீக பின்னணி கொண்டவர்கள் உட்பட மற்றைய சிலரும் பிரித்தானிய குடியேற்றத்தின் மோசமான தாக்கங்களின் அடையாளமாக ஆஸ்திரேலியா தினத்தைக் கருதுகின்றனர். ஆஸ்திரேலிய தினத்தின் வரலாறு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சியில் குலசேகரம் சஞ்சயன் ஆராய்கிறார்.
சில விடயங்களில் மக்கள் இரு வேறு துருவங்களாகப் பிரிந்து நிற்கிறார்கள். ஆஸ்திரேலியர்கள் அப்படி பிரிந்து நிற்கும் பல விடயங்கள் இருந்தாலும், இந்த மாதம் இருபத்தாறாம் நாள் பலரையும் பிரித்து வைத்திருக்கிறது.
தேசம் - Nation என்பது பெரும்பாலும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இனக் குழுக்கள் வாழும் பகுதிகள் என்றும், நாடு - Country என்பது ஒரு நிலப்பரப்பை, ஒரு பகுதியை இலகுவாக நிர்வகிக்க தோற்றுவிக்கப்பட்டது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. உலகில் பல தேசங்களைக் கொண்ட நாடுகளும் உண்டு. ஒரே மொழியைத் தாய் மொழியாய்க் கொண்ட இனக் குழுக்கள் வாழும் நிலப்பகுதிகள் பல நாடுகளாகப் பிரிந்தும் காணப்படுகின்றன.
பல நாடுகள் தாம் உருவான நாளை, சுதந்திரம் பெற்ற அல்லது குடியரசாக மாறிய நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றன. பல்லாயிரம் வருடங்களாக மனிதர்கள் நாம் வாழும் இந்த மண்ணில் வாழ்ந்திருந்தாலும், 1901ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தான் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவானது. ஆனால் நாம் அதனை பெரிதாக கொண்டாடுவதில்லை. 26 நாட்கள் கழித்து அதனைக் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? அதற்கு நாம் சில வருடங்கள் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
A New Voyage round the World என்ற நூலை 1697ம் ஆண்டு பிரசுரித்த William Dampier என்ற கடற்கொள்ளைக்காரன், 17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், உலகை மூன்று முறை சுற்றி வந்திருக்கிறார். பிரித்தானிய அரசின் அங்கீகாரத்துடன் பயணத்தை மேற்கொண்ட இவர், ஆஸ்திரேலிய கண்டத்தையும் தன் வரைபடங்களில் சேர்த்திருக்கிறார். அந்த வரைபடங்கள் தான் Captain James Cook ஆஸ்திரேலியா வருவதற்கு உதவிபுரிந்திருக்கின்றன.
ஆனால் பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியா நோக்கி கடற்பயணத்தை மேற்கொள்ள முன் France, Holland, Spain, மற்றும் Portugal போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - Captain James Cook ஆஸ்திரேலியாவில் கால் பதிக்க 250 வருடங்களுக்கு முன்னரே, ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறார்கள்.
ஆங்கிலேயர் முதல் முறையாக இந்த மண்ணிற்கு வந்த போதோ, அதன் பின்னர் Captain Cook வந்த போதோ, பிரித்தானியக் காலனி இங்கே நிறுவப்படவில்லை...
ஆளில்லாத பாரிய தீவில் தாமும் குடியேற வேண்டுமென்றும் அதன்மூலம் தென்துருவத்தில் தாமும் நிலை கொள்ள வேண்டுமென்றும் பிரித்தானியாவும் விரும்பியது. பிரித்தானியாவிற்கெதிராக அமெரிக்காவில் புரட்சி நடந்து கொண்டிருந்த வேளை அது. பிரித்தானிய கைதிகளை அமெரிக்காவிற்கு அனுப்புவது இயலாத விடயமாகிவிட்ட காலம் என்று சொல்லலாம்.
அந்த வேளையில் தான் Captain Cook இந்தப் பிரதேசத்திற்கு வந்தார். அது 1770ஆம் ஆண்டு. Captain Cook உடன் Joseph Banks என்ற ஒரு பணம் படைத்த விஞ்ஞானி, மற்றும் அமெரிக்கர் James Matra ஆகியோரும் பயணித்தனர். Joseph Banksஇன் உந்துதலில், "A Proposal for Establishing a Settlement in New South Wales" என்ற திட்ட வரை படத்தை பிரித்தானிய அரசிடம் 1783ம் ஆண்டு ஆகஸ்து மாதத்தில் James Matra கையளித்தார். அமெரிக்காவில் பிரித்தானியர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து இருந்த காரணத்தால், அவர் எழுதிய திட்ட வரை படத்தில், பிரித்தானியாவை ஆதரிக்கும் அமெரிக்கர்களையும் சீனர்களையும் பசிஃபிக் தென்கடல் தீவுகளில் வாழும் மக்களையும் இந்த ஆளில்லாக் கண்டத்தில் குடியேற்றுவதன் மூலம், அதனை பிரித்தானிய காலனியாக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதே வேளை, பிரித்தானியாவில், பெருகி வரும் கைதிகள் எல்லோரையும் அங்குள்ள சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப் போதிய இடமிருக்கவில்லை. கொலை செய்தவர்கள் மட்டுமல்ல, சில்லறைத் திருட்டு செய்தவர்களையும் சிறையில் அடைத்தால் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் என்ன செய்யும்? அதற்கான தீர்வு என்ன என்று பிரித்தானிய அரசின் Secretary of State, Lord Sydney யோசித்துக் கொண்டிருந்த வேளை... ஆஹா, ஒரு கல்லில் இரு மாங்காய்கள் என்று, James Matraவுடைய திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து அதனை செயல்படுத்த ஆயத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.
சிறு குற்றம் புரிந்தவர்களைக் கப்பலில் ஏற்றி, ஆளில்லாக் கண்டத்திற்கு அனுப்புவது..... இராணுவ வீரர்களையும் அங்கே அனுப்பி, ஒரு புதிய காலனியை உருவாக்குவது.... எப்படி அந்தத் திட்டம். அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமென்றால், அங்கு செல்பவர்கள் செயற்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் இல்லையா? எனவே, குற்றவாளிகளைத் தெரிவு செய்யும்போது, கட்டுமானத் தொழில் தெரிந்தவர்களுக்கு முதலுரிமை கொடுக்கப்பட்டது. இந்தத் தேசம் கைதிகளால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று தான் வரலாறு சொல்லும். ஆனால், புதிய காலனியை உருவாக்குவதற்குக் கைதிகள் உபயோகப்படுத்தப்பட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை
Captain Arthur Phillip தலைமையில் 736 கைதிகளையும் 300 இராணுவ அதிகாரிகளையும் உள்ளடக்கிய 1530 பேரைத்தாங்கிய 11 கப்பல்கள் இந்த மண்ணில் காலடி வைத்தபோது தான் ஐரோப்பிய குடியேற்றம் ஆரம்பமாகியது.
ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக வந்திறங்கியது ஜனவரி 26 என்று சிலர் நம்புகிறார்கள்.... அதில் உண்மை இல்லை.
உண்மையில், அதற்கு முந்தைய வாரமே இந்தப் 11 கப்பல்களும் தரை தட்டி விட்டன. ஜனவரி 26ஆம் நாள் தான் Sydney Cove என்ற இடத்தில் பிரித்தானிய கொடி முதல் முதலாக ஏற்றப்பட்டு, பிரித்தானியர்கள் இந்த நாட்டின் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்த நாள்.
ஆஸ்திரேலிய தினத்தை 1788ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியர்கள் கொண்டாடுவதாக சிலர் நம்புகிறார்கள்.... அதில் உண்மை இல்லை.
ஐரோப்பியர்கள் இந்த மண்ணில் காலடி பதித்த நாட்களில் ‘First Landing Day’ அல்லது ‘Foundation Day’ என்று New South Wales colony கொண்டாடி வருகிறது.
Regatta Day என்று Tasmania), Proclamation Day என்று தெற்கு ஆஸ்திரேலியா, Empire Day என்று வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு மாநிலங்கள் கொண்டாடி வந்திருக்கின்றன. 1935ஆம் ஆண்டிலிருந்து தான், நாம் இப்போது பார்ப்பது போல், ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்பட ஆரம்பித்தது. 1994ஆம் ஆண்டில் தான், ஜனவரி 26ஆம் நாள், நாடளாவிய வகையில் விடுமுறையாக்கப்பட்டது.
“ஆஸ்திரேலிய தினத்தன்று நாம் ஆஸ்திரேலியாவைப் பற்றி விரும்பும் அனைத்தையும் கொண்டாடுகிறோம்: நிலம், வாழ்க்கை முறை, எல்லோருக்கும் வழங்கப்படும் சம வாய்ப்பு - sense of fair go, மக்களாட்சி, நாம் அனுபவிக்கும் சுதந்திரங்கள், மேலும் குறிப்பாக நம் மக்களைக் கொண்டாடுகிறோம்” என்று National Australia Day Council வெளியிட்டுள்ள “Australia Day celebrations guidelines” என்ற வழிகாட்டி சொல்கிறது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் ஜனவரி 26 ஒரு முக்கியமான தேதியாக காலப்போக்கில் மாறிவிட்டது. விடுதலையான குற்றவாளிகளின் கொண்டாட்டமாகத் தொடங்கி, இப்போது ஆஸ்திரேலியாவின் கொண்டாட்டமாக நாட்டின் பல்வேறு மக்களையும் இந்த நாள் பிரதிபலிக்கிறது.
இந்நாட்டில் வாழும் முக்கால்வாசிப் பேர், ஒரு விடுமுறை நாள் என்பதற்கும் அப்பால் ஜனவரி 26ஆம் நாள் அர்த்தம் நிறைந்த நாள் என்று நம்புகின்றனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள், மாநில அரசுகள், உள்ளூராட்சி மன்றங்கள், சமூகக் குழுக்கள் ஏற்பாடு செய்த ஆஸ்திரேலியா தின நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள் அல்லது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்று கூடி மகிழ்வாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா நாளில் 16,000 க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுகிறார்கள்.
ஆனால் சில பூர்வீக மக்களும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் மற்றவர்களுக்கும் இதனை ஒரு துக்க நாள் என்று கருதுகிறார்கள்.
சில பூர்வீக குடிமக்களுக்கு, அவர்கள் அறிந்த ஆஸ்திரேலியா 1788 ஜனவரி மாதத்தில் முடிவடைந்து விட்டது. ஆஸ்திரேலியாவின் காலனித்துவம் கொடூரமானது; படுகொலைகள் நடந்தன, சமூகங்கள் ஒடுக்கப்பட்டன, நிலம் பறிக்கப்பட்டது. சில தலைமுறைகள் திருடப்பட்டன என்று, திருடப்பட்ட தலைமுறைகளின் கதைகள் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, சிலர் ஜனவரி 26ஆம் நாளை ‘படையெடுப்பு நாள்’(invasion day) அல்லது ‘உயிர்வாழும் நாள்’(survival day) என்று குறிப்பிடுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலிய தினத்தை மாற்றுவதற்கான அடி மட்ட இயக்கங்கள் பாரிய அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன.
நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் பூர்வீக மக்கள் அல்ல. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களில் சிலர் ஜனவரி 26ஆம் நாளை ‘படையெடுப்பு நாள்’என்றும் வேறு சிலர் ‘உயிர்வாழும் நாள்’என்றும் விபரிக்கும் போது, அது குறித்த அனைத்து உணர்வுகளையும் எம்மால் உணர முடியுமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், ஒரு முக்கியமான பிரச்சினையை முன்னிலைப்படுத்தவும், மற்றைய ஆஸ்திரேலியர்களுக்கு ஜனவரி 26ஆம் நாளின் முக்கியத்துவம் என்ன என்று சிந்திக்க வேண்டிய நேரமும் இது தான்.
ஆஸ்திரேலியா தின நிகழ்வுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் மழுங்கி, அது குறித்த அனைத்துப் பரிமாணங்களும் பேசப்பட வேண்டும் என்ற குரல், தற்போது பூர்வீக மக்களிடமிருந்தும் வலுப்பெற்று வருகிறது.





