Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலிய சினிமா: Ten Canoes (dir. Rolf de Heer & Peter Djigirr 2006)

sbs

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னதாக, வடகோடி ஆஸ்திரேலியாவின் Arnhem Land பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பைச் சுற்றிச் சுழலும் முதல் மக்களின் கதையே Ten Canoes திரைப்படம். தனது மூத்த சகோதரனின் இளைய மனைவி மீது இளைஞன் ஒருவன் கொண்ட மோகம், ஆட்கடத்தல், இடம் மாறிய பழிவாங்கல், கனவுக்கதைகள், மந்திர-மாயாஜாலம் ஆகியவற்றைத் தழுவி படைக்கப்பட்டுள்ள ஒரு கற்பனைக் கதையே Ten Canoes. இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.


Published

Updated

By Renuka

Source: SBS



Share this with family and friends


ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னதாக, வடகோடி ஆஸ்திரேலியாவின் Arnhem Land பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பைச் சுற்றிச் சுழலும் முதல் மக்களின் கதையே Ten Canoes திரைப்படம். தனது மூத்த சகோதரனின் இளைய மனைவி மீது இளைஞன் ஒருவன் கொண்ட மோகம், ஆட்கடத்தல், இடம் மாறிய பழிவாங்கல், கனவுக்கதைகள், மந்திர-மாயாஜாலம் ஆகியவற்றைத் தழுவி படைக்கப்பட்டுள்ள ஒரு கற்பனைக் கதையே Ten Canoes. இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.


TEN CANOES திரைப்படம் ROLF DE HEER மற்றும் PETER DJIGIRR ஆகியோரின் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டில் வெளியானது.

பூர்வக்குடி மக்களின் மொழியிலேயே முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் திரைப்படமான TEN CANOES, காலனியாதிக்கத்துக்கு முன்னர் ABORIGINAL மக்களிடையே நிகழ்ந்த வாழ்க்கை சம்பவங்களை விவரிக்கிறது. வடகோடி ஆஸ்திரேலியாவில் உள்ள ARNEHAM LAND - பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பில் நிகழும் ஒரு கற்பனைக் கதையே இந்த TEN CANOES திரைப்படம்.

DAYINDI என்ற இளைஞன், தனது கூட்டத்தின் தலைவனான, தனது மூத்த சகோதரனின் இளைய மனைவியை அடைய ஆசைப்படுகிறான். அது சரியல்ல என்று அந்த இளைஞனுக்கு எடுத்துரைக்கவும், ஒரு பெண்ணை மனைவியாக ஏற்பது சுகம் மட்டுமல்ல; அந்த சுகத்தோடு சுமைகளும், நிறைய பொறுப்புகளும் வந்து சேரும் என்பதை DAYINDI-க்கு விளக்கும் பொருட்டு MINYGULULU என்ற மூத்தவர் ஒருவர் கனவுக்கதை ஒன்றினைக் கூறுகிறார்.

கனவுக் கதைகள் (DREAMING STORIES) என்பது ABORIGINAL மக்களின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்த நடைமுறை என்பது நம்மில் பலரும் அறிந்ததே.  

MINYGULULU கூறும் கனவுக்கதையின் கதாநாயகன் RIDJIMIRARIL. அவன் ஒரு தலைசிறந்த போராளி. RIDJIMIRARIL, அந்நியன் ஒருவன் தனது இரண்டாவது மனைவியை கடத்திச் சென்று விட்டதாக சந்தேகிக்கிறான். ஆத்திரம் கண்ணை மறைக்க, மற்றொரு கூட்டத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞன் ஒருவனை தவறுதலாகக் கொன்றுவிடுகிறான் RIDJIMIRARIL.

பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், கொலையாளியும், அவனுக்குத் துணையாக மற்றொருவனும் கொல்லப்பட்டவனின் கூட்டத்தாரிடம் சரணடைந்தாக வேண்டும். அப்படி சரணடைந்த இருவரைக் கொல்ல ஒரு ஈட்டி எறியப்படும். அப்படி எறியப்படும் ஈட்டி, சரணடைந்த இருவரில் யாரை வேண்டுமானாலும் தாக்கிக் கொல்லக் கூடும். அதுதான் பழங்குடி மக்களின் சட்ட நடைமுறை.

இந்த நிலையில், RIDJIMIRARIL தனது இளைய சகோதரன் YEERALPARIL-ஐத் தனது துணையாக அழைத்துச் சென்று எதிராளிக் கூட்டத்தினரிடம் சரண் அடைகிறான்.

எறியப்பட்ட ஈட்டி, RIDJIMIRARIL-ஐத் தாக்குகிறது. குற்றுயிரும், குலை உயிருமாக தனது கூட்டத்தாரிடம் வந்து சேர்கிறான், RIDJIMIRARIL. அவனது மூத்த மனைவி RIDJIMIRARIL-க்கு பணிவிடை செய்கிறாள். உயிர் போகும் தருவாயில் தனது பூர்வக்குடி சடங்கு ஒன்றினை நிறைவேற்றுகிறான், RIDJIMIRARIL.

பிறகு காணாமல் போன RIDJIMIRARIL-ன் இளைய மனைவி திரும்ப வருகிறாள். உணவுக்காக வாத்து முட்டை சேகரிக்கச் சென்றபோது, மிகத் தொலைவில் இருந்து வந்த ஒரு கூட்டத்தினர், தன்னைக் கடத்திச் சென்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பி வர பல காலம் ஆகிவிட்டதெனவும், அந்த இளைய மனைவி தெரிவிக்கிறாள்.

தனது கணவன் இறந்தது குறித்து கேள்விப்பட்டு கதறி அழுகிறாள். பிறகு, RIDJIMIRARIL-ன் இளைய சகோதரன் தனது அண்ணனின் மனைவியர் அனைவரையும் திருமணம் செய்கிறான். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பும் இளைய சகோதரனுக்கு வந்து சேருகிறது.

MINYGULULU கூறிய இந்தக் கனவுக் கதையின் மூலமாக… கணவனாக இருப்பதன் பொறுப்புகள் குறித்தும், ஒரு கூட்டத்தின் தலைவனாக இருப்பதன் அழுத்தங்கள் குறித்தும் உணர்கிறான், DAYINDI.

மேற்கத்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களான காலம், வெளியிடம் அதாவது TIME and SPACE ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது ABORGINAL மக்களின் அன்றாட வாழ்க்கை முறை. அந்தக் கோட்பாட்டினை இந்தத் திரைப்படம் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தத் திரைப்படத்தில் வரும் கதையைப் போன்றதொரு சம்பவம், நிஜ வாழ்வில் எப்போது, எந்த ஆண்டில் அரங்கேறியிருக்கும் என்பதை ஊகிக்க இயலாத ஒரு நினைவலை பார்வையாளர்களைத் தழுவுகிறது. அது நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகவும் இருக்கலாம்; நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகவும் இருக்கலாம். அது இந்தத் திரைப்படத்தில் இழையோடியிருக்கும் இன்னொரு கலையியல் அம்சம்.

DOCO-DRAMA-பாணியில் விவரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் ஆங்கில வருணனையை DAVID GULPILIL செய்திருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த மரியாதைக்குறிய திரைப்பட நடிகர்; மற்றும் புகழ்பெற்ற நடனக் கலைஞர்.

நிலத்தையும், இயற்கையையும் கண்ணைக்கவரும் பின்னணியாக மட்டுமே சித்தரிக்காமல், அவற்றை முன்னணி கதாபாத்திரங்களில் ஒன்றாகத் தெரியும்படி கதையைத் தீட்டியிருப்பதும், அதற்குத் தகுந்தாற்ப் போல திரைக்கதையை நகர்த்திச் செல்வதும்  TEN CANOES திரைப்படத்தின் மிகப் பெரிய பலம்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now