ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான குதிரைப்பந்தயம் பற்றியும் நாய்ப்பந்தயம் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் சில இடங்களில் நடைபெறும் ஒட்டகப்பந்தயம், நெருப்புக்கோழிப் பந்தயம் பற்றியும் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். கரப்பான்பூச்சிப் பந்தயம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவில் இதற்கும் இடமுண்டு.
வருடாவருடம் ஆஸ்திரேலியாவின் தேசியத்திருநாளான ஆஸ்திரேலியா தினத்தன்று குவீன்ஸ்லாந்தில் நடைபெறும் ஒரு வித்தியாசமான விறுவிறுப்பான கொண்டாட்டம்தான் இந்த கரப்பான்பூச்சி பந்தயம். ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் நடத்தப்படும் இப்பந்தயம் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி சமூக நல மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது.
ஆறு மீட்டர் விட்டம் கொண்ட வட்டத்தளம்தான் பந்தயக்களம். போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கரப்பான்பூச்சியின் முதுகிலும் அடையாள எண் குறியிடப்படும். போட்டி நடத்துவதிலேயே அதுதான் மிகவும் கடினமான வேலை என்கிறது போட்டியை நடத்தும் நிறுவனம். அடையாள எண்ணிடப்பட்ட 40 கரப்பான்பூச்சிகளைக் கொண்ட பெரிய கண்ணாடிக்குவளை, பாரம்பரிய உடையணிந்த இசைக்குழு இசை முழங்க மேடைக்குக் கொண்டுவரப்படுகிறது. குறிப்பிட்டத் தருணத்தில் மிகச்சரியாக களத்தின் மையத்தில் கண்ணாடிக்குவளை கவிழ்க்கப்படும். இதற்கெனவே சிறப்புப் பயிற்சி பெற்ற போட்டி அமைப்பாளரே இதைச் செய்வார்.
கரப்பான்பூச்சிகள் எந்த திசையிலும் ஓடலாம். வட்டத்தின் சுற்றெல்லையை எது முதலில் தொடுகிறதோ அதுவே வெற்றி பெற்ற கரப்பான்பூச்சியாக அறிவிக்கப்படும். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்டக் கண்காணிப்பாளர்கள் முதல் மூன்று கரப்பான்பூச்சிகளைப் பிடித்து வெற்றியை உறுதிசெய்வார்கள். இப்போது வசீகரத்துக்காக எண்களுக்குப் பதில் வண்ணங்கள் தீட்டியும் கரப்பான்பூச்சிகள் வகைப்படுத்தப்படுகின்றனவாம். பந்தயத்தின்போது வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் மேடையிலிருந்து புறப்பட்டு பார்வையாளர்களை நோக்கிப் பாயும் கரப்பான்பூச்சிகளைக் கண்டு வீறிட்டு அலறிக் குதூகலித்துக் கொண்டாடுகிறது கூட்டம்.
இந்த கரப்பான்பூச்சி பந்தயத்தின் வரலாறு என்னவாக இருக்கும்? கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போமா? 1982 ஆம் வருடம். குவீன்ஸ்லாந்து மாநிலம், பிரிஸ்பேன் நகரத்தில் ஸ்டோரி ப்ரிட்ஜ் ஹோட்டலில் மதுவருந்தும் அறை. குடிபோதையில் ஒரு சூடான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரிஸ்பேன் சுற்றுவட்டாரத்திலேயே சிறந்த புறநகர்ப்பகுதி எது என்பதுதான் தலைப்பு. வாக்குவாதம் ஒரு முடிவுக்கு வருவதாய்த் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் உங்கள் ஊர் கரப்பான்பூச்சி கூட எங்கள் ஊர் கரப்பான்பூச்சிக்கு முன்னால் நிற்கமுடியாது என்கிறார் ஒருவர். சரி, அப்படியென்றால் பந்தயம் வைத்துப் பார்த்துவிடுவோம் என்று உடனடியாகவே களத்தில் இறங்குகிறார் மற்றவர். கூடியிருக்கும் கூட்டம் உற்சாகப்படுத்த உண்மையிலேயே இருவரும் தங்கள் ஊர் கரப்பான்பூச்சிகளைக் கொண்டுவந்து கார் நிறுத்துமிடத்தில் பந்தயம் வைக்கிறார்கள். சுற்றி நிற்பவர்கள் பந்தயப்பணத்தை நிர்ணயிக்க, வெற்றிகரமாய் ஸ்டோரி ப்ரிட்ஜ் வளாகத்தில் அன்று துவங்கியதுதான் இன்றுவரை ஆஸ்திரேலிய தினத்தின் அடிப்படை சம்பிரதாயமாகவே மாறிவிட்ட கரப்பான்பூச்சிப் பந்தயம்.
கிட்டத்தட்ட 37 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் பந்தயத்துக்கான ஒழுங்கும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டு மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமா? ஆஸ்திரேலியாவின் இந்த கரப்பான்பூச்சி பந்தயம் அமெரிக்காவில் பல சூதாட்டவிடுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு பெருமளவில் பணயப்பணம் விளையாடும் களமாகவும் திகழ்கிறது. முக்கியமாக அமெரிக்காவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை democratic party-யிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரைக் கணிப்பதற்கும் இந்த கரப்பான்பூச்சி பந்தயம் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரு சம்பிரதாயமாகவே நடைபெற ஆரம்பித்துவிட்டது.
ஆஸ்திரேலியா தினத்தன்று ஸ்டோரி ப்ரிட்ஜ் ஹோட்டல் வளாகம் காலையிலிருந்தே களைகட்ட ஆரம்பித்துவிடுகிறது. பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் குடியும் கும்மாளமுமாக குழுமிவிடுவார்கள். காலை பதினொரு மணியளவில் ஆரம்பித்து மாலை வரை பதினான்கு பந்தயங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
பந்தயங்களில் பங்கேற்கும் கரப்பான்பூச்சிகளின் மொத்த எண்ணிக்கை ஐநூறைத் தாண்டுமாம். இதைப் போலவே நாடு முழுவதும் இன்னும் ஆறு இடங்களில் இப்பந்தயங்கள் நடைபெறுகின்றன என்றாலும் தங்கக்கோப்பைப் பந்தயமாக இந்த ஸ்டோரி ப்ரிட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும் போட்டியே முக்கிய இடம் பெறுகிறது.
ஒரு கரப்பான்பூச்சி ஒரு பந்தயத்தில் மட்டும்தான் கலந்துகொள்ளவேண்டும். அதில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, வெளியேறிவிடவேண்டும். அடுத்தடுத்தப் பந்தயங்களில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. பந்தயத்தில் கலந்துகொள்ளும் கரப்பான்பூச்சி ஊர்ந்தோடிதான் எல்லைக்கோட்டை அடையவேண்டும். பறந்துபோய் எல்லையைத் தொடுவது போட்டிவிதிகளுக்குப் புறம்பாகும். பந்தய விதிமுறைகளைப் பின்பற்றாமல் பறக்கும் முயற்சியில் ஈடுபடும் கரப்பான்பூச்சிகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.
தங்கள் வீட்டுக் கரப்பான்பூச்சிகளின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள் அவற்றையே போட்டிக்கு கொண்டுவரலாம். அப்படி நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது கரப்பான்பூச்சி கிடைக்காதவர்கள் போட்டியை நடத்தும் நிறுவனத்திடமிருந்து கரப்பான்பூச்சிகளை விலைகொடுத்து வாங்கலாம். பந்தயத்துக்காகவே உருவாக்கப்பட்டு வளர்க்கப்படும் திறமைவாய்ந்த கரப்பான்பூச்சிகளும் விற்பனைக்கு உண்டு.
சில கரப்பான்பூச்சிகள் மெல்பேர்ன் யுனிவர்சிடியில் இதற்கென்றே உருவாக்கப்படுகின்றனவாம். போட்டியின்போது விமானத்தின் மூலம் கொண்டுவரப்படும் அவற்றுக்கு மவுசு சற்று அதிகம்தான். ஒரு கரப்பான்பூச்சியின் விலை ஐந்து டாலர். போட்டியில் கலந்துகொள்ள கட்டணம் ஐந்து டாலர். வெற்றி பெற்ற கரப்பான்பூச்சி(யாளரு)க்கு முதல் பரிசாக வெற்றிக்கோப்பையும் 200 டாலருக்கான வவுச்சரும்! இரண்டாம் பரிசாக 25 டாலர்கள்! மூன்றாம் பரிசு 15 டாலர்கள்! பரிசுத்தொகை அங்கேயே குடித்து செலவழிக்கப்படவேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ளும் கரப்பான்பூச்சிகளுக்கு மக்கள் வைக்கும் சில விசித்திரப் பெயர்கள் நகைப்பை வரவழைக்கும். இதுவரையிலான பந்தயங்களில் வெற்றிக்கோப்பையை வென்ற சில கரப்பான்பூச்சிகளின் வேடிக்கையான பெயர்கள் Alfred Hitchcocky (2013), Lord of the Drains (2003), www.hardcocky.com (2000), Drain Lover (1992), Desert Storm (1991), Millenium Bug (1999), Captain Cockroach (1988), Not A Problem (1984).
இப்பந்தயக்களம் மது, உணவு, உடை, உற்சாகம் அனைத்துக்குமான கொண்டாட்டமாக விளங்குகிறது. பந்தயத்தின் இறுதி நிகழ்வாக அழகுப்போட்டி. வித்தியாசமாகவும் வசீகரமாகவும் வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரங்களுடன் பெண்கள் கலந்துகொள்கின்றனர். வெற்றி பெற்றவர் அவ்வருடத்தின் Miss cocky-ஆக அறிவிக்கப்பட்டு முடிசூட்டப்படுகிறார். இது தவிர ஒத்த வடிவமைப்புடன் கூடிய ஆடையலங்காரக் குழுக்களுக்கும் பரிசு உண்டாம்.
சரி, பந்தயம் முடிந்தபின் அவ்வளவு கரப்பான்பூச்சிகளும் எங்கே போகும்? வேறெங்கு? நேராக பரலோகப் பயணம்தான். பந்தயம் முடிந்த கையோடு எல்லா இடங்களிலும் பூச்சிமருந்து அடிக்கப்பட்டுவிடும். இண்டு இடுக்கில் ஒளிந்திருப்பவற்றையும் மருந்தின் வீரியம் மரணிக்கச்செய்துவிடும். இந்த சம்பவத்துக்கு வெற்றிபெற்ற கரப்பான்பூச்சியும் விதிவிலக்கில்லை என்பதுதான் வேடிக்கை. உண்மையிலேயே நம்ம ஆஸ்திரேலியா வித்தியாசமான விநோதமான ஆஸ்திரேலியாதான். அல்லவா?