வணக்கம் Anna Bligh அவர்களே
வணக்கம், உங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி
COVID-9 தொற்று நோயால் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
COVID-19 தொற்று காரணமாக, பல ஆஸ்திரேலியர்கள் இப்போது உண்மையான நிதி நெருக்கடிகளை, சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள். நிதி நெருக்கடிகளை எதிர்கொள்பவர்கள் அவர்களுடைய வங்கியுடன் பேச வேண்டும். வங்கிகளால் நடைமுறைக்கு சாத்தியமான உதவிகளை வழங்க முடியும். கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால எல்லையை ஒத்திவைக்க வங்கிகள் முன் வந்துள்ளன - வணிக கடன்கள் அல்லது வீட்டு அடமானங்களை - mortgage paymentsஐ - 6 மாதங்கள் வரை ஒத்தி வைக்க வங்கிகள் முன் வந்துள்ளன. இதுவரை ஏழு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைத்துள்ளனர். அடிப்படையில், அவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் விடயம் இது. ஆறு மாதங்களுக்கு மக்கள் தங்கள் கடன்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதால், COVID-19 தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்குத் தேவையான அவகாசத்தை அவர்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ளன.
சிறு வணிகங்களுக்கும் வங்கிகள் சில சலுகைகளை வழங்குகின்றன. வணிகங்கள் தொடர்ந்து இயங்க மேலதிக மூலதனம் தேவைப்படுவோருக்கு, overdraft போன்ற மேலதிக கடன் வசதி, அல்லது அரசாங்கத்தின் சிறு வணிக உத்தரவாதக் கடன் திட்டத்தின் மூலம் புதிய கடன் என்பவற்றை வங்கிகள் வழங்குகின்றன. குறிப்பாக, சிறு வணிகங்கள் தொடர்ந்து இயங்குகின்றன என்பதில் அரசு ஆர்வம் காட்டுகிறது. மேலும், அடிப்படையில் வங்கிகளுக்கு அவை தான் உயிர்நாடி. உங்கள் நேயர்கள் தங்கள் தனிப்பட்ட நிதி சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்றால் – குறிப்பாக அவர்களது வீட்டு அடமானம், தனிநபர் கடன், வணிகக் கடன்; அல்லது அவர்கள் வணிகத்தை மேம்படுத்த கடன் பெற விரும்பினால், அவர்கள் தங்களது வங்கிகளுடன் நேரடியாகப் பேச வேண்டும். அவர்களை, உங்கள் வங்கியுடன் பேசுங்கள் என்று நான் ஊக்குவிப்பேன்.
வங்கியுடன் ஏற்பாடுகள் செய்து, கடனை திருப்பி கட்டுவதை ஒத்தி வைப்பதால், அவர்களுடைய கடன் மதிப்பீடு – credit ratingஐ பாதிக்குமா?
வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு அடமானத்திற்கோ, கடனுக்கோ தேவையான நிலுவைத் தொகையை வங்கியின் அங்கீகாரத்துடன் ஒத்திப் போட்டால், அவர்கள் கடன் தொகையை ஒழுங்காக கட்டி வருகிறார்கள் என்று தான் கணக்கெடுக்கப்படுவார்கள். அவர்களது credit rating இல் எத்தவித பாதிப்பும் இருக்காது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வங்கிகள் மற்றும் கடன் மதிப்பீட்டு முகவர்கள் எல்லோரும் இதற்கு உடன் பட்டிருக்கிறார்கள்.
எனவே இது உங்கள் கடன் மதிப்பீட்டை பாதிக்காது.
எங்கள் நேயர்களில் சிலர், தங்களுக்கு நிரந்தர வேலை இருந்த போது கடன் பெற விண்ணப்பித்ததாகவும், இப்போது அவர்களது வேலை நேரம் குறைக்கப்பட்டு விட்டது அல்லது அவர்கள் வேலை இழந்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்கள். அவர்கள் ஏற்கனவே செய்த, கடன் விண்ணப்பங்களை வங்கிகள் மதிக்குமா?
இது குறிப்பிட்ட வாடிக்கையாளரின் சூழ்நிலைகளைப் பொறுத்தது. முக்கியமாக, ஒருவரால் கடனைத் திருப்பிக் கட்ட முடியாது என்று வங்கி கணித்தால், அவர்களுக்கு கடன் வழங்கப்படாது. வங்கிகள் நிச்சயமாக ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தங்களால் இயன்ற அளவு உதவி செய்யவே முனைகின்றன. சில வாடிக்கையாளர்களின் கடன் சுமையை மேலும் கூட்டுவது, வாடிக்கையாளருக்குச் சரியான விஷயமாக இருக்காது, மற்றவர்களுக்கு அவர்களின் நிதி சூழ்நிலைகள் காரணமாக கடன் வழங்குவது உகந்தது என்று வங்கிகள் கணிக்குமானால் நிச்சயமாகக் கடனை அங்கீகரிக்கின்றன. எப்படி என்றாலும், வாடிக்கையாளர்கள் நிச்சயமாகத் தங்கள் வங்கிகளுடன் பேச வேண்டும்.
வயதான அல்லது முதிய வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் ஏதாவது சிறப்பாக செய்கின்றனவா?
COVID-19 தொற்று, பல ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கொண்டு வந்துள்ளது. அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் நம் அனைவரையும் பாதுகாப்பாக இருக்க சமூக இடைவெளி பேண வேண்டும் என்றும், எங்கள் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்து மாறும் அறிவுறுத்துகின்றன. மேலும் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களை முக்கிய வேலைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள். அது தவிர, பல வியாபார இடங்கள் மற்றும் மளிகைக் கடைகள் பணத்தாள்கள் வேண்டாம் என்று பண அட்டை மட்டுமே பயன்படுத்துமாறு கோருகின்றன. அவர்களது ஊழியர்கள் பணத் தாள்களைக் கையாளுவதை அவர்கள் விரும்பவில்லை.
பல முதியவர்கள் இன்றும் passbook வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வங்கிகள் debit cards – புதிதாக சுமார் 5 இலட்சம் வாடிக்கையாளருக்கு இந்த debit cardகளை வங்கிகள் அனுப்பி வைத்துள்ளன. இது கட்டாயமில்லை, ஆனால் முதியவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இதற்கு உங்கள் நேயர்களும் உதவலாம்... வயதானவர்கள் யாராவது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால், அவர்கள் தனியாக வாழ்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்த debit cardகளை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்கலாம். உதவி தேவையானவர்கள் வங்கியை நேரடியாக தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டும் உதவி பெறலாம்.
COVID-19 தொற்று வந்ததன் பின்னர் நாம் அனைவரும் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதியவர்கள் வெளியே செல்லாமல் இணையம் மூலம் பொருட்களை வாங்க பழகலாம். மேலும் மற்றைய வங்கி சேவைகளையும் பெறலாம்.
COVID-19 தொற்று நிச்சயமாக எம்மை மாற்றியுள்ளது. இணையம் மூலம் வங்கி சேவைகள் பெறுவதும், பொருட்களை வாங்குவதும் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது என்று அறிகிறோம். ஆனால், இதைக் கேட்பவர்கள் ஏமாற்றுக் காரரிடமிருந்து தப்பிக் கொள்ள அவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, அவர்கள் இந்த இணைய வழி திருடர்களின் பொறிகளில் சிக்காமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன?
முன்பை விட அதிகமான வாடிக்கையாளர்கள் இணையம் மூலம் வங்கி சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குத் தேவையில்லாத போது வெளியே செல்லக் கூடாது என்ற அறிவுரையை பலர் ஒழுங்காக பின்பற்றுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, மக்கள் சரியானதைச் செய்து கொண்டிருக்கும் போது, உலகின் பல பாகங்களிலுமிருந்து இயங்கும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள். வங்கிகள் தங்கள் இணைய வழி பாதுகாப்பு பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மேலதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார்கள். ஆனால், வாடிக்கையாளர்களாகிய நாம் அனைவரும் கவனமாக முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
டிஜிட்டல் முறையில் வங்கி பரிவர்த்தனை செய்யும் எவரிடமும் இதை நான் கூறுவேன் - நீங்கள் 15 வயதினராக இருந்தாலென்ன 75 வயதினராக இருந்தாலென்ன, உங்கள் வங்கிக் கணக்குகளைத் தவறாமல் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் ஏதேனும் அசாதாரணமான அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடந்தால் நீங்கள் அவற்றை விரைவில் கண்டுபிடிக்கலாம். இரண்டாவதாக நீங்கள் ஒருபோதும் கூடாது உங்கள் கடவு எண் - PINனை யாருக்கும் கொடுக்கக் கூடாது. உங்களது கடவு எண்ணையோ, கடவுச் சொல்லையோ உங்கள் வங்கியில் பணியாற்றும் எவரும் உங்களை ஒருபோதும் தொடர்பு கொண்டு கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி ஒரு மின்னஞ்சல் வந்தால், அதனை உடனே நீக்கி விடுங்கள். மோசடி செய்பவர்களையும் வஞ்சகர்களையும் நாங்கள் எட்டத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்த நாம் அனைவரும் கவனமாக செயல் பட வேண்டும்.
அந்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி Anna Bligh, ஒரு வங்கி வாடிக்கையாளர் அல்லது எங்கள் நேயர் ஒருவர் கூடுதல் தகவல் அறிய, வங்கித் துறையில் வரும் புதிய தகவல்களுக்கு அல்லது வங்கிகள் வழங்கும் புதிய சேவைகள் குறித்து எங்கே இலகுவாக அறிந்து கொள்ள முடியும்?
இதற்கு முதலில் செல்ல வேண்டிய இடம் ஆஸ்திரேலிய வங்கி சங்கத்தின் வலைத்தளம் என்று நான் பரிந்துரைக்கிறேன். Australian Banking Association என்ற சங்கம், நாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. மேலும் அவை கூட்டாக அந்த இணைய தளத்தில் தகவல்களை வெளியிடுகின்றன. உங்கள் கேள்விகளுக்கு மிக விரைவாக அங்கே நீங்கள் பதில்களைப் பெறலாம். உங்கள் சொந்த வங்கி கூட தங்களது சொந்த வலைத்தளத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. வங்கிகளும் தற்போது கூடுதல் ஊழியர்களை, தொலைபேசி அழைப்பு மையங்களில் பணிக்கமர்த்தியுள்ளார்கள்.
ஆனால் கடந்த 8 அல்லது 9 வாரங்களில் கிட்டத்தட்ட 7 இலட்சம் பேர் தமது கடன்களுக்கான கொடுப்பனவுகளை தள்ளி வைப்பதற்காக வங்கிகளைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த அழைப்பு மையங்களுக்கு அதிக அழைப்புகள் வரும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். சற்றுப் பொறுமை காக்க வேண்டும் அவ்வளவு தான்.
உங்களது நேரத்திற்கும், தந்த ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி Anna Bligh
சந்தர்ப்பம் வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் நேயர்களுக்கு நான் கூறுவது இவ்வளவு தான். நிதி நெருக்கடி என்று கவலைப் படாமல், உங்கள் வங்கிகளை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டுவார்கள். COVID-19 தொற்று கொண்டு வந்துள்ள பிரச்சனை நம் எல்லோருக்கும் பொதுவானது. நாம் எல்லோரும் தான் இதனுடன் போராடுகிறோம்.