முக்கிய விடயங்கள்
- குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதங்களை செலுத்தா விட்டால், மேலதிக கட்டணங்கள் முதல் உங்கள் ஓட்டுநர் உரிமம் இடை நிறுத்தப்படுவது அல்லது சொத்து பறிமுதல் செய்வது வரை என்று விளைவுகள் பாரதூரமாக இருக்கலாம்.
- சட்டத்தை மீறுபவர்களுக்கு, குற்றவியல் குற்றங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது; இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு முன்னர் சட்ட ஆலோசனை பெறுமாறு பரிந்துரைக்கப் படுகிறது.
- குறிப்பிட்ட காலத்திற்குள் தண்டப் பணத்தை செலுத்த முடியா விட்டால், அதனைத் தவணை முறையில் செலுத்த நீங்கள் ஒழுங்கு செய்யலாம்.
அபராதத்தைப் புறக்கணிப்பதால் ஏற்படும் கடுமையான விளைவுகள் குறித்து, இங்கு வாழ்பவர்கள் பலருக்குத் தெரியாது.
மேலதிக கட்டணங்கள் முதல் உங்கள் ஓட்டுநர் உரிமம் இடை நிறுத்தப்படுவது அல்லது சொத்து பறிமுதல் செய்வது வரை- என்று விளைவுகள் பாரதூரமாக இருக்கலாம்.
போக்குவரத்து விதி மீறல்கள், வேக எல்லைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காமை மற்றும் சிவப்பு விளக்கைத் தாண்டி வாகனம் ஓட்டுதல் அல்லது செல்லுபடியாகும் பயணச் சீட்டு இல்லாமல் இரயிலில் பயணம் செய்வது போன்ற பொதுப் போக்குவரத்து விதி மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
வாகன தரிப்பிடத்தில் கட்டுப்பாட்டை மீறுவதால் விதிக்கப்படும் (parking fines) அபராதம் மற்றும் கட்டண வீதிகளுக்கான கட்டணம் (toll) செலுத்தாமல் வாகனம் ஓட்டுவது ஆகியவை சில பொதுவான வித மீறல்கள் ஆகும்.
“அபராதம் மற்றும் தண்டப் பணம் என்பன பல்வேறு அரச அமைப்புகளால் விதிக்கப்படலாம். அவை தண்டனை அறிவிப்புகள் (penalty notices) அல்லது அபராதம் (fine) என்ற பெயர்களால் அழைக்கப்படும்,” என்று Wollongong பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் Julia Quilter விளக்குகிறார்.

நடுவர் மன்ற (jury) கடமைக்குச் செல்லாமல் இருப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தை பேசுவது, தேர்தல்களில் வாக்களிக்கத் தவறுவது, குப்பைகளைக் கொட்டுவது அல்லது அனுமதிக்கப்படாத இடங்களில் புகைபிடிப்பது – இவையெல்லாம் அபராதம் விதிக்கப்படும் குற்றங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் என்று Dr Julia Quilter விளக்குகிறார்.
இந்நாட்டில் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பதையும் குற்றத்தின் வகையையும் பொறுத்து, எந்த அரச நிறுவனங்கள் அபராதத்தை நிர்வகிக்கிறது என்பது மாறுபடலாம். (இந்தக் கட்டுரையின் இறுதியில் ஒவ்வொரு மாநில மற்றும் பிராந்தியம் குறித்த மேலதிக தரவுகளுக்கான இணைப்பு தரப்பட்டுள்ளது.)
இந்நாட்டில் அபராதம் விதிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
பொதுவாக, விதி மீறல் அறிவிப்பு அனுப்பப்பட்ட ஒருவர், அதற்கான அபராதப் பணத்தை செலுத்தவோ அல்லது அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து மறு ஆய்வு செய்யக் கோரவோ அல்லது அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடவோ என்று பல்வேறு தெரிவுகள் உள்ளன.

அபராதம் விதிக்கப்படும் பெரும்பாலான குற்றங்களுக்கு எதிராக வாதிடுவது மிகவும் கடினம் என்பதால், பெரும்பாலானவர்கள் நீதிமன்ற விசாரணையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று Dr Julia Quilter கூறுகிறார். அத்துடன், நீதிமன்றத்தில் அபராதம் உறுதி செய்யப்பட்டால், அது குறித்த குற்றப் பதிவு அவர் மீது பதியப்படும்.
“அபராதம் என்பது மற்றைய கட்டணங்கள் போன்றது என்று சில நேரங்களில் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் குற்றவியல் குற்றங்கள். இதனை மக்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் சில நாடுகளில் அவை வேறு குற்றங்கள் போலவே பார்க்கப் படுகின்றன,” என்று Dr Julia Quilter மேலும் கூறினார்.
அபராதம் குறித்து நீதிமன்றத்திற்கு செல்லு முன்னர், தகுந்த சட்ட ஆலோசனை அவசியம் என்று இலவச சட்ட ஆலோசனை வழங்கும் Legal Aid NSWஐச் சேர்ந்த வழக்குரைஞர் Kirsty Harrison கூறுகிறார். குறிப்பாக நிரந்தரக் குடியுரிமை இல்லாதவர்கள் நீதி மன்றத்திற்கு செல்ல முன்னர் சிந்திக்க வேண்டும் என்கிறார் அவர்.
ஏனெனில், அவர்கள் நீதிமன்றத்தில் வெற்றி பெறவில்லை என்றால், அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படலாம், அத்துடன், அந்தத் தண்டனை அவர்களின் வீசா நிபந்தனைகளை மீறலாம்.இலவச சட்ட ஆலோசனை வழங்கும் Legal Aid NSWஐச் சேர்ந்த வழக்குரைஞர் Kirsty Harrison
உங்கள் மாநிலத்திலோ அல்லது பிராந்தியத்திலோ அபராதம் வசூலிப்பதற்குப் பொறுப்பான அரச நிறுவனம், நீங்கள் அபராதத்தைத் தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கலாம்.
உதாரணமாக, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், Revenue NSW என்ற அரச அமைப்பிடம் விண்ணப்பிக்கலாம்.
“தண்டப் பணத்தைத் தவணை முறையில் செலுத்துதல், தண்டப் பணத்திற்குப் பதிலாக சம்பளமில்லாமல் குறிப்பிட்ட வேலை செய்வது அல்லது சிகிச்சை பெறுவது, தள்ளுபடி செய்யக் கோருவது போன்ற பல மாற்று வழிகள் உள்ளன” என்று Kirsty Harrison விளக்குகிறார்.
“இதில் முக்கிய செய்தி என்னவென்றால், உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அபராதங்களைப் புறக்கணிக்காதீர்கள். நீங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் local community legal centre என்ற உள்ளூர் சமூக சட்ட மையத்தை அல்லது LawAccessஐத் தொடர்பு கொண்டு உதவி கேட்கவும்.”

அபராதம் செலுத்தாவிட்டால் வரும் விளைவு
குறித்த காலத்தில் அபராதப் பணத்தைக் கட்டாவிட்டால் அது காலாவதியாகப் போவதில்லை. காலப்போக்கில், மேலதிக கட்டணங்கள் அறவிடப்படலாம். மொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்குமே அல்லாமல் குறையப் போவதில்லை.
விக்டோரியா உட்பட நாடு முழுவதும் உள்ள பல அதிகார வரம்புகளில், அபராதம் செலுத்தாதவர் கூடுதல் கட்டணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மேலதிக கட்டணங்களை எதிர் கொள்ளலாம். சில சமயங்களில் அவர்களது உடமைகள் பறிமுதல் செய்யப்படலாம், அல்லது வங்கியிலிருந்து பணம் நேரடியாக வசூலிக்கப்படலாம்.
“வாகனத்திற்கான அபராதத்தை நீங்கள் செலுத்தத் தவறினால், உங்கள் வாகனத்தை ஓட்ட முடியா வண்ணம் அவற்றின் சக்கரங்கள் மீது பூட்டு போடப் படலாம். இது போன்று பல நடவடிக்கைகள் செயல்படுத்தப் படலாம்,” என Fines Victoria என்ற நிறுவனத்தின் துணைச் செயலர் Craig Howard கூறினார்.
“மாறாக, நீங்கள் அபராதம் செலுத்தும் வரை, உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இடை நீக்கம் செய்ய அல்லது உங்கள் வாகனத்தின் பதிவை இடை நிறுத்துமாறு போக்குவரத்து அதிகாரியிடம் Fines Victoria என்ற நிறுவனத்தின் இயக்குனர் கேட்கலாம்.”

குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத்தாமல், அபராதத்தை வசூலிக்கப் பயன்படுத்தப்படும் முதன்மைக் கருவிகளில் ஒன்று ஓட்டுநர் உரிமத்தை இடை நீக்கம் செய்வது அல்லது முற்றாக நீக்குவது ஆகும்.
“எல்லா வகையான அபராதங்களுக்கும் இது நிகழலாம்” என்று Kirsty Harrison விளக்குகிறார்.
உதாரணமாக, நீங்கள் தேர்தலில் வாக்களிக்காததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அந்த அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால், உங்கள் ஓட்டுநர் உரிமம் இடை நிறுத்தப் படலாம். வாக்களிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால் கூட உங்கள் ஓட்டுநர் உரிமம் பறிக்கப் படலாம்.இலவச சட்ட ஆலோசனை வழங்கும் Legal Aid NSWஐச் சேர்ந்த வழக்குரைஞர் Kirsty Harrison
செலுத்தப்படாத அபராதத்தின் தாக்கம் இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.
“செலுத்தப்படாத அபராதம் இருந்தால், அவர்கள் ஓட்டுநர் அனுமதி பெற விண்ணப்பிக்கவும் முடியாது, ஓட்டுநர் அனுமதியைப் பெறவும் முடியாது,” என்று Dr Julia Quilter கூறுகிறார்.
“ஒரு இளைஞர் செலுத்த வேண்டிய அபராதத்தைச் செலுத்தும் பொறுப்பை அவரது பெற்றோர் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், அப்படி அந்தப் பொறுப்பை பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் வாழும் இளையோரின் வாழ்க்கையில் இது கடினமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.”

அபராதத்தை நேர காலத்திற்குள் கையாள வேண்டும்
உதாரணமாக, ஒரு வாகனத்தை நீங்கள் ஓட்டாத வேளையில் அந்த வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக உங்களுக்கு விக்டோரிய மாநிலத்தில் அபராதம் விதிக்கப்பட்டால், அந்த வாகனத்தை ஓட்டியவர் யார் என்பதை நீங்கள் அடையாளம் காட்ட, உங்களுக்கு 28 நாட்கள் கால அவகாசம் உள்ளது.
“அபராதத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் உங்கள் கூற்றை ஏற்றுக் கொண்டால், நீங்கள் பரிந்துரைத்தவரின் பெயரில் மீண்டும் அந்த அபராதப் பத்திரம் வெளியிடப்படும்” என்று Craig Howard கூறுகிறார்.
நீங்கள் அபராதத்தை செலுத்தவில்லை அல்லது உரிய தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கூடுதல் கட்டணத்துடன் அபராத நினைவூட்டல் அறிவிப்பு அனுப்பப்படும். அதற்குப் பின்னர் நீங்கள் வேறு ஒருவர் பெயரை பரிந்துரைக்க முடியாது.
அபராதம் குறித்த நினைவூட்டல் அறிவிப்பை நீங்கள் புறக்கணித்தால், மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். அதன் போது தான் ஓட்டுநர் உரிமம் நீக்கப்படும் அல்லது வேறு பாரதூரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.Fines Victoriaவின் துணைச் செயலர் Craig Howard
நீங்கள் அபராதம் முழுவதுமாகச் செலுத்தப் போகிறீர்களோ, அல்லது அந்த அபராதம் தவறானது என்று முறையிடப் போகிறீர்களோ, அல்லது அந்த அபராதம் உங்களுக்கானது அல்ல என்று பிழையைச் சரிசெய்ய முயற்சிக்கிறீர்களோ, அல்லது பணம் செலுத்த முடியாது என்பதால் மாற்று வழிகளைத் தேடுகிறீர்களோ – எது செய்வதாக இருந்தாலும், உடனடியாகச் செயல்பட வேண்டுமென்று Craig Howard பரிந்துரைக்கிறார்.

உங்களுக்கு ஏதாவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? அந்த அறிவிப்பைச் சரி பார்க்கவும்; அல்லது இந்நாட்டில் நீங்கள் எந்த இடத்தில் வசிக்கிறீர்களோ, அந்த இடத்திலுள்ள அரசு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள, கீழேயுள்ள இணைப்புகளைப் பார்வையிடவும்.
- Western Australia
- Queensland
- Victoria
- NSW
- Northern Territory
- South Australia
- Australian Capital Territory
- Tasmania
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




