இலங்கையிலிருந்து வெளியேறி 30 ஆண்டுகள் கடந்திருந்தாலும் சரி, தமிழ்நாட்டு முகாமிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தாலும் சரி ஓர் ஈழத்தமிழ் அகதி தமிழ்நாட்டில் வேலையோ அல்லது தொழிலோ செய்வதற்கான வாய்ப்புகளை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டே அமைத்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கையாக உள்ள ஆள் பரிசோதனையின் அடிப்படையிலேயே அகதிகளுக்கான உதவித்தொகை மற்றும் அரசு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் 1977 பொதுத் தேர்தலை தொடர்ந்து நடந்த இனக்கலவரத்தில் 50,000 மலையகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்தனர். அதில் ஒருவராக கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தவர் பாப்பம்மா. அங்கு போர் மூண்ட காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த அவரும் கண்காணிப்பு நடவடிக்கையின் இறுக்கத்தை பெரும் தடையாகவே உணர்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இம்மக்கள், இலங்கையின் சுதந்திரத்திற்கு பின் நாடற்ற நிலையையும் எதிர்கொண்டனர். இன்று அவர்களும் கூட போரின் காரணமாக தஞ்சமடைந்த அகதிகளாக தமிழ்நாட்டு முகாம்களில் வசித்து வருகின்றனர்.
'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன், இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல். பாகம்: 4.





