Key Points
- சட்டத்தின்படி, கார் விபத்தில் சிக்கிய அனைத்து ஓட்டுநர்களும் அந்த இடத்தில் நிறுத்தி விவரங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
- பாரியளவிலான விபத்துக்களின்போது குறிப்பாக யாரேனும் காயமடைந்திருந்தால் அல்லது பிற சாத்தியமான சட்டவிரோத காரணிகள் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய பொலிஸார் இதில் தலையிடுவார்கள்.
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய விபத்துக்களுடன் சம்பந்தப்படும் ஓட்டுநர்கள் தாங்களாகவே அடுத்த படிகளை நோக்கி முன்னேற முடியும்.
- விபத்துக்களை சந்தித்தவர்கள், அவர்களின் சூழ்நிலையைப் பொறுத்து, தனியார் வாகன காப்பீடு, CTP insurance அல்லது தொழிலாளர் இழப்பீடுகளை பயன்படுத்தலாம்
ஆஸ்திரேலியாவில், நாம் வாகனமொன்றை மோதிவிட்டோம் என்றால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் செல்வது குற்றமாகும்.
விபத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய முதல் விடயம், விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதாகும். குறிப்பாக யாருக்கேனும் உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் விபத்தில் சம்பந்தப்பட்ட இரு ஓட்டுநர்களும் தமது விவரங்களைப் பரிமாறிக் கொள்ள ஏதுவாக, வாகனங்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த வேண்டுமென ஆலோசனை சொல்கிறார் Traffic and Highway Patrol Command இலிருந்து NSW Police Sergeant Scott Stafford.
ஆனால் விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், உதவிக்கு உடனடியாக 000வை அழைப்பதுடன் உங்களால் முடிந்தால் முதலுதவி செய்யலாம்.

இந்த சம்பவம் ஒரு பெரிய விபத்தாக வகைப்படுத்தப்படும் பட்சத்தில், Emergency operators, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு சேவைகள் போன்றவற்றை விபத்து நடைபெற்ற இடத்திற்கு அனுப்பிவைப்பார்கள்.
விபத்து நடைபெற்ற இடம் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்போது, அல்லது கனரக வாகனம் சிக்கினால் விபத்து நடந்த இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.
விபத்தில் சம்பந்தப்பட்ட எவரேனும் கணிசமான மன உளைச்சலுக்கு ஆளானாலோ அல்லது இருதரப்புக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றினாலோ பொலிஸார் தலையிடுவார்கள்.
எவ்வாறாயினும், யாரும் காயமடையாத பெரும்பாலான சிறிய கார் விபத்துகளில், இருதரப்பும் அவர்களுக்கு இடையே இதனைத் தீர்த்துக்கொள்ளலாம். பொலிஸார் சம்பவ இடத்திற்குச் செல்லவோ அல்லது சிறிய விபத்துக்களுக்கு குற்றவியல் விசாரணையைத் தொடங்கவோ தேவையில்லை.
இரண்டு கார்களையும் இயக்க முடிந்தால், சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி ஓட்டுநரின் விவரங்களையும் மோட்டார் வாகனத்தின் விவரங்களையும் நீங்கள் பரிமாறிக்கொள்வதுடன் காரின் சேதத்தை புகைப்படம் எடுக்கலாம் என Sergeant Stafford கூறுகிறார்.

விபத்தின்போது தவறு உங்கள் பக்கம் இல்லையென்றால், நீங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் குறிப்பாக காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள ஏதுவாக, மற்ற தரப்பினரின் விவரங்களைப் பெறுவது முக்கியம் என மோட்டார் வாகன விபத்து தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் Financial Rightsஇன் மூத்த சட்டத்தரணி Jane Foley கூறுகிறார்.
உங்களிடம் தனிப்பட்ட வாகன காப்பீடு இருந்தால், சம்பவத்தைப் பற்றி முறையிட உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இருப்பினும், நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் மற்றும் மற்ற தரப்பினரிடம் வாகன காப்பீடு இருந்தால், அவர்களது செலவிலேயே உங்கள் வாகனத்தைப் பழுதுபார்த்துக்கொள்ளலாம்.
இதேவேளை மற்ற ஓட்டுநரின் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நேரடியாகப் பணம் பெற, நீங்கள் அவர்களுக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று கூறும் Jane Foley கொடுக்க வேண்டிய தொகை தொடர்பில் காப்பீட்டு நிறுவனம் உங்களுடன் பேச்சு நடத்தும் அதேநேரம் நீங்கள் வழங்கிய quoteஐ மதிப்பீடும் செய்யலாம் என்கிறார்.

நீங்கள் தவறு செய்திருந்தால் மற்றும் உங்களிடம் வாகன காப்பீடு இருந்தால், அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் தவறு செய்திருந்தால் மற்றும் உங்களிடம் காப்பீடு இல்லை என்றால், மற்ற தரப்பிடமிருந்து அவர்களது வாகனத்தைப் பழுதுபார்ப்பதற்கான கோரிக்கை கடிதத்தைப் பெறுவீர்கள்.
போக்குவரத்து விபத்தில் நீங்கள் உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ காயம் அடைந்தால், C-T-P எனப்படும் உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்திலுள்ள Compulsory Third Party Insuranceஇற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதன் ஊடாக விபத்துக்குப் பிறகு மக்களுக்கு ஆதரவளிக்கப்படுவதாகவும் ஒவ்வொரு ஆஸ்திரேலிய மாநிலத்திலும் ஒரே மாதிரியான நிறுவனங்கள் உள்ளதாகவும் விளக்குகிறார் Victorian Transport and Accident Commission-T-A-Cஇன் Head of Complex Recovery & Serious Injury Damien Poel.

CTP Insurance premiumத்தை மோட்டார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பதிவு செய்யும் போது செலுத்துகிறார்கள். இதனூடாக வாகனங்களை பழுதுபார்ப்பதற்கு பணம் கிடைக்காது. ஆனால் வேலை சம்பந்தமாக இல்லாமல், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகளுக்கு இதனூடாக உதவி கிடைக்கும்.
வேலை தொடர்பான மோட்டார் விபத்தில் காயம் அடைந்தவர்கள், தங்கள் முதலாளியின் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோர வேண்டும்.
T-A-C என்பது சமூக நலப் பாதுகாப்பு வலையமைப்பு எனவும் உங்கள் காயங்களின் அடிப்படையில் உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து மருத்துவ உதவி, physiotherapy, மனநல சிகிச்சை உள்ளிட்ட பல சேவைகளை வழங்குவதில் உதவலாம் என்கிறார் Damien Poel.
Resources:
- New South Wales State Insurance regulatory Authority
- Victoria Transport Accident Commission
- Northern Territory (TIO) Territory Insurance Office
- Queensland Motor Accident Insurance Commission
- South Australia CTP Insurance Regulator
- Tasmania Motor Accidents Insurance Board
- Western Australia Insurance Commission of Western Australia
- Financial Rights Motor Vehicle Problem Solver
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




