Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பூர்வீக குடி ANZAC படை வீரர் கதைகள்

[Left:] Group portrait of the special platoon consisting of Aboriginal soldiers (all volunteers) with Corporal Mullett (left), Major Joseph Albert Wright (centre) and Sergeant Morris (right). Major Wright, a World War 1 Light Horse veteran, was in charge

L: Group portrait of the special platoon consisting of Aboriginal soldiers (all volunteers) with Corporal Mullett. R:1935 1/- ANZAC Australian Pre-Decimal Stamp Source: Australian War Memorial

ஆஸ்திரேலியாவின் தேசிய நினைவு கூரல் நாட்களில் மிக முக்கியமான தேதிகளில் ANZAC தினமும் ஒன்றாகும். முதலாம் உலகப் போரின்போது (1914 - 1918) ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைகள் நடத்திய முதல் பாரிய இராணுவ நடவடிக்கையின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அந்தப் போரிலும், தொடர்ந்த போர்களிலும் பூர்வீக பின்னணி கொண்டவர்களின் பங்களிப்பு குறித்தும் அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது குறித்தும் ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் Katherine என்ற இடத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள ஓரிடத்தில், காவல்துறையினர் எதேச்சையாக கண்ட ஒன்று அவர்கள் வாகனத்தைத் திருப்ப வைத்தது.  அருகே சென்று பார்த்தால் முதியவர் ஒருவர் மரணித்துக் கிடந்தார்.  வீடின்றி, உணவின்றி, உறவுமின்றி அவர் தனியாகத் திரிந்திருக்கிறார் என்பது அவர் வாழ்ந்த இடத்தின் ஆதாரமாக அமைந்தது.  இது நடந்தது ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பத்தெட்டாம் ஆண்டில்.  அவரது உடலை ஏற்றிக் கொண்டு, காவல்துறையினர் அருகிலிருந்த காவல் நிலையம் சென்று அவர் யார் என்ற தேடலில் ஈடுபட்டார்கள். 

இறந்தவர் சாதாரண மனிதர் அல்ல.  ஆஸ்திரேலியாவிற்காக முதலாம் உலகப் போரில் போரிட்ட முன்னாள் போராளி Frederick Prentice என்று கண்டறிந்தார்கள். 

Cricket மற்றும் football விளையாட்டுகளில் சிறப்பாக ஆடியதனால் உள்ளூரில் பிரபலமானவர், ஒரு சுரங்கத் தொழிலாளராகக் கடமையாற்றியவர்.  பிரித்தானிய இராணுவத்தின் படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இராணுவ அலங்காரமான இராணுவ பதக்கம் – Military Medal போரில் துணிச்சலாக செயற்பட்டதற்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட ஒருவர் தனியாக ஒரு வெளிப்பரப்பில் இறந்து கிடக்கக் காரணம் என்ன?  அதை அறிந்து கொள்ள அவரது பின்னணி குறித்து நாம் சற்று தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் Powell Creek என்ற இடத்தில் 1894 ஆம் ஆண்டு Frederick Prentice பிறந்தார்.  அவரது சரியான பிறந்த தேதிக்கான பதிவு கிடைக்கவில்லை.  ஆங்கிலேயர் ஒருவருக்கும் பூர்வீக குடி பெண் ஒருவருக்கும் பிறந்த இவர், இவரது தகப்பனுடன் வாழ முடியவில்லை.  கலப்பின பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் பலரின் நிலை அது தான்.  ஆனால் அவரது தகப்பனின் செல்வாக்கினால், தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டு நல்லதொரு பாடசாலையில் கல்வி கற்றார்.  முதலாம் உலகப் போரின் போது, 1915ஆம் ஆண்டு மே ஏழாம் தேதி, ஆஸ்திரேலியப் படையில் சேர்ந்த போது அவருக்கு வயது 21 என்று பதிவாகியுள்ளது.  இராணுவக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த Frederick Prentice, 1916ஆம் ஆண்டு போர்க்களத்தில் இவர் ஆற்றிய சேவைக்காக இராணுவ பதக்கம் வழங்கப்பட்டது என்பதை இராணுவ வரலாற்று ஆய்வாளர் முனைவர் Tom Lewis உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்படியாக போரில் தனது சாகசங்களைக் காட்டிய ஒருவர் தனியாக சாவதற்கான காரணம் என்ன என்று சிந்திப்பவர்களுக்கு, பூர்வீக பின்னணி கொண்ட ஆசிரியர் ஒருவர் பதில் தருகிறார்.  போருக்குச் சென்று வந்த பூர்வீக குடி வீரர்களுக்கு எந்த வித சலுகையும் வழங்கப்படவில்லை.  Australian Soldiers Repatriation Act என்று நடைமுறையிலிருந்த சட்டம் போர் வீரர்களும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான மருத்துவ வசதி, வசிப்பதற்கான வீட்டு வசதி போன்றவற்றை வழங்குவதற்கு வழி சமைத்தது.  ஆனால், பூர்வீக பின்னணி கொண்டவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார் வட பிராந்தியத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் Jeremy Moketarinja.

முதலாம் உலகப் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வீகப் பின்னணி கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவிற்காக போராடினார்கள்.  அவர்கள் Light Horse என்ற குதிரைப்படைகளில் இணைந்து போரிட்டார்கள்.  அவர்களில் பலர், சண்டையிட்ட Gallipoliயின் சரிவுகளில் இறந்தார்கள்.  போரிட்டு வீடு திரும்பியவர்கள் யாராலும் கவனிக்கப்படாமல் அவதிப்பட்டார்கள்.  போர்க் களத்திற்கு சென்று திரும்பிய பூர்வீகப் பின்னணி கொண்ட வீரர்களுக்கு மட்டும் தான் இந்த பாரபட்சம் என்று சொல்ல முடியாது.  படையில் சேர்ந்து கொள்வதற்கே அவர்கள் இனப்பாகுபாட்டை வெல்ல வேண்டியிருந்தது. 

1903ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Defence Act என்ற சட்டம், ஐரோப்பிய பின்னணி அற்றவர்கள் ஆஸ்திரேலியப் படையில் சேர்க்கப்பட முடியாது என்று சொல்கிறது. 

Thomas Williams என்ற பெயரில் ஆஸ்திரேலியப் படையில் சேர்ந்த பூர்வீக குடிமகன் ஒருவரின் உண்மையான பெயர், Arthur Williams.  அதே போல், Matthew Revenue என்ற பெயரில் ஆஸ்திரேலியப் படையில் சேர்ந்தவர் உண்மையில் Matthew Williams என்ற பூர்வீக குடிமகன்.  Arthur Williams என்ற பெயரிலும் Matthew Williams என்ற பெயரிலும் படையில் சேர முனைந்த பூர்வீக குடி மக்கள் படையில் சேர தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஐரோப்பிய பின்னணி அற்றவர்கள் ஆஸ்திரேலியப் படையில் சேர்க்கப்பட முடியாது என்று சட்டம் இருந்தாலும் ஒருவர் படையில் சேர முடியுமா இல்லையா என்ற முடிவு பரிசோதிக்கும் மருத்துவரின் கைகளில் தான் தங்கியிருந்திருக்கிறது.  பூர்வீகப் பின்னணி கொண்ட இவர்கள் படையில் சேர முடியாது என்பதற்கு இவர்களைப் பரிசோதித்த மருத்துவர் கொடுத்த காரணம் – நிறம்.  தாம் விரும்பும் நிறம் இல்லாத ஒரே காரணத்தால் தான் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியப் படையில் சேர அனுமதிக்கப்படவில்லை.  ஆனால், படையில் சேர்ந்து போருக்குச் செல்ல விரும்பிய இவர்கள் இருவரும் தங்கள் பெயர்களை மாற்றி விட்டு, இன்னொரு மருத்துவரின் அனுமதியை ஏதோ வழியில் பெற்று படையில் சேர்ந்திருக்கிறார்கள்.  இவர்கள் இருவரும் கதையும் தனித்துவமானதல்ல.  இவர்களைப் போல பல பூர்வீக பின்னணி கொண்டவர்கள் ஆஸ்திரேலியப் படையில் இணைந்து போருக்கு சென்றிருக்கிறார்கள்.  ஆனால், அது குறித்து சாதாரண ஆஸ்திரேலியர்களுக்குத் தெரிவதில்லை என்று அங்கலாய்க்கிறார் பூர்வீக மற்றும் Torres தீவு பின்னணி கொண்ட படை வீரர்களின் நலனுக்காக உழைக்கும் Garth O'Connell.

Torres தீவு பின்னணி கொண்ட Echong என்ற குடும்பத்தினர், மூன்று சந்ததிகளாக ஆஸ்திரேலிய படையில் இணைந்து கடமையாற்றுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்கள், தற்போதும் ஆஸ்திரேலியப் படையில் கடமையாற்றும் Michael Echongஇன் மகள் Tara மற்றும் மகன் Jason.

ANZAC படைகளில், பூர்வீக பின்னணி கொண்டவர்களின் பங்களிப்பு மகத்தானது, மறக்கக் கூடாதது என்று கூறும் War Memorial என்ற போர் வீரர் நினைவாலயத்தைப் பராமரிக்கும் Gary Oakley.

பூர்வீக குடி போர் வீரர்களுக்கென்று தனியாக ஒரு நினைவாலயம் நாட்டின் தலைநகர் Canberraவிலும் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், இதற்காக குரல் கொடுக்கும் Ray Minniecon.

வீரர்களின் பெருமைகளையும் போரின் மகத்துவத்தையும் கொண்டாடும் நாள் ANZAC தினம் அல்ல என்றும், இதுபோன்ற இனப்பாகுபாடுடைய விடயங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது என்பதை எமக்கு நினைவூட்டும் நாளாக இருக்க வேண்டும் என்று சில பூர்வீக குடி மக்கள் சொல்கிறார்கள்.  இருந்தாலும் தனது நாட்டைப் பாதுகாக்கப் போரிட்டவர்களை, ANZAC தினத்தன்று நினைவு கொள்வது முக்கியம் என்கிறார் Jeremy Moketarinjaவின் மாணவி Sheila Rubntja.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now

பூர்வீக குடி ANZAC படை வீரர் கதைகள் | SBS Tamil