SKIP TO MAIN CONTENT

முதலாவது வீடு வாங்குவோருக்கான அரச உதவி!

first-home buyers
Source: Pixabay

முதல் வீடு வாங்குவோர் உதவித் திட்டம்: புதிய அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்ப்பது? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் கோகுலன் அவர்கள்.


Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS



Skip to podcast episode content

முதல் வீடு வாங்குவோர் உதவித் திட்டம்: புதிய அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்ப்பது? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் கோகுலன் அவர்கள்.


நடந்து முடிந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல்-நேஷனல் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்று Scott Morrison அவர்கள் மீண்டும் பிரதமராகி உள்ளார்.

இந்நிலையில் முக்கியமான வாக்குறுதியாக விவாதிக்கப்பட்ட 'முதல் வீடு வாங்குவோருக்கான‌ உதவித் திட்டம்' (Support for first home buyers) வரும் ஜனவரி 2020 முதல் செயலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச 5% வைப்புத்தொகையைக் கொண்டு தனது முதல் வீட்டை ஒருவர் வாங்க முடியும். இதன் மூலம், வீட்டு மதிப்பில் 95% நிதியினைக் கடனாகப் பெற அரசு உத்தரவாதம் தருகிறது.

இன்றைய நிலையில் 20% வைப்புத்தொகையை வீடு வாங்குபவ‌ரும், 80% தொகையை நிதி நிறுவனங்களும் ஏற்பாடு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் 'கடனளிப்போர் காப்பீடு' (Lenders Mortgage Insurance) வாங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் சுமார் $10,000 சேமிக்கலாம்.

இத்திட்டத்தில் பங்குபெற சிறிய நிதிநிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கி சந்தையில் கடனுதவி தர போட்டிகளை ஊக்குவிக்கும்.

இத்திட்டத்திற்கு தகுதிபெற, தனிநபர் ஆண்டு வருமானம் $125,000 -க்கு குறைவாகவும், குடும்ப ஆண்டு வருமானம் $200,000-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தை அதிகபட்சம் 10,000 பேர்வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பயனாளர் வேறொரு கடன் திட்டத்திற்கு மாறும் வரை (Refinance), இத்திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கு அரசு உத்தரவு அளிக்கிறது.

அரசாங்கத்துக்கு இதனால் ஆகும் செலவு 500 மில்லியன் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.

பிரதமர் Morrison இத்திட்டத்தைச் பற்றி அறிவிக்கும் பொழுது, "ஒரு குடும்பம் தனது முதல் வீட்டை வாங்குவதற்கு வைப்புத்தொகையைச் சேமிக்க சராசரியாக சுமார் 10 ஆண்டுகள் ஆகும். முதல் வீட்டை வாங்குபவருக்கான முன்பணக் கடனுதவித் திட்டம் மூலம் குடும்பங்கள் முதல் வீடு வாங்குவதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை" என்று அதன் நன்மைகளாக எடுத்துக் கூறினார்.

மேலும் கூறுகையில், ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள First Home Super Saver திட்டத்துடன், இந்தப் புதிய திட்டத்தையும் சேர்த்துப் பயன்படுத்தும்பொழுது, குடும்பங்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்றும், குடும்பங்களின் முதல் வீடு வாங்கும் கனவை சீக்கிரம் நிறைவேற்றும் என்று கூறினார்.

அதே நேரத்தில், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கவனமான முறையில் தகுதிகளின் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இது இலவசமாகக் கொடுக்கப்படும் பண உதவி அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

Morrison அவர்களின் இந்த அறிவிப்பை, நிதி நிறுவனங்களும், பொருளாதார நிபுணர்களும் மிகுந்த கவனத்துடன் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் நிபுணர்கள் பலர் ஊடகங்கள் வாயிலாக இத்திட்டத்தைப் பரவலாக விமர்சித்துள்ளனர். அவர்களின் விமர்சனங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

  • முதல் வீடு வாங்குவதற்கு 5% முன்பணம் இருந்தால் போதுமானது என்றால் கூட, மீதப்பணத்தைக் அரசாங்கம் கடனாகவே அளிக்கிறது. இதனால் குடும்பங்களின் மீதான கடன்சுமை அதிகரிக்கும் என்ற அச்சமும், வீடுகளின் விலை குறையும் என்று உறுதியாகக் கூற இயலாது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. கடன் வட்டி விகிதம் இன்னும் முடிவெடுக்கப் படவில்லை என்பது கூடுதல் தகவல்.
  • 2018ஆம் ஆண்டில், சுமார் 110,000 ஆஸ்திரேலியர்கள் தங்களது முதல் வீடுகளை வாங்கியுள்ளனர். இந்தப் புள்ளி விவரத்தின்படி, இத்திட்டத்தின் கீழ் 10-இல் ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும். 10,000 பேர்களுக்குப் பிறகு, மற்றவர்களின் நிலையைப் பற்றி எந்த விவரங்களும் தரப்படவில்லை.
  • 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட First Home Super Saver திட்டத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பயன்படுத்தியுள்ள நிலையில், அதன் வெற்றி என்பது கேள்விக்குரியது என்றும் விமர்சனம் நிலவுகிறது.
  • ஏற்கனவே மந்தமாக உள்ள வீடுகள் விற்கும் சந்தை நிலவரத்தைக் காரணம் காட்டி, நிபுணர்கள் பலர், இத்திட்டத்தின் மூலம் முதல் வீடு வாங்குபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

இதேவேளை first-home loan deposit திட்டமானது முதல் வீடு வாங்குவதற்கு ஏற்கனவே ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் மக்களிடையே பிரபலமாக வாய்ப்பு உள்ளது. அதே நேரம், அதிக வட்டியுடன் பெறும் கடன் சுமையானது குடும்பங்களைப் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. இத்திட்டத்தின் வெற்றி தோல்வியினை காலம் தெளிவுபடுத்தும்.

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now