வணக்கம் Dr Jean-Luc Chevillard. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என்பவற்றுடன் கடந்த 35 வருடங்களாக ஈடு பட்டிருக்கிறீர்கள் .... இந்தப் பிணைப்பு எப்படி ஆரம்பமாகியது என்று சொல்வீர்களா?
இது எதேச்சையாக நடந்தது. கணிதத்திலும் மொழியியலிலும் நான் பட்டம் பெற்றிருந்தேன். Franceல் படிப்பு முடிந்த பின் தேசிய சேவையில் ஈடுபட வேண்டும். அது இராணுவ சேவை அல்லது உள்நாட்டு சேவை. இராணுவத்தில் சேர எனக்கு விருப்பமில்லை, எனவே உள்நாட்டு வேலையாக கணிதம் கற்பித்தேன். அதற்காக பாண்டிச்சேரியிலுள்ள ஒரு பாடசாலையில் கற்பிக்க வந்தேன். அங்கு ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை வந்தது... அப்போது எனது மொழியியல் அறிவு இன்னொரு பரிமாணத்தைக் கண்டது.
சரி, தமிழ் மொழியை, நீங்கள் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?
முதலில், நான் ஒரு ஒலிப்பதிவுக்கருவியுடன் தான் இந்தியா சென்றேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், குமாரசாமி ராஜா என்பவர் எழுதிய “Conversational Tamil” என்ற நூலை வாங்கிக் கொண்டேன். அது தமிழ் ஆங்கில உரையாடல் நூல். ஆனால், பாண்டிச்சேரியில் பேசப்படும் தமிழ், குமாரசாமி ராஜாவின் நூலில் இருப்பதை விட வித்தியாசமானது என்பதை, விரைவில் உணர்ந்து கொண்டேன். “பேசிக்கொண்டு” என்று எழுத்துத் தமிழில் இருப்பது, அவரது நூலில், பேசிக்கிட்டு என்று இருந்தது. பாண்டிச்சேரியில், பேசினேன் என்பார்கள். எனவே, பண்டிதத் தமிழில் இருந்த குமாரசாமி ராஜாவின் நூலை நான் பாண்டிச்சேரித் தமிழுக்கு மாற்றினேன். அப்படி செய்வதற்காக, நான் பலரைத் தொடர்பு கொண்டேன். ஒரு கட்டத்தில், அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தேன். ராஜா ராணி கதை.... ஒரு ஊரிலே ஒரு ராஜா என்று ஆரம்பிக்கும் கதைகள்... பின்னர், கேட்கும் எல்லாவற்றையும் ஒலிப்பதிவு செய்தேன். ஒரு பத்து நிமிடங்களுக்கு. ஒரு உதவியாளரின் உதவியோடு, அவற்றை எழுத்தில் பதிய ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியும், பேசும்போது உள்ளவற்றை எழுதும்போது, அது மாறிவிடும். பேச்சுத்தமிழ், கொச்சைத்தமிழ் என்று பல கருதுவதால், எழுதும்போது அதை மாற்றிவிடுகிறார்கள். இந்த சிக்கல்களைத் தாண்டி, நான் தமிழ் கற்க வேண்டியதாயிற்று. அப்போது தான், இந்த இரண்டுக்குமிடையில் ஒரு சமநிலை இருப்பதை, தமிழ் சினிமாவில் நான் கண்டேன். நான் பார்த்த முதல் தமிழ் திரைப்படம், அலைகள் ஓய்வதில்லை. இப்படியே எனது தமிழ் சொல்லறிவை நான் வளர்த்துக்கொண்டேன். இப்படியாக நான் சேர்த்துக்கொண்டவற்றை வைத்து ஒரு சிறிய இலக்கணக் கட்டுரையை எழுதினேன். தொடர்ந்து, புதிய கதைகளைத் தேடிச் சென்றேன். சில மீனவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. சாதாரண ராஜா ராணிக் கதையை விட, அவர்கள், பாடலுடன் ராஜாக் கதை சொன்னார்கள். அவை உம்மைக் கதைகள். உண்மைக் கதை என்று எழுத்துத் தமிழில் சொல்லலாம். ஆனால், இங்கே ஒருவர் கதை சொல்லுவார் - அதைக் கேட்பவர், தான் கேட்டுக்கொண்டிருப்பதை உணர்த்துவதற்காக, உம், உம் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். உம்காரம் என்று அழகு தமிழில் சொல்லலாம். கதை சொல்பவர், பாட்டிலும் கதையிலும் தன்னை முழுமையாக உள்வாங்கிக் கொள்வார். சுமார் ஒரு மணி நேரத்திற்குக் கதை சொல்லுவார்.
அவற்றையெல்லாம் நான் ஒலிப்பதிவு செய்வேன். அப்படி ஒரு கதை, “செம்புக வீரா...” என்று ஆரம்பிக்கும் பப்பரவாயன் கதை. ஒரு பெரிய கப்பலிலே மக்கள் யாரையோ தேடிப் போவதாகவும், ஒரு பெரிய மீன் அந்தக் கப்பலைப் புரட்டிப்போடுவதாகவும் அந்தக் கதை இருக்கும். எல்லாம் எனக்கு விளங்கியது என்று சொல்ல மாட்டேன், ஆனால் எனது உதவியாளரின் உதவியோடு, பின்னர் எழுதிக் கொள்வேன். இது, முதல் இரண்டு மூன்று வருடங்களில் நடந்தது.
ஆனால், இப்படி நான் தேடி அலைந்து கற்பவை எல்லாம் போதாது என்று நான் உணர்ந்தேன். எனது தமிழ் நண்பர்கள் சிலர், புலவராக கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உதவியோடு, ஒரு வருடம் நான் நன்னூல் கற்றுக் கொண்டேன். ஒரு நண்பர் என்னை, பாண்டிச்சேரியின் வட பகுதியில் உள்ள முதையாள்பேட்டை என்ற இடத்தில் வாழ்ந்த தமிழவேள் என்ற ஆசிரியரிடம் தமிழ் கற்க ஒழுங்கு செய்து கொடுத்தார். அவருக்குக் கண் பார்வை இல்லை. அவர் ஒரு புலவர். நன்னூல் அறிந்தவர். பல பாட்டுகள் இயற்றியுள்ளார். அவரிடம் ஒவ்வொரு நாளும் தமிழ் கற்கச் சென்றேன். ஒரு சூத்திரத்தை வாசிப்போம், அதற்கான விளக்கத்தை அவர் சொல்லுவார். எனது கேள்விகளுக்கு அவர் பதில் தருவார். அப்படியே சில காலம் போயிற்று.
எனக்கு, தொல்காப்பியம் கற்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பேராசிரயாரகக் கடமையாற்றிய முத்து சண்முகம்பிள்ளை அவர்களை அணுகினேன். அப்போது அவர், பாண்டிச்சேரியில் திராவிட மொழியியல் கழகத்தின் கிளை ஒன்றை பாண்டிச்சேரியில் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த மையம் திறக்கப்பட்ட போது, என்னையும் ஒரு மொழியியல் வல்லுனராக அதில் இணைத்துக் கொண்டார். அவருக்கு, பண்டைய தமிழ் தாய்மொழிப் பாரம்பரியம் தெரியும். எனவே, நான் தொல்காப்பியம் கற்க என்னை மாணவனாக ஏற்றுக் கொண்டார். முதலில், கிளவியாக்கம் படிக்க ஆரம்பித்தோம். இது சொல்லதிகாரத்திலுள்ள முதல் அத்தியாயம். இப்படி என் மொழியியல் அறிவை வளர்த்துக் கொண்டேன். நான் முதுமானிப் பட்டத்தைப் பெற்றிருந்தேன், எனவே முனைவர் பட்டத்தை எதில் செய்யலாம் என்று எண்ணிய போது, எனது தாய்மொழி தமிழ் இல்லை, நான் ஒரு வெளி நாட்டவன்... பேச்சுத் தமிழ் குறித்த எனது அறிவு பெரிதாக இல்லை. நீங்கள் ஒரு மொழியியல் துறையில் வேலை செய்ய வேண்டும் என்றால், உங்களுக்கு, நல்ல செவிப்புலமை இருக்க வேண்டும். புழி, புளி போன்ற சொற்களை வேறுபடுத்தத் தெரிய வேண்டும். தமிழ்நாட்டில் இந்த ஒலி வேறுபாட்டை பல்வேறு இடங்களில் காணமுடியாது. மதுரைப் பக்கத்தில் கிழவி, கிளவி இரண்டையும் ஒரே மாதிரித்தான் உச்சரிப்பார்கள். அதே போல் பாண்டிச்சேரியில் புழிக்கும் புளிக்கும் வித்தியாசம் அதிகமில்லை. மொழியியலில் சிறப்பாக ஆய்வு செய்ய துல்லியமான செவிப்புலமை தேவை. ஆனால் எனக்கு அந்த ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்ததால், செம் மொழியில் ஆய்வு செய்ய முடிவெடுத்தேன். எனது முனைவர் பட்டத்திற்கு, தொல்காப்பியத்தைத் தேர்ந்தெடுத்தேன். தொல்காப்பியத்தில் மூன்று புத்தகங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் - எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், மற்றும் பொருளதிகாரம்.
நான் சொல்லதிகாரத்தில் வர்ணனைகள் குறித்து முனைவர் பட்டம் செய்ய ஆரம்பித்தேன். பதின்மூன்றாம் நூற்றாண்டில் சேனாவரையர் இயற்ற வர்ணனை குறித்து ஆராய்ந்தேன். நான் ஆரம்பித்த நாளிலிருந்து முனைவர் பட்டம் பெற ஏழு ஆண்டுகள் பிடித்தன.
உங்கள் முனைவர் பட்டத்தை யாருடைய மேற்பார்வையின் கீழ் செய்தீர்கள்?
ஒரு ஃபிரஞ்சு மொழியியலாளர் தலைமையில் நான் என் முனைவர் பட்டத்தை செய்தேன். Ecole Pratique des Haute Études என்ற இடத்தில் தமிழ் துறை பேராசிரியர் François Gros தலைமையில். அவர் ஒரு தமிழ் நிபுணர். அவர் பரிபாடலை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அது 1968ல் அச்சில் வெளிவந்தது.
நான் முனைவர் பட்டம் செய்யும் வேளையில் கணிதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கைக்கான செலவுகளைக் கவனிக்க வேண்டுமில்லையா?
... நீங்கள் ஃபிரஞ்சு மொழியிலா அல்லது தமிழ் மொழியிலா கணிதம் கற்றுக் கொடுத்தீர்கள்?
ஃபிரஞ்சு மொழியில் ... ஆ, புரிகிறது. நான் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகள் தான் கணிதம் போதித்தேன். Lycée français ல் கற்பித்ததால், ஃபிரஞ்சு மொழியில் தான் கற்பித்தேன். மாணவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்களது ஃபிரஞ்சு மொழியில் அவர்கள் திறமையை வளர்க்கும் நோக்கில் தான் பெற்றோர்கள் அவர்களை அங்கே அனுப்பினார்கள். எனவே, வகுப்பறையில் நாம் தமிழ் பேசவில்லை, நாம் ஃபிரஞ்சு மொழி பேசினோம். நான் ஃப்ரான்ஸ் சென்ற பின்னர், சில உயர்நிலைப் பள்ளிகளில் கணிதம் கற்பித்தேன் ...
... ஆக, நீங்கள் ஃப்ரான்ஸ் சென்ற போது, தமிழ் மொழி, இலக்கியம் என்பவற்றில் உங்களுக்கு ஏற்கனவே ஆர்வம் உண்டாகி விட்டது. அப்படியா?
சரி தான். நான் மீண்டும் ஃப்ரான்ஸ் சென்றேன், ஆனால் ஒவ்வொரு கோடையும் இந்தியா வந்துவிடுவேன். ஒவ்வொரு கோடையும் இரண்டு மாதங்களை நான் இந்தியாவில் செலவிட்டேன். நீண்ட காலம் - எனது ஆரம்ப பயணத்தில், 81 ஜூலை முதல் 83 ஆகஸ்ட் 83 வரை இந்தியாவில் இருந்தேன். பின்னர் 84, 85, 86, 87, 88 என்று ஒவ்வொரு கோடையும் சென்று 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது முனைவர் பட்டத்திற்கான சமர்ப்பிப்புகளைச் செய்தேன். எனது நல்வாய்ப்பு, École française d'Extrême-Orient (EFEO) என்ற அமைப்பில் 1991ம் ஆண்டு, வசந்த காலம் முதல் வேலை கிடைத்தது. கணிதம் கற்பித்தலை நிறுத்திக்கொண்டு, முழு நேர மொழியியல் ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். சில காலத்தின் பின்னர், CNRS என்ற ஃபிரஞ்சு "தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையம்" என்ற நிறுவனத்தில் நிரந்தர ஆராய்ச்சியாளராகப் பணியாற்ற ஆரம்பித்தேன். இப்பொழுது எனது பணி, தமிழ் மொழி ஆய்வில் இல்லை. அறிவியல் வரலாற்றில் குறிப்பாக மொழியின் வரலாறு குறித்து ஆராய்ந்து வருகிறேன். ஆனால், நிச்சயமாக, நான் தமிழ் மொழி உரை வேலையும் செய்து வருகிறேன். அந்த அறிவியல் வரலாற்றின் பார்வையில் இருந்து மொழி இலக்கணங்கள் எப்படி அமைந்திருக்கின்றன எப்படி செயற்படுகின்றன என்ற பார்வை.
உங்களுக்கு கமில் சுவலபில் எழுத்துகள் மீது எப்பொழுது ஆர்வம் வந்தது?
அதாவது, என் ஆரம்ப நாட்களிலிருந்து, பல பயனுள்ளதாக வேலைகளை, சுவலபில் தமிழில் செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். அவரது ஆக்கங்கள் பல நூல்களில் ஆதாரம் காட்டப்பட்டிருக்கின்றன. அவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு மொழியியல் வல்லுனர். எனவே, நீங்கள் தமிழ் கற்க வேண்டும் என்றால், அவரை நீங்கள் தவிர்க்க முடியாது. அவரது புத்தகங்களை இலகுவாக வாசிக்க முடியும். நிச்சயமாக, நீங்கள் ஒரு மேற்குலகத்தவனான இருந்தால், 500 பக்கங்கள் கொண்ட ஒரு தமிழ் புத்தகத்தைப் படிப்பதற்கு முன், ஆங்கிலத்தில் அவரது சுருக்கத்தை வாசிப்பது பயனுள்ளதாக இருக்கும். இவரைப் போல, வேறு பலரும் இணைந்த பலரும் ஒருவருக்கொருவர் உதவுவதால், கடல் போல் பல நூல்கள் நம் கைகளில் இருக்கின்றன.
நீங்கள் EFEO என்ற அமைப்பைக் குறிப்பிட்டீற்கள். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் டாக்டர் விஜயவேணுகோபால் அவர்களை நெற்றமிழ் என்ற திட்டம் - பனை ஓலைச் சுவடிகளை எண்மமயமாக்கும் திட்டம் குறித்து நேர்கண்டிருக்கிறோம்.
ஆம் ஆம். பேராசிரியர் விஜயவேணுகோபால், நன்கு மதிக்கப்படும் ஒரு மொழியியலாளர். அவர் இலக்கணம் உட்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர். எழுத்ததிகாரம், நன்னூல் என்பவற்றில் சில முக்கியமான நூல்களை அவர் எழுதியுள்ளார். கல்வெட்டுகள் குறித்தும் அவர் நன்கு அறிந்தவர். அவர் ஈடுபட்டுள்ள NeTamil திட்டத்தை எனது மனைவி, ஈவா வில்டென் தான் மேற்பார்வை செய்கிறார். அவர்கள் புதுச்சேரியில் உள்ள EFEO மையம் மற்றும் ஹம்பர்க் பல்கலைக்கழகம் என்று இரண்டு இடங்களில் வேலை செய்கிறார்கள். பணத்திற்காக இல்லாவிட்டாலும், நானும் இந்த திட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது துறையான பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தான் இந்த திட்டம் இருப்பதால் நானும் எனது பங்களிப்பைச் செய்கிறேன். பேராசிரியர் விஜயவேணுகோபால் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்கிறார். அவர் புறநானூறு சுவடிகளில் மற்றும் முதலில் அச்சில் வந்த புறநானூறு குறித்து ஆராய்ந்து வருகிறார். அது தான் NeTamil திட்டம் தான்.
நாம் உங்கள் முனைவர் பட்டம் பெற்றது குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்... பட்டம் பெற்ற பின்னர் நீங்கள் என்ன செய்தீர்கள்?
ஒரு ஃபிரஞ்சு பல்கலைக்கழகத்தில் தான் எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை சமர்ப்பித்தேன். அதனால், அது ஃபிரஞ்சு மொழியில் அமைந்திருந்தது. நீண்ட ஆய்வறிக்கை அது. மூன்று வரிகளில் சூத்திரங்கள் அதைத் தொடர்ந்து 30 வரிகளில் விளக்கம்... அப்படி அமைந்திருந்தது. “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்று ஆரம்பிக்கும் முதல் சூத்திரம். நான் EFEOவில் பணிக்கமர்ந்த போது, ஒரு பெரும் கல்வியாளர், டிவி கோபால அய்யர் என்பவரின் தொடர்பு ஏற்பட்டது. எனது ஆய்வறிக்கை சரியாக உள்ளதா என்று அவரிடம் சரிபார்க்க முடிவெடுத்தேன். சிக்கலான பாடல்கள் என்பதால், நான் தவறாகப் புரிந்து கொள்ளும் சாத்தியங்கள் பல உள்ளன என்று எனக்குத் தெரியும், அதனால் நான் அவருடன் பல பல மணி நேரம் செலவழித்து, எனது ஆய்வை சரி பார்த்துக் கொண்டேன். பிறகு அதனை ஒரு புத்தகமாகப் பதிப்பித்தேன். EFEO மற்றும் IFP ஆகியோரின் கூட்டு முயற்சியில், எனது ஆய்வின் முதற் பாகம் 1996ம் ஆண்டு வெளியாகியது. அதற்கு, கே அன்பழகன் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசுக்கான தேர்வுக்குழுவில் பல அறிஞர்கள் இருந்தார்கள் - வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம் என்பவர் தலைமையில். ஒரு தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் அவர். திராவிட மொழியியல் கழகத்தை நிறுவியவர். மேலும், ஒரு பெரும் தமிழ் கல்வியாளர். எனது ஆய்விற்கு அவரால் பரிசு வழங்கப்பட்டது.
நீங்கள் கூறிய சில பெயர்கள், என் மனதில் ஒரு கேள்வியைத் தூண்டுகிறது. நீங்கள் ஒரு வெளி ஆள். இந்தியாவிலுள்ள சாதி அமைப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஓ ... இது ஒரு தனியான தலைப்பு. சாதி என்று வரும் போது, உண்மையில், ஒரு நிலையான பதிலை நான் வைத்திருக்கிறேன். எனக்கு, சாதியில் நம்பிக்கை இல்லை. நான் ஒரு ஃபிரஞ்சு குடிமகன். அத்துடன், ஃபிரான்சில், சாதி வேறுபாடுகள் இல்லை. எனவே, சாதி வேறுபாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை. அதை, வரலாற்றில் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன். நான் CTamil என்ற ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகிறேன். அதில் பரிமாறப்படும் விடயங்களுக்கு நான் பொறுப்பு. நான் சாதி குறித்த எந்த விவாதத்தையும் CTamilலில் அனுமதிப்பதில்லை. சாதி பல விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் பிறந்த ஃபிரான்சின் சூழலில், சாதி இல்லை. நான் ஒரு இந்திய குடிமகனாக இருந்தால், நான் அதற்கு எதிராக போராடும் புரட்சி முகாமில் இருந்திருப்பேன். ஆனால் ஒரு வெளிநாட்டவராக இருப்பதால் நான் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் யாருடைய சாதியையும் கண்டுகொள்ள முயல்வதில்லை. ஆனால், ஒருவருடைய பெயர் V. M. சுப்பிரமணியம் ஐயர் என்றால் என்ன என்று, எனக்குப் புரியும். ஃப்ரெஞ் புரட்சிக்கு முன்னர், பிரபுக்கள் இருந்தார்கள். இப்போது இல்லை. அது போல், இதனையும் ஒரு கடந்த கால விடயமாகத்தான் நான் பார்க்க விரும்புகிறேன்.
சரி, தற்போதைய தொழில்நுட்பங்களை எடுத்துக் கொண்டால், Google போன்ற தானியங்கி கருவிகள் மொழிபெயர்ப்பு வேலை செய்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அப்படி ஒரு சில கருவிகள் இருக்கலாம். ஆனால் நான் அவற்றை நம்பவில்லை. உதாரணமாக, ஃபிரஞ்சு மொழியிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யும் அத்தகைய கருவியை நான் பயன்படுத்த மாட்டேன். அதைவிட, தமிழ் மொழிக்கு மாற்றுவது என்பது மிகவும் கடினம். இது ஆராய்ச்சியில் ஒரு முக்கிய பகுதி என்பது எனக்குத் தெரியும். ஒரு மொழி பற்றிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள இது உதவும் என்று எனக்கு தெரியும். ஆனால், இப்படியான கருவிகள் சரியாக இயங்க, இன்னொரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இவை குறித்து நான் மிகவும் சந்தேகப்படுகிறேனோ தெரியவில்லை, ஆனால் கணினிகள் மூலம் நாங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை.
நீங்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களுடன் தொடர்புடையவர் என்பது குறித்து பெருமையாக உணர்ந்த சந்தர்ப்பங்கள் ஏதாவது?
ஆமாம்... நான் பல சந்தர்ப்பங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் சிறுவனாக இருந்த போது, உலகின் எல்லா மொழிகளையும் அறிய விரும்பினேன். நிச்சயமாக, அது முடியாத காரியம், ஆனால் மொழியியல் கல்வி பயிலும் போது, நீங்கள் அனைத்து மொழிகளைப்பற்றியும் அறிந்து கொள்ள முடியும். அது ஒரு ஆறுதல். ஒரு மொழியை இயற்கையாக நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, அந்த மொழி, உலகளாவிய சட்டங்களுக்கு உட்பட மாற்றம் பெறுவதை நீங்கள் அவதானிக்கலாம். இந்த மொழி மாற்றத்திற்கு எதிராக ஒரு கூட்டு மனித முயற்சியாக பலர் போராடுகிறார்கள். சிலர் மாற்றங்கள் தேவையில்லை என்கிறார்கள். இந்த ஒரு சிக்கலான சூழலில் நீங்கள் மொழி குறித்து ஆராயும் போது, தமிழ் கவிதை போன்ற ஒரு அழகான ஒன்றைக் கண்டெடுக்கிறீர்கள், அதுவும் பண்டைத் தமிழ் கவிதைகள். ஒரு கூட்டம், பண்டைய தமிழ் கவிதை வேண்டும் என்கிறது. அடுத்த தலைமுறை முந்தைய தலைமுறை போகும் வழியில் போக மாட்டேன் என்று நம்புகிறது. உண்மையில் ஒரு போராட்டம், மொழி மாற்றத்திற்கு எதிரான போராட்டம் செய்யப்படுகிறது. அந்த முயற்சிகளைப் பார்க்கும் போது ஒரு அளவிடமுடியா வியப்பு ஏற்படுகிறது. அண்மையில் உயிரிழந்த அறிஞர் சா வே சுப்ரமணியம் அவர்கள் , தொகுத்த தமிழ் இலக்கண நூல்கள் புத்தகத்தை நீங்கள் படிக்க நேர்ந்ததால், அதில், 41 தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. அது சுமேரியாவில் தொடங்குகிறது ஆனால் அது சாமிநாதன் போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் படைப்புகள் வரை செல்கிறது. 18 ம் நூற்றாண்டில் இருந்து படைப்புகளான தொன்னூல் விளக்கம், வெண்பா பாட்டியல் முதலியனற்றையும் கொண்டிருக்கிறது. எனவே, அது போன்ற படைப்புகள், குறிப்பிடத்தக்க மக்களினால் அப்படியான எண்ணிக்கையில் முன்னெடுக்கப்படுவதற்கான காரணம் என்ன? இதைப் போல பல தொகுப்புகள். மொழியைப் பாதுகாப்பதற்கான பெரும் முயற்சி. ஒரு வியக்கத்தக்க கூட்டு முயற்சி மற்றும் அந்த முயற்சியில் பல தமிழ்நாட்டில் நடந்துள்ளது - நான் ஒரு வெளிநாட்டவன், எனது ஆர்வம், மொழிகளை ஒரு பொது கண்ணோட்டத்தில் பார்த்து, அழகான உரை, ஒரு தொகுப்பாக வெளியிடுவது மட்டுமே. ஆனால், அந்த மொழியைப் பாதுகாக்கும் பல நல்ல முயற்சிகளை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். மாணவர்களாக, கற்றுக்கொள்ள ஆரம்பித்த அவர்கள், ஆசிரியர்களாக அல்லது கவிஞர்களாக மாறும் போது அவர்களது முயற்சிகளும் ஆக்கங்களும் அதிகரிக்கவே செய்கிறது. எனவே, படிப்படியாக ஒரு உரை ஒரு பெரிய உருப்பெறுகிறது. நாம் விரிவாக ஆராய்ந்தால், அது தமிழ் பல அடுக்குகளில் உள்ளன என்று நாம் கண்டறிவோம். முதலாம் நூற்றாண்டுத் தமிழ் போல் ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ் இல்லை. ஏழாம் நூற்றாண்டில் வேறு மாற்றங்களைத் தமிழ் கண்டுள்ளது. தமிழ் ஒன்று, தமிழ் இரண்டு, தமிழ் மூன்று, தமிழ் நான்கு ... என்று அற்புதமான, நூற்றுக்கணக்கான வகைகள். ஒரு முழுமையான பார்வையைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் ஒரு பொருத்தமானவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான சவால் என்று சொல்லலாம். அதற்கு, மிக அழகான, இன்னொரு பரிமாணம் இருக்கிறது. அது தான் இசை. நாங்கள் முன்னர் பேசிய தமிழ் எழுத்துகள் பலவற்றிற்கு, இசை வடிவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நூல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல தமிழ். தேவாரம் இசைக்கப்படுகிறது. திவ்வியப்பிரபந்தம் பாடப்படுகிறது. அவற்றைக் கேட்கும் போது, நீங்கள் இன்னொரு உலகுக்கே சென்றுவிடலாம்.
ஒரு வெளி ஆளாக இவற்றை நான் பார்க்கும் போது, அதன் அழகை உணரும் போது, அது நடந்து வந்த பாதை என்ன என்று தெரியும்போது, மனதில் இனம்புரியாத கொள்ளை மகிழ்ச்சி எனக்கு.
உங்களை மிகவும் கவர்ந்த, அல்லது நீங்கள் போற்றுகின்ற தமிழ் உரை அல்லது கவிதை என்றால் என்ன?
சில நேரங்களில், நீங்கள் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருக்கும் விடயத்தைப் புரிந்து கொள்ளும் போது, மிகப் பெரிய இன்பத்தைப் பெற முடியும். உடைக்க முடியாத கல் ஒன்றை உடைத்து விட்டது போன்ற பெருமை. உதாரணமாக நான் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது, “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்ற மிகவும் குறுகிய வரி ஒன்றின் பொருள் விளங்கிய போது புல்லரிக்கும் மகிழ்ச்சி எனக்கு. மிகவும் சின்ன வரி அது. ஆனால், மர்மமான வரி. விளக்கம், மறைமுக உள்ள வரி. நான் எப்படியோ, அந்த வரியைப் புரிந்து கொண்ட போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அல்லது உரியியல் அத்தியாயத்தில், உரிச்சொல் குறித்து நான் அறிந்துகொண்டபோது. அல்லது, படிப்படியாக ஒரு அகராதியை, 120 வார்த்தைகள் கொண்ட ஒரு அகராதி செய்யும் என் முதல் முயற்சியில் கடினமான வார்த்தைகளை நான் புரிந்து கொண்ட போது - தமிழ் அகராதி மரபினைத் தெரிந்து கொண்டபோது, அல்லது பின்னர், குறுந்தொகையை நான் படிக்கத் தொடங்கிய போது - “கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம், பழன வாளை கதூஉம் ஊரன், எம் இல் பெருமொழி கூறித், தம் இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே” என்ற வரிகளை என்னால் மனப்பாடம் செய்ய முடியும் என்று உணர்ந்த போது - இதையெல்லாம், நான் எனது சொந்த வரிகளாக மாற்ற முடியும், அல்லது அந்த வரிகளை வாழ வைக்கும் உரைஞராக முடியும் என்று உணர்ந்த போது, நான் மிகவும் மகிழ்வுற்றேன்.
“பித்தா பிறை சூடி” என்று என்னால் பாட முடியும், அல்லது “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி” என்று பாடமுடியும் என்று அறிந்த போது... தமிழில் 20 அல்லது 22 வெவ்வேறு பண்கள் இருப்பதைத் தெரிந்த போது, மிகவும் உவகையுற்றேன். எனவே, நான் இப்போது, எவ்வேளா வகையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தற்போது என்ன முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்?
நான் இப்பொழுது ஒரு மிகப் பெரும் பணியில் மூழ்கியிருக்கிறேன். TV கோபால ஐயர் பெயரைக் குறிப்பிட்டேன். “தமிழ் இலக்கணப் பேரகராதி” ஒன்றை உருவாக்கும் மாபெரும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. தொல்காப்பியத்தை நன்கு கற்றுணர்ந்த்தவர்... அவருக்கு நன்னூல் நன்றாக தெரியும். அதுமட்டுமல்ல, இலக்கண விளக்கம், இலக்கண கொத்து போன்றவற்றையும் அவர் பதிப்பித்திருக்கிறார். ஆயிரம் ஆயிரம் இலக்கண உரைகள், இலக்கியக் கட்டுரைகள்... மேலும் தேவாரம், திருமங்கையாழ்வார் என்பவற்றை பதிப்பில் ஏற்றியுள்ளார். பெரியார் திருமொழிக்கு உரை எழுதியுள்ளார். அவரது இலக்கணப் பேரகராதி 2004ம் ஆண்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. 4,794 பக்கங்கள் மற்றும் 13,895 உள்ளீடுகளைக் கொண்டுள்ளது. தமிழ் இலக்கணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - எழுத்து, சொல், அகம், புறம், யாப்பு, அணி, பாட்டியல், மரபு, சந்தம், விருத்தம், முதலியனவற்றைக் கொண்டிருந்தது, கோபால ஐயரின் தமிழ் இலக்கணப் பேரகராதி. அவரது இளைய சகோதரன், எஸ் கங்காதரன், தனது சகோதரரின் கலைக்களஞ்சியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார். ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் அச்சில் தோன்றவில்லை. துரதிருஷ்டவசமாக, அவர்கள் இருவரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர்களது எழுத்துப் பிரதி எம்மிடம் இருக்கிறது. எனவே, தமிழ் இலக்கணப் பேரகராதியின் இருமொழி பதிப்பு ஒன்றை உருவாக்கும் பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேன். இதிலுள்ள சொற்களை இலகுவாகத் தேடிப் பெறுவதற்காக, கணிணி வடிவில் XML வடிவத்தில் உருவாக்குவதில் அதிக நேரத்தை செலவழிக்கிறேன். கடந்த அக்டோபர் மாதம் முதல், இந்த முயற்சியில் மூழ்கியிருக்கிறேன். இது நிறைவு பெற, இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனக் கணித்துள்ளேன். மற்றொன்று, ஒரு மொழிபெயர்ப்புத் திட்டம் - தமிழ் பற்றி லத்தீன் மொழியில் உள்ள உரையை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன். இப்போதெல்லாம் லத்தீன் மொழியையும் தமிழையும் படிக்கக் கூடியவர்கள் ஒரு சிலரே. எனவே, பொது மக்களுக்கும் இது பயனுள்ளதாக அமைய, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
தற்போது, ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டு என்பது மிகப் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. இவை குறித்து, பண்டைய தமிழ் உரைகளில் நீங்கள் என்ன அறியக் கூடியதாக இருந்தது?
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் உடைய எல்லோரும், கலித்தொகையில் இது இடம்பெற்றிருக்கிறது என்பதை அறிவார்கள். மேலும், சிலப்பதிகாரத்தில் ஆச்சியர் குரவை என்ற அத்தியாயத்தில், ஏழு காளைகளை வளர்த்துவரும் ஏழு பெண்கள் வருகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒரு காளையை கவனித்து வருகிறாள். இந்தக் காளைகளை அடக்கும் இளைஞன், குறித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், ஆச்சியர் குரவை என்ற அத்தியாயம், உண்மையில், இசை குறித்தது. அந்தக் காலத்தில், ஏழு சுரங்களை ச ரி க ம ப த நி ச என்று சொல்லவில்லை... குரல், துத்தம் முதலியன என்று கூறினார்கள். இவையெல்லாம், பன்னிரண்டு நிலைகள் கொண்ட இராசி போன்ற ஒரு வட்டத்தில் நடைபெறும். சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியத்திலுள்ள மிக அழகான இலக்கியம் என்று நான் கருதுகிறேன். பேராசிரியர் ஹார்ட் கம்பராமாயணம் தான் இறந்தது என்று சொல்வதாகக் கேள்விப்பட்டேன், ஆனால், என்னைப் பொறுத்தவரை, சிலப்பதிகாரம் தான் மிகவும் அழகான, கடினமான உரை. அதில், அதிக தகவல்கள் உள்ளன. அது பண்டைய தமிழ் இசை பற்றி மட்டுமல்ல, அன்றைய நாட்களில் தமிழ்க் கலாச்சாரம் எப்படி இருந்தது என்பது பற்றி பல விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஏறு தழுவுதல்... இப்பொழுதைய பெயரான ஜல்லிக்கட்டு என்று இல்லை, ஏறு தழுவுதல் என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கலித்தொகையிலும், இது குறித்த பாடல்கள் உள்ளன. உங்கள் கேள்விக்குப் பதில் தந்தேனா?
பல புலம்பெயர் தமிழர்கள், உங்கள் சொந்த நாடான ஃபிரான்சில் வாழ்கிறார்கள். அவர்களோடு நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்களா?
ஆமாம், ஆமாம், புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பங்களிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஃபிரான்சில் சில தமிழ் நண்பர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். ஃபிரான்சில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்யும் பல கூட்டங்களில் நான் பங்கு கொள்வேன். தமிழ் சோலை என்று தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் வகுப்புகள் மற்றும் பயிற்சி வழங்கும் நிலையங்கள் குறித்து நான் அறிவேன். பல முயற்சிகள்... அனைத்தும் திறம்பட செயலாக்கி வருகிறார்கள். அதிகாரபூர்வமாக, ஒரு இலட்சம் தமிழர்கள் ஃபிரான்சில் வாழ்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள் என நான் கருதுகிறேன். நான் பல ஆண்டுகளாக மற்றைய பல நாடுகளில் வாழும் பல புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருக்கிறேன், முக்கியமாக, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் ... நான் இன்றும் பலருடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் துடிப்புடன் இயங்குகிறார்கள் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொழிகளில் பல விடயங்களை முன்னெடுக்க, இணையத்தளங்கள் உதவுகின்றன. அவை இல்லையென்றால், பல விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாது.
உங்கள் ஆய்வுகளுக்காக, நீண்ட நாட்கள் பயணங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு, உங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி?
ஆமாம்... நான் செய்பவற்றிற்கு, எனது குடும்பத்தினர் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். எனது மனைவி, ஒரு தமிழ் நிபுணர் ஆவார். அவர் நற்றிணை, குறுந்தொகை போன்றவற்றில் திறனாய்வு செய்துள்ளார். இப்போது அவர் அகநானூறில் திறனாய்வு செய்து வருகிறார்.
இன்னொரு விடயத்தை நான் சொல்ல மறந்துவிட்டேன். 1981ம் ஆண்டு, நான் பாண்டிச்சேரி வருகிறேன் என்று அறிந்த போது, அப்போது எனக்கு இருபத்தைந்து வயது. எனது குடும்பத்தாரிடம் கூறியபோது, எனது தாய்வழித் தாத்தாவின் இளைய சகோதரி, அந்த நேரத்தில் அவருக்கு எழுபது வயது. தனது மாமன் ஒருவர் சமயத்தைப் பரப்பும் நோக்கில், இந்தியாவில் பாண்டிச்சேரிக்குச் சென்றிருந்ததாகக் கூறினார். அதாவது, எனக்கு ஐந்து சந்ததி முன்னர். அவர் பிறந்தது, 1801ம் ஆண்டு.
பாண்டிச்சேரியில் இருந்த போது, அவர் தமிழ்-ஃபிரஞ்சு அகராதி செய்வதில் இன்னொருவருடன் ஈடுபட்டிருக்கிறார். அந்த அகராதியை நீங்கள் இப்பொழுதும் வாங்கலாம். அவரது பெயர், Mousset Et Dupuis. அந்த அகராதியில், ஒரு சுவையான அம்சம் என்னவென்றால், ஃபிரான்ஸில், நான் பிறந்த பகுதியில் பயன்படுத்தப்படுகின்ற சில சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அந்த சொற்கள், பாரிஸில் கிடையாது. எனவே, மொழி வகைகள் மற்றும் பேச்சுவழக்கில் ஆய்வு செய்பவர்கள் இவையெல்லாம் ஒரு அழகான கலவை என்பதை அறிவார்கள். அந்தக் கலவையில் எனது குடும்பமும் தம் பங்களிப்பை நீண்ட நாட்களாக செய்து வருகிறது என்பதில் பெருமை. எனக்கு, மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. அப்படி இருந்திருந்தால், இதில் உண்மை இருக்கிறது என்று நம்பக்கூடியதாக இருக்கும்.
எங்களுக்காக நேரம் ஒதுக்கி, மிக விரிவான பதில்களைத் தந்த உங்களுக்கு, மிக்க நன்றி Dr Jean-Luc Chevillard.
மிக்க நன்றி. மற்றவருடன் பேசும்போது எனது சிந்தனையும் தூண்டப்படுகிறது. தொடர்பில் இருப்போம். வருகிறேன்.