ஆஸ்திரேலியாவின் மண்ணுடனும் மாண்புடனும் மரபுடனும் தொடர்புடையவை இந்த வாட்டில் மரங்களும் மலர்களும்.
அகேஷியா (Acacia) வகை மரங்களைத்தான் ஆஸ்திரேலியாவில் வாட்டில் (wattle) என்கிறோம். ஆஸ்திரேலியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகேஷியாக்கள் உள்ளன. அவற்றுள் 99 சதவீதம் ஆஸ்திரேலியக் கண்டத்தில் மட்டுமே காணப்படக்கூடியவை என்பது சிறப்பு. ஒவ்வொரு வகை வாட்டிலுக்கும் ஒவ்வொரு வகை குணமும் இயல்பும் உண்டு. சில உண்ணத்தகுந்தவை. சில உயிர்போக்குபவை. சில இருபது வருடங்கள் வாழும். சில இருநூறு வருடங்கள் வாழும். ஆயிரம் வகையுள் Golden wattle எனப்படுகிற தங்க வாட்டில் மலர்க்கொத்து 1912 முதல் அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ளது. ஆனால் 1988-ல்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.
எலிசபெத் ராணியின் முடிசூட்டுவிழா 1953-ல் நடைபெற்றபோது அவர் அணிந்திருந்த ஆடையில் நெய்யப்பட்டிருந்த அனைத்து காமன்வெல்த் நாட்டு மலர்களுடன் ஆஸ்திரேலியாவின் தங்க வாட்டிலும் இடம்பெற்றிருந்தது. பதவியேற்றபிறகு 1954-ல் அவரது முதல் ஆஸ்திரேலியப் பயணத்தின்போது அவருக்குப் பரிசளிக்கப்பட்ட வைரப்பதக்கத்தில் வாட்டில் மலர்க்கொத்து இடம்பெற்றிருந்தது. 9 செ.மீ. நீளம் மற்றும் 4.5 செ.மீ. அகலத்தில் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட அந்த பதக்கத்தில் மஞ்சள் மற்றும் வெள்ளை வைரங்கள் வாட்டில் மற்றும் tea tree மலர்களைக் குறிக்கும்வண்ணம் உருவாக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலிய அரசு மற்றும் மக்களின் சார்பாக அந்நாளைய பிரதமர் ராபர்ட் மெக்கென்ஸி அவர்களால் ராணிக்கு வழங்கப்பட்டது.

Australia coat of arms Source: Wikimedia
அந்த சுற்றுப்பயணத்தில் மட்டுமல்லாது அதன் பிறகான ஆஸ்திரேலியப் பயணம் ஒவ்வொன்றின்போதும் அவர் அதை அணிந்திருந்தார். அது மட்டுமல்ல, இங்கிலாந்தின் அரசகுடும்ப நிகழ்வுகள், திருமண விழாக்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், பொதுமக்கள் சந்திப்பு, காமன்வெல்த் தினம், அயர்லாந்து பயணம் என பல்வேறு தருணங்களிலும் அணிந்து மகிழ்கிறார். கடந்த 2019-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற Royal Maundy Service-ன் போதும் அவர் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பதக்கத்தின் நகல் ஒன்று தற்போது சிட்னி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மலர்களும் பூத்துக்குலுங்கும் வசந்தகாலத்தின் அழகுக்கு அழகு கூட்டும்வண்ணம் கொத்துக்கொத்தாய்… கிளைகள் முழுவதும் குட்டிக்குட்டி தங்கப் பந்துகளைக் கட்டித்தொங்கவிட்டாற்போல வாட்டில் மரங்கள் தனித்த அழகுடன் விளங்கும். இதன் இலைகள் கருக்கரிவாள் வடிவில் தொய்ந்த நிலையில் காணப்படும்.
ஆஸ்திரேலிய விளையாட்டு வீர்ர்களின் சீருடையான பச்சை மஞ்சள் வண்ணம், மலர்ந்துகுலுங்கும் தங்க வாட்டில் மரத்தின் வண்ணமே. விளையாட்டுகளுக்கான ஆஸ்திரேலியக்கொடியில் மஞ்சள்வண்ண கங்காரு பச்சைவண்ணப் பின்னணியில் காட்சியளிப்பதன் காரணமும் இதுவே.
வாட்டில் மலர்களுள் தங்க வாட்டிலுக்கு தேசிய மலர் என்ற அந்தஸ்து இருந்தாலும் பிற வகை வாட்டில் மலர்களும் அழகிலும் வசீகரிப்பிலும் குறைந்தவை அல்ல. மூன்றுமாத காலமாய் முடக்கிவைத்திருக்கும் குளிரிலிருந்து விடுபட்டு புல் முதல் பெருமரம் வரை பூத்து மலர்ந்து பூமியை அலங்கரிக்கும் வசந்தகாலத்தின் முதல்நாளை வரவேற்கும் முகமாகவும், களையிழந்துகிடக்கும் வாழ்வை கண்கவர் வண்ணங்களோடும் புத்துணர்வோடும் எதிர்கொள்ளும் பொருட்டும் வருடந்தோறும் செப்டம்பர் முதல்நாள் வாட்டில் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாட்டில் தினத்தன்று ஒருவருக்கொருவர் வாட்டில் தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டும், வாட்டில் மலர்க்கொத்துகளை சட்டையிலோ தொப்பியிலோ அணிந்தும், வாட்டில் மலர்ப் பாடல்களை நண்பர்களோடும் குழந்தைகளோடு பாடியும் கொண்டாடுகின்றனர்.

Source: Wikimedia
ஒவ்வொரு ஆண்டும் அவ்வாண்டின் சாதனையாளர்களுக்கு கோல்டன் வாட்டில் விருது வழங்கப்படுகிறது. சென்ற 2019- ஆம் ஆண்டுக்கான கோல்டன் வாட்டில் விருதினை டென்னிஸ் வீரர்களான ஆஷ்லே பார்ட்டியும் டைலன் ஆல்காட்டும் பெற்றனர். 2020-ஆம் ஆண்டுக்கான விருது யாருக்கு என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில் கொரானாவுக்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலியாவின் அனைத்து சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணியாளர்களே அற்புதமான சாதனையாளர்களென இவ்வாண்டின் விருதாளர்களாக அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் பற்றி உலகம் அறிவதற்கு முன்பே, பெரும் பொருட்செலவிலும் உழைப்பிலும் உருவாக்கப்பட்டு, உலகச்சந்தையில் ஆஸ்திரேலியாவின் பிராண்ட் அடையாளமாக புதிதாக அறிவிக்கப்பட இருந்த கோல்டன் வாட்டில் சின்னம், தற்போது கொரோனா வைரஸைப் போன்று இருப்பதாக அதிருப்திகளை எழுப்பியதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
வாட்டில் மலர்கள் ஒற்றுமை மற்றும் புத்துயிர்ப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. வாட்டில் மரங்களையும் மலர்களையும் பாடாத ஆஸ்திரேலியக் கவிஞர்கள் இல்லை எனலாம். அந்த அளவுக்கு மக்களின் இயல்புவாழ்க்கையோடு இணைந்திருப்பவை வாட்டில் மரங்கள்.
ஆஸ்திரேலிய மண்ணில் வந்திறங்கி நிலைபெற்ற முந்நூறு ஆண்டுகாலத் தலைமுறைகளின் வாழ்க்கைகளில் மட்டுமல்ல. சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளாய் இங்கு வேரூன்றி வாழ்ந்துவரும் பூர்வகுடி மக்களுடைய வாழ்விலும் இரண்டறக் கலந்தவை வாட்டில் மரங்கள். Boree, myall, mulga, nelia, yarran யாவும் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழியில் அகேஷியா மரங்களைக் குறிக்கும் சொற்கள்.

Source: public domain
பூர்வகுடி மக்கள் தங்களுடைய ஆண்டாண்டுகால வாழ்வியல் அனுபவங்கள் மூலமாக எந்தெந்த வியாதிகளுக்கு எந்தெந்த வாட்டில் மரங்கள் மருந்தாகும் என்ற ரகசியம் அறிந்தவர்கள். எந்தெந்த வாட்டில் மரங்கள் உணவாகும் எவையெவை நச்சாகும் என்ற விபரம் அறிந்தவர்கள். குறிப்பிட்ட வாட்டில் மரத்தின் மென்பட்டைகளை நார்போல உரித்து தண்ணீரில் ஊறவைத்து காயங்களுக்குக் கட்டுப்போடும் வித்தை அறிந்தவர்கள். மற்றுமொரு வகை வாட்டில் மரத்தின் வன்பட்டைகளைப் பெயர்த்துக் கட்டி முறிந்த எலும்புகளைக் கூட்டும் உத்தி அறிந்தவர்கள்.
உணவும், மருந்தும் அல்லாது ஈட்டி, பூமராங், தீக்கோல், தோண்டுகோல், மீன் குத்துக்கோல், கதாயுதம், கேடயம் போன்ற வேட்டை மற்றும் தற்காப்பு ஆயுதங்களையும் அன்றாட உபயோகப் பொருட்களையும், இசைக்கோல்களையும் வாட்டில் மரக்கட்டைகளிலிருந்தும் கிளைகளிலிருந்தும் தயாரிக்கும் திறமையும் நேர்த்தியும் கைவரப் பெற்றவர்கள். வாட்டில் மரங்களிலிருந்து பிசின், சாம்பல், சாயம், வாசனைப்பூச்சு போன்றவற்றைத் தயாரிக்கும் பாரம்பரிய வழிமுறைகள் அறிந்தவர்கள். வாட்டில் பூக்கள் மலரும் பருவத்தைக் கொண்டு திமிங்கலங்களின் புலம்பெயர்தலையும், ஆறுகளில் விலாங்கு மீன்களின் வரத்தையும் கணக்கிட்டனர்.
தற்காலத்திலும் வாட்டில் மரங்களின் பயன்பாடு பெருமளவில் பெருகியுள்ளது. உறுதியான வாட்டில் மரக்கட்டைகள் தற்போது வீட்டு உபயோகத்துக்கான மரச்சாமான்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. வாசனைத்திரவிய தயாரிப்பிலும், பூங்கொத்து வணிகத்திலும் பூக்கள் நல்ல லாபம் ஈட்டக்கூடியவையாய் உள்ளன. வாட்டில் மரப்பட்டைகள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் நிறமேற்றியாகப் பயன்படுகின்றன. வாட்டில் மரக்கட்டைகள் நல்ல எரிபொருளும் கூட.
இவ்வளவு பயன்பாடுகள் அல்லாது ஆஸ்திரேலிய மக்களிடம் ஒன்றுபட்ட தேச உணர்வினை ஊட்டவும் இந்த தங்க வாட்டில் மலர்கள் பெரிதும் உதவியிருக்கின்றன என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
1901-ல்தான் ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு உருவாகி பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற ஒரே நாடானது. அதற்கு முன்பு இப்போதிருக்கும் ஆறு மாநிலங்களும் ஆறு தனித்த குடியேற்ற நாடுகளாக சுயாட்சி நடத்திக்கொண்டிருந்தன. முதலாம் உலகப்போரின்போது தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தங்க வாட்டில் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. காயமுற்றிருக்கும் போர்வீர்ர்களுக்கு பாடம் பண்ணப்பட்ட தங்க வாட்டில் மலர்ச்சருகுகள் கடிதங்களோடு ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. இறந்துபோன போர்வீரர்கள் தங்க வாட்டில் மலர்க்கொத்துடன் புதைக்கப்பட்டார்கள். தங்க வாட்டில் மலர்களின் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் போர்நிதிக்காக செலவழிக்கப்பட்டது.
இன்றும் நாட்டின் மிக உயரிய விருதுகளான Order of Australia medal, National Emergency medal இவற்றோடு ராணுவத்தின் பல்வேறு விருதுகளிலும் பதக்கங்களிலும் தங்க வாட்டில் மலர்கள் இடம்பெற்றுள்ளன. வாட்டில் மலர்களைத் தாங்கிய பல அஞ்சல் தலைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
இத்தனைப் பெருமைகள் கொண்ட வாட்டில் மரங்கள் அவற்றின் பூக்களின் அழகுக்காக அலங்கார மரங்களாக தென்னாப்பிரிக்கா, டான்சானியா, இத்தாலி, போர்ச்சுக்கல், நியூசிலாந்து, இந்தியா, இந்தோனேஷியா போன்ற பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் சில வருடங்களிலேயே மதிப்பிழந்து வேண்டப்படாத களைகளாக ஆகிவிட்டன. எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மதிப்பு. அல்லவா?