ஆஸ்திரேலிய மண்ணில் குதிரைகள் அறிமுகமானது 1788-ஆம் ஆண்டுதான். ஒரு ஆண் குதிரை, ஐந்து பெண் குதிரைகள், ஒரு குட்டி என சிறியதொரு குடும்பமாய் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தன. ஆனால் இன்று?
ஆஸ்திரேலியாவிலுள்ள Brumby எனப்படும் காட்டுக்குதிரைகளின் எண்ணிக்கை மட்டுமே நான்கு இலட்சம் இருக்கும். வளர்ப்புக் குதிரைகளின் எண்ணிக்கையோ பன்னிரண்டு இலட்சம் இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் ஒரு வருடத்தில் பிறக்கும் பந்தயக் குதிரைக்குட்டிகளின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 17,000. அவற்றுக்கு பயிற்சியாளர்கள், பராமரிப்பாளர்கள், ஓட்டுபவர்கள் என பெரும் முதலீட்டுடன் மிகப்பெரும் பொருளீட்டும் தொழிலாக பந்தயக்குதிரை வளர்ப்பு மாறியுள்ளது. வருடத்துக்கு 19,000-க்கும் மேற்பட்ட குதிரைப் பந்தயங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகின்றன. இவற்றின் மைய ஈர்ப்பாக மெல்பேர்ன் கோப்பை குதிரைப்பந்தயம் விளங்குகிறது.
மெல்பேர்னில் உள்ள Flemington racecourse-ல் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று சரியாக பிற்பகல் மூன்று மணிக்கு நாட்டின் மொத்தக்கவனத்தையும் தன்பால் ஈர்த்துக் குவித்து, எண்ணற்ற இதயத்துடிப்புகளை எகிறச்செய்யும் மூன்றரை நிமிட அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு சரியாக 160 ஆண்டுகளுக்கு முன்பு 1861-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குதிரைப்பந்தயம் இன்று பன்னாட்டுப் பந்தயக்குதிரைகளின் பாயுந்திறனை மெய்ப்பிக்கும் ஒரு பந்தயக்களமாக ஆகியுள்ளது.
The race that stops the nation என்பதே cup day என்று சொல்லப்படும் மெல்பேர்ன் கோப்பை தினத்தின் முழக்கமாக உள்ளது. தேசத்தின் இயக்கத்தையே நிறுத்திவைக்கும் ஓட்டம் என்ற வரிகள் பொய்யன்று. ஒட்டுமொத்த நாட்டையும் கணப்பொழுது ஸ்தம்பிக்கவைக்கும் இப்பந்தயத்தைக் காண உலக அரங்கிலிருந்து பார்வையாளர்கள் வருடந்தோறும் வந்துகுவிகின்றனர். மெல்பேர்ன் கோப்பை தினத்தன்று பந்தய மைதானமே விழாக்கோலம் பூண்டிருக்கும். மைதானத்தில் காணுமிடமெல்லாம் பகட்டும் கவர்ச்சியும் நிறைந்திருக்கும். விசேட ஒப்பனைகளும் வித்தியாசமான சிகையலங்காரங்களும் விநோத ஆடை வடிவமைப்புகளும் அலங்காரத் தொப்பிகளும் காலணிகளும் என ஆடவரும் பெண்டிரும் விதவிதமாய்த் தங்களை அலங்கரித்துக்கொண்டு இப்பந்தயத்தைக் கண்ணுறவும் கலந்துகொள்ளவும் வருவார்கள். புதுமையான, வித்தியாசமான, கவர்ச்சிகரமான வடிவமைப்புள்ள ஆடையணிந்திருக்கும் பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
இவ்வாண்டு கோவிட் தொற்று காரணமாக அரங்கு நிறைந்த கூட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சப் பார்வையாளர்களுடன். மெல்பேர்ன் குதிரைப்பந்தய வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வுகளின் வரிசையில் இவ்வாண்டு நிகழ்வும் பதிவாகவுள்ளது.
மெல்பேர்ன் கோப்பை பந்தயத்தின் கடந்த 2019-ஆம் ஆண்டு வெற்றியாளர்க்கான பரிசுத்தொகை $8,000,000 மற்றும் 250,000 டாலர்கள் மதிப்புள்ள வெற்றிக்கோப்பை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பரிசுத்தொகையில் 85% குதிரையின் உரிமையாளர்க்கும், 10% சதவீதம் அதன் பயிற்சியாளருக்கும், மீதமுள்ள 5% ஜாக்கிக்கும் கிடைக்கும். தற்போது வழங்கப்படும் வெற்றிக்கோப்பை இந்த வடிவத்தை அடைவதற்கு முன்பு பற்பல மாற்றங்களை சந்தித்துவந்துள்ளது. தற்போது வழங்கப்படும் ஒன்றரை கிலோ எடையுள்ள வெற்றிக்கோப்பை 18 காரட் தங்கத்தாலானது. வெற்றிபெற்றக் குதிரையின் பயிற்சியாளருக்கும், ஓட்டுநருக்கும் அக்கோப்பையின் சிறு மாதிரிவடிவம் பரிசாக வழங்கப்படுகிறது. கூடவே அக்குதிரையின் பராமரிப்பாளருக்கு ஆஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் பந்தயக்குதிரை பயிற்சியாளர் Tommy Woodcock- பெயரால் நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. இவையெல்லாம் இப்போதுதான்.
முதன் முதலாக நடைபெற்ற மெல்பேர்ன் கோப்பை பந்தயத்தின் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? 1861-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதிதான் முதல் மெல்பேர்ன் கோப்பை குதிரைப்பந்தயம் நடைபெற்றது. இதில் 17 குதிரைகள் கலந்துகொண்டன. பரிசுத்தொகை 930 பவுண்டுகள் மற்றும் ஒரு தங்க கைக்கடிகாரம். அன்றைய தினம் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் நான்காயிரம். நியூ சௌத்வேல்ஸ் நௌராலிருந்து கொண்டுவரப்பட்ட ஆர்ச்சர் என்னும் குதிரை, மிகுந்த எதிர்பார்ப்பிலிருந்த விக்டோரியாவின் சாம்பியனான மோர்மானை வென்று முதலிடத்துக்கு வந்தது. மறு வருடமும் கலந்துகொண்டு சுமார் ஏழாயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் இருபது குதிரைகளுடன் ஓடி முந்தி முதலிடத்துக்கு வந்தது ஆர்ச்சர். இம்முறையும் மோர்மான் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது.
மூன்றாம் வருடமும் ஆர்ச்சர் பந்தயத்துக்குத் தயாரானது. ஆனால் அதன் பயிற்சியாளர் எட்டினியிடமிருந்து வரவேண்டிய ஒப்புதல் படிவம், தபாலில் வந்துசேர தாமதமானதால் ஆர்ச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது முறையன்று என்று எண்ணிய பிற பங்கேற்பாளர்களும் பந்தயத்தைப் புறக்கணிக்க மெல்பேர்ன் கோப்பை குதிரைப்பந்தய வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவு குதிரைகளோடு, சொல்லப்போனால் ஏழே ஏழு குதிரைகளோடு பந்தயம் நடைபெற்றது. அதிக எண்ணிக்கையில் குதிரைகள் பங்கேற்ற ஆண்டு 1890. குதிரைகளின் எண்ணிக்கை 39.
ஆர்ச்சரின் அன்றைய தொடர் சாதனையை 1968, 69 ஆம் ஆண்டுகளில் rain lover என்ற குதிரையும் 1974,75 ஆம் ஆண்டுகளில் Think big என்ற குதிரையும் முறியடிக்கும்வரை நூறு வருடங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாத சாதனையாகவே இருந்துவந்தது. Makybe Diva என்ற குதிரை 2003,2004,2005 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மெல்பேர்ன் கோப்பை பந்தயங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
மெல்பேர்ன் கோப்பை வரலாற்றில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியப் பந்தயக்குதிரை வரலாற்றிலேயே இன்றுவரை பிரமிப்பான சாதனைக்குரியதாக கருதப்படுவது 1930-ஆம் ஆண்டின் வெற்றிக்குதிரையான Phar lap. மூன்று வயதில் ஓட ஆரம்பித்த அது ஐந்தரை வயதுக்குள் பங்கேற்ற 51 பந்தயங்களுள் வென்றவை 37. நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் பயிற்சியளிக்கப்பட்ட அது, உலக சாதனையின் உச்சத்தில் இருந்த சமயம், கலிஃபோர்னியாவில் Agua Caliente Handicap பந்தயத்தில் கலந்துகொள்ளச் சென்றது, வெற்றியும் பெற்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக திடீரென்று இறந்துபோனது. இறப்புக்கான காரணம் கிருமித்தொற்று என்று ஒரு பக்கமும் ஆர்சனிக் விஷம் என்று இன்னொரு பக்கமும் கருத்துகள் நிலவிவருகின்றன. மர்மம் நீடிக்கும் Phar lap-ன் மறைவு பந்தய உலகில் இன்றுவரையிலும் கூட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பாகவே உள்ளது.
ஃபார்லேப் இறந்தவுடன் அதன் இறப்புக்கான காரணம் கண்டறியப்படுவதற்காக அதன் இதயம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சராசரி பந்தயக்குதிரைகளின் இதயம் 3 முதல் 4 கிலோ வரையிலும்தான் இருக்கும். ஃபார்லேப்பின் இதயமோ 6.35 கிலோ எடையுடன் இருந்தது. பிரமிக்கவைக்கும் அதன் அபரிமிதமான அளவினால் சோதனைக்குப் பிறகு Australian Institute of Anatomy-க்கு தானமளிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது.
பார்வையாளர்களின் இதயத்தைத் துடிக்கவைத்த அதன் இதயம், துடிப்பை நிறுத்திக்கொண்ட பிறகும் காட்சிப்பொருளாக தற்போது கான்பெராவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது அதன் உடல் பதப்படுத்தப்பட்டு மெல்பேர்ன் அருங்காட்சியகத்திலும் எலும்புக்கூடு நியூசிலாந்து அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.. Phar lap-ன் நினைவாக பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன் வாழ்க்கை Phar lap என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளியாகியுள்ளது. ஃபார் லேப் மறைந்தபோது அதன் மறைவுக்காக எண்ணற்ற இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. ஒரு குதிரையின் மறைவுக்காக நாடே துக்கம் அனுசரித்தது.
மெல்பேர்ன் கோப்பை தினம் விளையாட்டு, கலாச்சாரம், தேசிய உணர்வு இவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாது வியாபார நோக்கத்தின் அடிப்படையிலும் பிரபலமான ஒன்று. பந்தய நாளைக் குறிவைத்து பல சூதாட்டத் தளங்கள் தங்கள் முன்பதிவுகளைத் தொடங்கிவிடுகின்றன. எந்தெந்தக் குதிரைகளில் பணம் கட்டலாம் என்பதோடு அக்குதிரையின் பிறப்பு, வளர்ப்பு, சிறப்பு, தலைமுறை, வரலாறு, உரிமையாளர், ஓட்டுநர், பயிற்சியாளர் உள்ளிட்டத் துல்லியத் தகவல்களோடு எண்ணற்ற சூதாட்டத் தளங்கள் பந்தயக் குதிரைகளின் பாய்ச்சலுக்கேற்ப குதிரைப்பந்தய ஆர்வலர்களின் இதயத்துடிப்பை எகிறவிட்டுப் பணம் பார்க்கின்றன. பரம்பரை ரசிகர்கள் மட்டுமல்லாது, பாமரர்களும் இந்த சூதாட்டங்களில் பங்கேற்று தங்கள் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம்.
இந்தக் கொண்டாட்டமெல்லாம் ஒரு புறம் இருக்க, குதிரைப்பந்தயத்தில் குதிரைகள் துன்புறுத்தப்படுவதாக எதிர்ப்புக்குரல் எழுப்பும் விலங்குநல ஆர்வலர்களும் சூதாட்ட முறைமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்களும் ஆஸ்திரேலியக் குதிரைப்பந்தயங்களின் மைய ஈர்ப்பாய்க் கருதப்படும் மெல்பேர்ன் கோப்பை பந்தயத்தைத் தடைபண்ணக் கோரி அமைதிப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்திவருகின்றனர்.
இவ்வாண்டும் பந்தயத்துக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள், ஊடகப் பிரச்சாரங்கள் பலவும் வெளியிடப்பட்டுவருகின்றன. வழக்கம்போலவே இவ்வாண்டும் அவற்றைப் புறம் தள்ளி மெல்பேர்ன் கோப்பைக்கான பந்தய ஏற்பாடுகள் கோவிட்-க்கான கட்டுப்பாடுகளோடும் பாதுகாப்பு விதிமுறைகளோடும் வெகுசிறப்பாக நடைபெற்றுவருகின்றன.