18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தாம் எங்கு வாழ வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாக தீர்மானிக்க முடியாது. இதன்காரணமாக பாதுகாப்பான மற்றும் நடைமுறைச் சாத்தியமான குழந்தைகளை மையமாகக் கொண்ட பராமரிப்பு ஏற்பாடுகள் குறித்து பெற்றோர்களே உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டும்.
ஆஸ்திரேலிய குடும்பச் சட்டம், திருமணமான, de facto அல்லது ஒரே பாலினப் பெற்றோருக்கும், தாத்தா, பாட்டி போன்ற பராமரிப்பாளர்களுக்கும் சமமாகப் பொருந்தும்.
ஒரு குடும்பத்திற்குள் பாலினம் அல்லது பெற்றோருக்குரிய பாத்திரங்கள் பற்றி எந்த அனுமானமும் செய்யாமல், பெற்றோர் இருவருடனும் அர்த்தமுள்ள உறவுகளைப் பேணுவதற்கு குழந்தைகளுக்கு உரிமை இருப்பதை இது உறுதி செய்கிறது.
எனவே, பிரிந்த பிறகு, எந்தவொரு பெற்றோரும் தானாக ஒரு குழந்தையைப் பராமரிக்கவோ அல்லது மற்ற பெற்றோரின் சார்பாக முடிவுகளை எடுக்கவோ உரிமை பெற மாட்டார்கள்.
குடும்பச் சட்டத்தின் கீழ், பெற்றோரின் பொறுப்பு சமமாகப் பகிரப்பட்டுள்ளதாக விளக்குகிறார் விக்டோரியா சட்ட உதவி மையத்தில் செயல் திட்ட மேலாளராக உள்ள Bernadette Grandinetti.

இருப்பினும், குடும்ப வன்முறை வழக்குகள் போன்றவற்றில் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பார்ப்பதை நீதிமன்றங்கள் மட்டுமே தடுக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமமாக பகிரப்பட்ட பெற்றோரின் பொறுப்பு என்பது பெற்றோர் இருவரும் குழந்தைக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ஒரு குழந்தை ஒவ்வொரு பெற்றோருடனும் சமமான நேரத்தை செலவிட வேண்டும் என்று அர்த்தமல்ல.
எந்த ஏற்பாடு மிகவும் பொருத்தமானது என்பதை பெற்றோர் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.
தமது பிள்ளைகள் தொடர்பிலான parenting plan-பெற்றோருக்குரிய திட்டங்களில் தற்போதைய நிதி ஏற்பாடுகள் பற்றிய ஒப்பந்தம் அடங்கலாம்.
இருப்பினும் குழந்தை வளர்ப்புத் திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வடிவத்தைப் பின்பற்றுவதில்லை எனவும், பெற்றோர் இருவரும் அமர்ந்துபேசி இதனைத் தீர்மானிக்க வேண்டுமெனவும் கூறுகிறார் ACT Women's Legal Service மூத்த வழக்கறிஞரான Shireen Faghani.
பெற்றோருக்கு இடையே பிரிவு ஏற்பட்ட பின்னர் பிள்ளைகள் தொடர்பில் அவர்களுக்கிடையில் ஏற்படக்கூடிய மோதலைக் குறைப்பதே parenting planஇன் நோக்கமாகும். இருப்பினும், parenting plan சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல. எனவே ஒருவர் இத் திட்டத்தைப் பின்பற்றுவதை நிறுத்தினால், அவரை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. அதேபோன்று குழந்தைகளுக்கு வயதாகும்போது அவர்களின் தேவைகள் மாறும்போது அவர்களுக்கான திட்டங்களை நீங்கள் மாற்றலாம்.

ஆனால் பெற்றோருக்குரிய ஏற்பாடுகள் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அதைச் சட்டப்பூர்வமாக்க விரும்பினால், ஆஸ்திரேலியாவின் Federal Circuit மற்றும் குடும்ப நீதிமன்றத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர்களால் தமக்கிடையில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், அடுத்த கட்டமாக family dispute resolution தீர்வாக அமையலாம். இதனூடாக மூன்றாம் தரப்பினரிடன் தலையீட்டுடன் பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார் Bernadette Grandinetti.
பிரிந்து செல்லும் பெரும்பாலான பெற்றோர் நீதிமன்றத்தை நாடாமலேயே உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதாகச் சொல்கிறார் ஆஸ்திரேலியாவின் Federal Circuit மற்றும் குடும்ப நீதிமன்றத்தின் மூத்த நீதித்துறை Registrar Anne-Marie Rice
தகராறுகளை முடிந்தவரை விரைவாகவும் செலவு குறைந்ததாகவும் தீர்க்க பெற்றோருக்கு உதவ வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது என்றபோதிலும், நீதிமன்றத்தை நாடுவதென்பது கடைசித் தெரிவாக இருப்பது சிறந்தது என்கிறார் Registrar Anne-Marie Rice.

Family Dispute Resolution Practitioner அல்லது FDRP என்பவர் சச்சரவில் உள்ள குடும்பங்களுடன் பணிபுரியும் ஒரு சிறப்பு பயிற்சி பெற்ற mediator-பிணக்குத் தீர்ப்பவராவார்.
Family Relationship Centres இணையதளத்தில் FDRPகளின் பட்டியலைக் காணலாம், அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் கட்டணங்கள் உள்ளிட்ட தகவல்களையும் நீங்கள் பார்வையிடலாம். கூடுதலாக, தனியார் mediators உம் இந்த சேவையை வழங்குகிறார்கள். ஆனால் இவர்களுக்கான கட்டணம் அதிகமாக காணப்படலாம்.
இதேவேளை நீதிமன்றத்தை நாடாமல் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் உங்களுக்கு உதவ குடும்ப நீதிமன்றம் ஆன்லைன் ஆதாரங்களை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் சட்ட உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது உதவிக்கு Family Relationships Onlineஐ பார்வையிடலாம்.
Family Dispute Resolution ஊடாக தீர்வு நாடுபவர்களுக்கு தனியாக ஒரு வழக்கறிஞர் தேவையில்லை என Registrar Anne-Marie Rice சொல்கிறார்.
Family Dispute Resolutionஇல் கலந்துகொள்ள மற்ற பெற்றோரிடமிருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், அதை கவனமாக பரிசீலித்து, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் சட்ட ஆலோசனையைப் பெறலாம்.
கலந்துகொள்ள வேண்டாம் என நீங்கள் முடிவுசெய்தால், உங்களது பங்களிப்பு இல்லாமல் ஒரு முடிவு எட்டப்படலாம்.
பெற்றோர்கள் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாதபோது, குடும்பச் சட்டத்தின்படி, குழந்தையின் நலன்களின் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் முடிவெடுக்கும். குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும்.
இருப்பினும், ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்ற உத்தரவுகள் வேறுபடுகின்றன.

நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்ற அதேநேரம் இந்த உத்தரவுகளை மீறுவது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இதேவேளை நீதிமன்றத்தின் உதவியை நாடுவதென்று நீங்கள் தீர்மானித்தால் உங்கள் வழக்கை முன்வைக்க பல எழுத்துப்பூர்வ ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும், மேலும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்துகள் இருந்தால் அடையாளம் காணப்பட வேண்டும். Federal Circuit மற்றும் குடும்ப நீதிமன்ற இணையதளம் தேவையான அனைத்து ஆவணங்களின் பட்டியலை வழங்குகிறது.
அதேபோன்று உங்களுக்கு உதவும் வகையிலான காணொளிகளும் இந்த இணையத்தளத்தில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் தேவைப்பட்டால் மொழிபெயர்ப்புச் சேவைகளையும் நீங்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
உங்கள் குழந்தையுடன் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்வதற்குத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் நீதிமன்ற உத்தரவை நாடாத வரை, மற்ற பெற்றோரின் ஒப்புதல் தேவை என்று ACT Women's Legal Service மூத்த வழக்கறிஞரான Shireen Faghani கூறுகிறார்.
ஒரு குறிப்பிட்டparenting arrangement- பெற்றோருக்குரிய ஏற்பாட்டிற்கு உட்படுமாறு உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால், குறிப்பாக நீங்கள் குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிப்பது முக்கியம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




