ஆஸ்திரேலியாவின் வரலாறு, கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் அரசியல் அமைப்பு பற்றிய உங்கள் அறிவை குடியுரிமை பரீட்சை அளவிடுகிறது.
ஆஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடு. இது உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான கலாச்சாரங்களைக் கொண்டதுடன் 1945 முதல் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பல வழிகள் உள்ளன. விண்ணப்பிக்கும் முன் நீங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். 'Conferral' மற்றும் ''descent'' ஆகிய இரண்டின் அடிப்படையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
நிரந்தர வதிவிட உரிமையுடன் ஒரு ஆண்டு உட்பட, மொத்தம் நான்கு ஆண்டுகள் உரிய விசாவுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதே ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான முக்கிய அளவுகோல் என்கிறார் குடிவரவு சட்டத்தரணி Eva Abdel-Messiah.

இந்த நிபந்தனைகளைத் தவிர ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்பதாரர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 'நல்ல நடத்தையை' வெளிப்படுத்த வேண்டும். இது நீடித்த ஒழுக்கப் பண்புகளாக வரையறுக்கப்படுகிறது.
கூடுதலாக ஆஸ்திரேலியாவில் வசித்தல், அடிப்படை ஆங்கில மொழியறிவைக் கொண்டிருத்தல், மற்றும் ஆஸ்திரேலியாவைப் பற்றியும், ஆஸ்திரேலிய குடிமகனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியம்.
இவை அனைத்தையும் நீங்கள் பூர்த்திசெய்கிறீர்களா என்பதை மதிப்பிடுவதற்கே குடியுரிமைப் பரீட்சை நடத்தப்படுகிறது.
நீங்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தால் மற்றும் குடியுரிமைப் பரீட்சையை எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதற்கு முன்கூட்டியே நன்கு தயாராக வேண்டும்.
ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சை 20 multiple-choice கேள்விகளைக் கொண்டுள்ளது.
இது ஆஸ்திரேலிய சின்னங்கள், வரலாற்று நிகழ்வுகள், அரச அமைப்பு மற்றும் குடியுரிமை தொடர்பான உரிமைகள் மற்றும் பொறுப்புகள் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது என குடிவரவு சட்டத்தரணி Eva Abdel-Messiah விளக்குகிறார்.

குடியுரிமை பரீட்சைக்குத் தயாராவதற்கு "Australian Citizenship: Our Common Bond" என்று அழைக்கப்படும் அதிகாரப்பூர்வ குடியுரிமை சோதனை ஆதார கையேட்டில் இருந்து கற்றுக்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளம் (homeaffairs.gov.au) பரிந்துரைக்கிறது.
இக்கையேடு 40 மொழிகளில் கிடைக்கிறது, மேலும் இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள podcast இணைப்பு மூலமும் இதன் உள்ளடக்கத்தைக் கேட்கலாம்.
சோதனைக்குத் தேவையான அனைத்து தகவல்களும் "Our Common Bond" கையேட்டில் உள்ளன. நீங்கள் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு அதை நினைவில்வைத்துக்கொள்ள ஏதுவாக குறிப்புகளை எடுக்க வேண்டும்.
குடியுரிமைப் பரீட்சையை உருவகப்படுத்தும் citizenship test practice -இலவச மாதிரி பரீட்சை வசதிகளை வழங்கும் பல இணையத்தளங்களின் ஊடாகவும் நீங்கள் பயிற்சிசெய்யலாம்.
கணினிகளில் இந்த இணையதள இணைப்புக்களுக்குச் செல்வதற்குப் பதிலாக தொலைபேசி செயலி மூலமாக இம்மாதிரிப் பரீட்சைகளை பயிற்சிசெய்யலாம் என்கிறார் Eva Abdel-Messiah.

அரசின் மூன்று பிரிவுகள், பெடரல் நாடாளுமன்ற அமைப்பு மற்றும் கவர்னர் ஜெனரலின் பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதும் முக்கியமானது என்று Eva Abdel-Messiah கூறுகிறார்.
குடியுரிமைச் சோதனையானது குறிப்பிடத்தக்க ஆஸ்திரேலிய நிகழ்வுகள், பூர்வீக குடிமக்கள் மற்றும் பல் கலாச்சார பின்னணிகொண்ட ஆஸ்திரேலியர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கிய கேள்விகளை உட்படுத்தியது.
இப்பரீட்சை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும். எனவே, நீங்கள் ஆங்கில மொழியை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்விகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில், நீங்கள் படித்துப் பயிற்சி செய்யலாம் மற்றும் அத்தியாவசிய சொற்களஞ்சியத்துடன் உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.
குடியுரிமைத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் அல்லது ஆபத்துக்களையும் Eva Abdel-Messiah பகிர்ந்து கொள்கிறார்.
குறிப்பாக கேள்விகளைக் கவனமாகப் படிப்பது, நேர வரம்புகளுக்குள் பரீட்சையை முடிப்பது மற்றும் பதிலைக் கிளிக் செய்ய அவசரப்படுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை அவர் பகிர்ந்துகொள்கிறார்.
குடியுரிமை விண்ணப்பத்தைத் தாக்கல்செய்யும் ஒருவர் அதிகபட்சமாக 3 தடவைகள் மாத்திரமே இப்பரீட்சையை முயற்சிக்க முடியும் எனவும், தவறும்பட்சத்தில் மீண்டும் ஆரம்பத்திலிருந்து புதிய குடியுரிமை விண்ணப்பத்தைத் தாக்கல்செய்துஇப்பரீட்சையை எதிர்கொள்ள வேண்டுமெனவும் Eva Abdel-Messiah சுட்டிக்காட்டுகிறார்.

உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள கற்றல் உதவிகளைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், பல உள்ளூர் சமூக அமைப்புகளில் ஒன்றை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, நியூ சவுத் வேல்ஸில் உள்ள Sydwest Multicultural Services மற்றும் விக்டோரியாவில் உள்ள Southern Migrant and Refugee Centre போன்றவை குடியுரிமை பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் வகுப்புகள் மற்றும் ஆதாரங்களை ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்குகின்றன.
இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டிருக்கின்றன, அவர்கள் உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க முடியும்.
குடியுரிமைப் பரீட்சைக்குத் தயாராகும் பல புதிய புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான பாடநெறி ஊடாக தாம் உதவுவதாக விளக்குகிறார் Sydwest Multicultural Services ஐச் சேர்ந்த Vikki Hine.
இப் பாடநெறி அனைத்து பின்னணியிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு கிடைக்கிறது.
Sydwest Multicultural Services 2014 இல் மேற்கு சிட்னியில் தனது முதல் குடியுரிமை வகுப்பை தொடங்கியது.
அப்போதிருந்து, நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் குடியுரிமைப் சோதனைகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றுள்ளனர் என்று Vikki Hine கூறுகிறார்.
தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மனப்பாடம் செய்வதைத் தாண்டி, ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை கற்றுக்கொள்வது தேசம் மற்றும் அதன் விழுமியங்கள் பற்றிய உங்கள் புரிதலை மேம்படுத்தும் என அவர் வலியுறுத்துகிறார்.y
READ MORE

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






