ஒருவர் வங்கிக்குச் சென்று வீடு வாங்க அல்லது வாகனம்வாங்க கடன் கேட்கும் போது அவருக்கு கடன்கொடுக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பதில்(Credit Score) என்ற ஒரு கணிப்பையும் வங்கிகள் பார்க்கின்றன. இந்த Credit Score என்றால் என்ன? இதை எப்படி குறைவடையாமல் பார்த்துக்கொள்வது என்பது தொடர்பில் விளக்குகிறார் திரு.யூசுப் அவர்கள்.
இந்த CREDIT SCORE என்றால் என்ன?
ஒருவருக்கு நான் கடன் கொடுப்பதாக இருந்தால் அவரால் அதை திருப்பி தரமுடியுமா, ஏற்கனவே வேறு யாரிடமும் கடன் வாங்கி இருக்கிறாரா, அதை ஒழுங்காக சொன்ன நேரத்தில் திருப்பி கொடுத்தாரா என்று தெரிந்து கொண்டால், அவர் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும்.
அதுபோலவே நான் வங்கிக்கு சென்று கடன் கேட்கும் போது என்னுடைய வருமானம், செலவு, நிதி நிலைமை விபரங்களை வங்கி அறிந்து கொள்ள விரும்புகிறது.
எனக்கு வேறு என்ன கடன்கள் இருக்கிறதா, என்னுடைய Bill-களை நான் ஒழுங்காக செலுத்துகிறேனா, என்மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றெல்லாம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அந்த தகவலை வைத்து நான் புதிதாக கேட்கும் கடனை ஒழுங்காக அடைப்பேனா என்று தீர்மானிக்கிறார்கள்.
என்னைப்பற்றிய அந்த கணிப்பு ஒரு எண் அல்லது RANK, SCORE என்றும் சொல்லலாம். அந்த எண் வங்கிகளுக்கு தெரிந்த பின், கடன் கொடுப்பதை பற்றி தீர்மானம் செய்கிறார்கள். அந்த எண்தான் CREDIT SCORE & CREDIT RATING என்பதாகும்.
இந்த CREDIT SCORE-ஐ யார் உபயோகிக்கிறார்கள்? எதற்காக உபயோகிக்கிறார்கள்?
முக்கியமாக இந்த CREDIT SCORE என்ற கணிப்பை வங்கிகளும், கடன் கொடுக்கும் நிறுவனங்களும் உபயோகிக்கின்றன.
இந்த கணிப்பு எண்ணின் மூலம் ஒருவரின் RISK FACTOR -அதாவது, ஒருவருக்கு கடன் கொடுத்தால் அந்த கடன் தொகை திரும்ப வராமல் போக வாய்ப்பு என்ன என்பதை கணக்கிடுகிறார்கள்.
ஒருவரின் CREDIT SCORE அதிகமாக இருந்தால், அவர் ஒழுங்காக கடனை திருப்பி கொடுக்கக் கூடும் என்றும், அவரின் CREDIT SCORE குறைவாக இருந்தால், அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போகலாம் என்றும் வங்கிகள் கணிப்பு செய்கின்றன.
CREDIT SCORE குறைவாக இருந்தால் அதன் பாதிப்பு என்ன?
நாம் கேட்கும் தொகையை விட குறைவாகத்தான் கடன் தருவோம் என்று சொல்லலாம்.ஒருவேளை மற்றவர்களைவிட வட்டி அதிகமாக இருக்கலாம்.கடனே மறுக்கவும் படலாம்.
ஒருவர் தன்னுடைய CREDIT SCORE -ஐ எப்படி தெரிந்து கொள்ள முடியும்?
ஆஸ்திரேலியாவில் CREDIT REPORTING AGENCIES Equifax.com.au, CheckYourCredit.com.au, Experian Credit Report, Tasmanian Collection Service என்று 4-5 நிறுவனங்கள் உள்ளன. Online ஊடாகவும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
CREDIT REPORT-இல் எந்த மாதிரியான தகவல்கள் இருக்கின்றன?
அதில் ஒருவர் எந்தெந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார், எந்தெந்த வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார், அதை எப்போது வைத்திருந்தார், எத்தனை CREDIT CARD-கள் உள்ளன. அதனுடைய வரம்பு என்ன, கடன்கள் எவ்வளவு உள்ளது, அதை எப்படி திருப்பி செலுத்துகிறார், எந்தெந்த Bill-களை ஒழுங்காக செலுத்தவில்லை, ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்று ஏராளமான தகவல்கள் அந்த CREDIT REPORT-இல் பார்க்கலாம்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நமக்கு கிடைக்கும் CREDIT REPORT-இல் ஏதாவது தவறுகள் இருந்தால், அதனால் நம்முடைய CREDIT SCORE குறைவாக்கப்பட்டிருந்தால், அதை சரி செய்யும்படி அந்த நிறுவனத்தை கேட்கலாம்.
இந்த CREDIT REPORT பெறுவதற்கு கட்டணம் எதுவும் இருக்கிறதா?
வருடத்துக்கு ஒருமுறை ஒருவர் இந்த CREDIT REPORT -ஐ இலவசமாக பெறலாம். அதில் தவறுகள் ஏதாவது இருந்தால் அதை இலவசமாக திருத்தி பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவர் கடனை திருப்பி செலுத்த தவறினால், அந்த தகவல் இந்த CREDIT REPORT-இல் இருக்கும். அப்படி அதை எவ்வளவு காலம் வைத்திருப்பார்கள்?
சாதாரணமாக அந்த மாதிரியான தகவல்களை இந்த நிறுவங்கள் 5 வருடங்கள் வைத்திருக்கின்றன. ஒருவேளை அந்த கடன் தொகை கொடுக்கப்பட்டு விட்டாலும், அந்த தகவலும் சேர்க்கப்படும். ஆனால் மொத்த தகவலும் 5 வருடத்துக்கு வைத்திருக்கப்படும்.
குறைவாக CREDIT SCORE இருக்கும் ஒருவர் அதை அதிகமாக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் செய்யும் பணப்பரிவர்த்தனை மூலம் அவருடைய CREDIT SCORE கூடலாம், குறையலாம்.
ஆனால் ஏற்கனவே குறைவாக உள்ள CREDIT SCORE-ஐ உடனடியாக மாற்ற முடியாது. காலப்போக்கில் அவருடைய பணப்புழக்கத்தில் அதை அதிகரிக்கலாம்.
பொதுவாக சொல்லப்போனால், சொன்ன நேரத்தில் கடனை திருப்பி கட்டுதல், சரியான நேரத்தில் Bill-களுக்கு பணம் கட்டுதல் போன்ற பழக்கம் நல்லபடியாக இருந்தால், அடுத்த தடவை ஒரு வங்கியில் கடன் கேட்டு போகும்போது கவலைப்படத் தேவையில்லை.





