Key Points
- ஓட்டுநர் உரிமங்கள் என்பவை ஆஸ்திரேலியாவில் மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான சட்டப்பூர்வ அனுமதிகளாகும்.
- ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு பெறுவது என்பதை அந்தந்த ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிராந்தியங்களும் தீர்மானிக்கின்றன
- ஒரு ஓட்டுநர் முழு உரிமம் பெறுவதற்கு முன், அவர்கள் பல மதிப்பீடுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
- புலம்பெயர்ந்தோர் தங்கள் சூழ்நிலையைப் பொறுத்து, குறுகிய செயல்முறையின் மூலம் தங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை ஆஸ்திரேலிய உரிமத்திற்கு மாற்ற தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
ஆஸ்திரேலியாவில், ஓட்டுநர் உரிமம் அதாவது லைசன்ஸ் பெறுவதற்கு முன்பு பல மதிப்பீடுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் அல்லது லைசன்ஸ் வைத்திருப்பதென்பது ஒருவர் தனது வாகனத்தை சட்டப்பூர்வமாக ஓட்டுவதற்குத் தேவையான அனைத்து படிகளையும் கடந்துவிட்டார் என்று அர்த்தப்படுத்துவதாக கூறுகிறார் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியான L Trent இன் Master Driving Trainer Frank Tumino.
ஆஸ்திரேலியாவில், லைசன்ஸ் பெறுவதற்கு பல நிலைகள் உள்ளன. மேலும், நீங்கள் ஓட்ட விரும்பும் வாகனத்தின் அளவு மற்றும் வகையைப் பொறுத்து வெவ்வேறு நடைமுறைகள் பொருந்தும்.

எடுத்துக்காட்டாக, கார் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறை, மோட்டார் சைக்கிள், பயணிகள் அல்லது கனரக வாகன உரிமங்களுக்கான நிபந்தனைகளிலிருந்து வேறுபட்டது.
இந்நிபந்தனைகள் மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையில் வேறுபடுகின்றபோதிலும் பெரும்பாலான அம்சங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன.
ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டுவதற்கான முதல்படி சாலை விதிகளைக் கற்றுக்கொள்வது எனவும் அதன் பின்னர் ‘Ls’ எனப்படும் கற்றல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான சோதனைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் சொல்கிறார் NSW Transport Road Safety Strategy and Policy இயக்குனர் Louise Higgins Whitton.

L உரிமம் என்பது கண்காணிப்பின்கீழ் வாகனம் ஓட்டுவதற்கு உங்களை அனுமதிக்கிறது.
வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கும் ஓட்டுநர்கள் தங்கள் வயதைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு L பிளேட்டிலேயே இருக்க வேண்டும்.
அவர்கள் தனியாக வாகனம் ஓட்டுவதற்கு முன், 'Ps' எனப்படும் ''Provisional'' அல்லது ''Probationary'' உரிமத்தைப் பெற,practical driving test இல் தேர்ச்சி பெற வேண்டும்.

இதேவேளை புலம்பெயர்ந்தோர் தங்கள் வெளிநாட்டு லைசன்ஸை ஆஸ்திரேலிய லைசன்ஸிற்கு மாற்றுவதற்கான நடைமுறை நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள், எவ்வளவு காலம் அந்த லைசன்ஸை வைத்திருந்தீர்கள் என்பதைத் பொறுத்து வேறுபடுகிறது.
குறிப்பாக லைசன்ஸ் வழங்கும் முறை மிகவும் வித்தியாசமாக காணப்படும் நாட்டிலிருந்து நீங்கள் வந்திருந்தால், நீங்கள் கூடுதல் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சில சந்தர்ப்பங்களில், நீங்கள் செல்லுபடியாகும் வெளிநாட்டு லைசன்ஸை வைத்திருந்தால், அதை முழுமையான ஆஸ்திரேலிய லைசன்ஸாக மாற்ற விரும்பினால், practical driving தேர்வில் தேர்ச்சி பெற உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கும். நீங்கள் தோல்வியுற்றால், உங்களுக்கு L லைசன்ஸ் வழங்கப்படும்.

மற்ற நாடுகளில் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டவர்கள் ஆஸ்திரேலிய practical driving சோதனைகளில் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி தேவைப்படலாம் எனகிறார் L Trent Master Driving Trainer Frank Tumino.
இதேவேளை P லைசன்ஸில் இருக்கும்போது வாகனம் ஓட்டுவதற்கு முன்பு நீங்கள் மது அருந்த முடியாது, மேலும் குறிப்பிட்ட வேகக் கட்டுப்பாடுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேநேரம் உங்கள் P லைசன்ஸை பெறுவதற்கு முன், சாத்தியமான ஆபத்துகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை நிரூபிக்க, hazards perceptions சோதனையிலும் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
நீங்கள் முழு உரிமம் பெற்ற ஓட்டுநராக இருக்கும் போது சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், நீங்கள் தொடர்ந்து அனைத்து சாலை விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
சாலை விதிகளை மீறுபவர்கள் பெரிய அபராதத்தை எதிர்கொள்வதுடன் லைசன்ஸ் இடைநீக்கம் அல்லது ரத்தும் செய்யப்படலாம்.

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பல சமூக மற்றும் குடியேற்ற சேவை நிறுவனங்கள், குறிப்பாக அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்காக வடிவமைக்கப்பட்ட இலவச அல்லது குறைந்த கட்டணத்துடனான ஓட்டுநர் பயிற்சித் திட்டங்களை வழங்குகின்றன.
இப்படியான நிறுவனங்களில் ஒன்று Great Lakes Agency for Peace and Development. கலாச்சார மற்றும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட பின்னணியில் இருந்து வரும் ஓட்டுநர்களுக்கான ஆதரவு திட்டத்தை தாம் செயற்படுத்திவருவதாக கூறுகிறார் இதன் நிர்வாக மேலாளர் Emmanuel Musoni.
இந்த திட்டத்தால் பயனடைந்த தாய்மார்களில் Micheline Nyantabaraவும் ஒருவர்.
தனது சொந்த நாடான கொங்கோவில் தான் ஒருபோதும் வாகனம் ஓட்டியதில்லை என்றும், வாகனம் ஓட்ட தான் மிகவும் பயந்ததாகவும், தனது மொழிப் பின்னணிகொண்ட பயிற்றுவிப்பாளரின் உதவியே தனது வெற்றிக்குக் காரணம் எனவும் Nyantabara கூறுகிறார்.
ஆஸ்திரேலிய ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டமையானது தனது வாழ்க்கையையும் தனது மகனின் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது எனக்கூறும் Nyantabara, தன்னைப்போலவே ஏனைய வெவ்வேறு மொழிப்பின்னணி கொண்ட தாய்மாரும் தயக்கமின்றி வாகனம் ஓட்டக்கற்றுக்கொள்ளுமாறும், அதன் பலன்கள் மிகுதியானவை எனவும் ஊக்குவிக்கிறார்.
How to get licensed:
- New South Wales
- Victoria
- Queensland
- Western Australia
- South Australia
- Northern Territory
- Australian Capital Territory
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





